வியாழன், 30 ஏப்ரல், 2015

(2) மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா?
----------------------------------------------------------------------------------------
தொடர் கட்டுரை-2; மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்களான மார்க்ஸ், எங்கல்ஸ்,
லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படைப்புகள் 
மலையளவு உள்ளவை.உலகில் வேறு எந்தத் தத்துவத்துக்கும் 
இந்த அளவு விளக்க நூல்கள் கிடையாது. மூல ஆசான்களின் முக்கியமான படைப்புகள் பலவும் உலகின் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப் பட்டு உள்ளன. மூல ஆசான்கள் 
ஒவ்வொருவரின்படைப்புகளும் தொகுப்பு நூல்கள் 
( COLLECTED WORKS) என்றும், தேர்வு நூல்கள் ( SELECTED  
WORKS ) என்றும் வகைவகையாகப் பிரசுரிக்கப் பட்டு உள்ளன. 
இவை தவிர, பிரசுரிக்கப் படாத ஆவணங்களும் ( UNPUBLISHED DOCUMENTS ) ஆவணக் காப்பகங்களில்
பாதுகாக்கப் பட்டு மக்களின் பார்வைக்குக் கிடைக்கின்றன.

என்றாலும், மலையாகக் குவிந்து கிடக்கும் இந்த நூல்களில்,
சாதியைப் பற்றி (ON CASTE ) குறிப்பிடப் படவில்லை. 

அ) சாதியின் தோற்றம் எது, அகமண முறையா, வேலைப் 
பிரிவினையா? 
ஆ) மார்க்சிய நோக்கில், சாதி என்பது அடித்தளமா, 
மேற்கட்டுமானமா?
இ) சாதி வர்க்கத்தில் உள்ளடங்கியதா, அல்லது தனித்த ஒரு 
மூலமா? (Is caste a seperate entity?) 
இன்ன பிற கேள்விகளுக்கு மார்க்சிய மூல ஆசான்களின் 
நூல்களில் விடை இல்லை.

"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்பது
எங்கல்சின் புகழ் பெற்ற நூல். ( THE ORIGIN OR FAMILY, PRIVATE
PROPERTY AND STATE BY FREDERICK ENGELS ). மகத்தான
சமூகவியல் ஆய்வு நூல். இந்த மகத்தான நூலை  எழுதிய
எங்கல்ஸ், சாதியின் தோற்றம் (  ORIGIN OF CASTE ) என்று
ஏதேனும் ஒரு நூலை எழுதி இருக்கிறாரா? இல்லையே!

ஆஸ்திரேலியப் பழங்குடிகள், ஐரோப்பியப் பழங்குடிகள்,
அவர்களின் சமூகப் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவை
குறித்து விரிவாக ஆராய்ந்து சமூகவியல் நூல்களைப் படைத்த
எங்கல்ஸ், இந்தியா பக்கம் கீழ்த்திசை நாடுகளின் பக்கம்
தம் பார்வையைத் திருப்பி இருக்கிறாரா என்றால், இல்லை 
என்பது தெளிவு.

என்றாலும், இவை மார்க்ஸ் எங்கல்சின் குறைகள் அல்ல.
வேண்டுமென்றே திட்டமிட்டே இந்த மூல ஆசான்கள்
இந்தியாவை, கீழ்த்திசை நாடுகளைப் புறக்கணித்தனர் என்று
எவரேனும் கூறினால், அது அபத்தத்தின் உச்சம்.

மார்க்சும் எங்கல்சும் மனிதர்கள்; மாமனிதர்கள். கடவுள்கள் 
அல்ல; மந்திரவாதிகள் அல்ல. மந்திரக் கம்பளத்தில் பறந்து 
உலகெங்கும் சுற்றித் திரிந்து, மொழிகளைக் கற்று, 
நூல்களைக் கற்று,  ஆராய்ச்சி செய்து, மனித குலத்தின் 
அனைத்துச் சிக்கல்களுக்கும் அவர்கள் தீர்வு வழங்கி 
இருக்க வேண்டும் என்பது இயலாத ஒன்று. ஏனெனில் அது 
தனிமனித ஆற்றலின் குறுகிய எல்லைக்குள் அடங்கி 
விடக்கூடியது அல்ல.

மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில்
பிறந்த தத்துவம். மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும், பிரதானமாக,
ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கே உள்ள
கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

புத்த மத நூல்கள் பற்றியோ புத்தரின் தத்துவங்கள் பற்றியோ
மார்க்சும் எங்கல்சும் அறிந்து இருக்கவில்லை. கீழ்த்திசை 
நாடுகளின் அறிவுச் செல்வங்கள் ( TREASURE HOUSE OF 
KNOWLEDGE ) பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. 
கிரேக்கத்தின் தொன்மையான அறிவுச் செல்வங்கள் பற்றி 
அறிந்து, அவற்றில் ஆழ்ந்த புலமை பெற்ற அவர்கள் 
இருவருக்கும், கிரேக்கத்தையும் விடத் தொன்மையான 
கீழ்த்திசை உலகின் தத்துவ ஞானம் மற்றும் மரபு
பற்றி எதுவும் தெரியாது.

லூத்விக் ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய அறிஞரின்
பொருள்முதல்வாதத்தை மேம்படுத்தி, அதையே மார்க்சியத்தின் பொருள்முதல்வாதமாக ஆக்கிக் கொண்ட மார்க்சும் எங்கல்சும்
இந்தியாவின் பொருள்முதல்வாத ஞானம் பற்றி
அறிந்து இருக்கவில்லை.
          
ஃ பாயர்பாக்கின் பொருள் முதல்வாதத்தைவிடச் சிறந்த,
தொன்மையான, மூலச்சிறப்புள்ள இந்தியப் பொருள்முதல்வாதம்
பற்றியோ, இந்தியத் தத்துவஞான மரபே பொருள்முதல்வாத
மரபுதான் என்பது பற்றியோ மார்க்சும் எங்கல்சும் அறிந்து
இருக்கவில்லை.    

எனவே, மார்க்சியம் என்பது சாராம்சத்தில், ஐரோப்பியத்
தத்துவமே. அது கீழ்த்திசைத் தத்துவம் அல்ல.
எனவே இந்தியத் துணைக் கண்டத்துக்கே உரித்தான,
சாதி, சாதியம், தீண்டாமை, சாதியப் படிநிலை அமைப்பு,
சாத்திய சடங்காசாரங்கள்   ஆகிய சிக்கல்கள் குறித்து
மார்க்சியத்தில் பேசப்படவில்லை.

எனினும் இதனால் மார்க்சியம்  எவ்விதத்திலும் பங்கம் 
அடைந்து விடவில்லை. ஏனெனில் மார்க்சியம் என்பது 
இயற்கணிதச் சூத்திரம் அல்ல. ஓர் ஈருறுப்புக் கோவையை 
விரிவுபடுத்த பைனாமியல் தேற்றத்தைப் பயன்படுத்துவது 
போல அல்ல மார்க்சியத்தைப் பிரயோகிப்பது. மூல ஆசான்கள் 
கூறியபடி, மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல, அது 
செயலுக்கான வழிகாட்டி. மேலும் பருண்மையான 
நிலைமைகளுக்கு ஏற்ப, பருண்மையாகப் பிரயோகிக்கப்
படுவதுதான் மார்க்சியம்.

எனவே, மார்க்சியத்தைக் கற்றும் புரிந்து கொண்டும் 
இந்திய நாட்டின் தனித்துவமான சாதியை எதிர்கொள்ள 
வேண்டியது இந்திய மார்க்சியர்களின் கடமை ஆகிறது.
------------------------------------------------------------------------------------------------------    
தொடரும் 


**************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக