புதன், 1 ஏப்ரல், 2015

ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே 
இந்த வையம் முழுவதும் துண்டு செய்வேன்!!
வீரமணி--பாண்டே விவாதம் பற்றி....
------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதைப் போல்,
வீரமணி-பாண்டே நேர்காணல் பற்றிய விவாத நெருப்பு 
இன்னும் அணையவில்லை. சினிமா மோகம் தலைக்கேறி,
கூத்தாடிகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வரிந்து 
கட்டிக்கொண்டு வாதிட்டு நாசமாய்ப்போன  தமிழ்ச்  சமூகம் 
இன்று, பெரியாரியத்தை விவாதிக்க முன்வந்து இருப்பது
ஒரு ஆரோக்கியமான அறிகுறி.
**
சமூக வலைத்தளங்கள் முகநூல்களையும் தாண்டி,
பொது வெளிக்கு இந்த விவாதத்தை இழுத்து வர வேண்டும்.
ஒவ்வொரு தெரு முனையிலும், ஒவ்வொரு தேநீர்க் 
கடையிலும் இது விவாதிக்கப் பட வேண்டும்.
**
சமகாலத் தமிழ்ச் சூழலில் தத்துவார்த்த விவாதங்கள் 
அரிதாகவே உள்ளன. 1970வரை பெரியாரியத் தத்துவங்கள் 
பெரியார்-அண்ணா-கலைஞரால் முன்னெடுக்கப் பட்டு,
தத்துவ அரங்கில் வாகை சூடி நின்றன. பின்னர் 
வசந்தத்தின் இடிமுழக்கமாக  நக்சல்பாரி ஆயுத எழுச்சி 
வெடித்தபோது, மார்க்சியத் தத்துவ விவாதங்கள் 
பேரளவில் நடந்தன. நக்சல்பாரி இயக்கத்தின் பின்னடைவைத் 
தொடர்ந்து முளைத்த பின்நவீனத்துவம் தமிழ்ச் சமூகத்தில் 
விவாதிக்கப் படவே இல்லை என்று கூறலாம். ஏனெனில்,
இந்த விவாதம் ஒரு சில பின்நவீனத்துவ அறிஞர்களின் 
தேநீர்க் கோப்பைகளைத் தாண்டவில்லை.
**
ஆக, இந்த மில்லேனியம் பிறந்த பின், தத்துவ விவாதம் 
என்பது ரிப் வான் விங்கிளைப் போல, நெடிதுயிலில் 
வீழ்ந்தது.தற்போது, பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததைத் 
தொடர்ந்து, தத்துவார்த்த விவாதங்கள் (THEORETICAL 
DISCUSSIONS) தேக்கத்தை உடைத்துக் கொண்டு, முன்னேறி 
வருகின்றன. இவை வரவேற்கத் தக்கவை.
**
எனினும், இந்த விஷயத்தில், PROACTIVEஆக இருந்ததும் 
இருப்பதும் ஆர்.எஸ்.எஸ். முகாமே. மார்க்சிய,
பெரியாரிய, அம்பேத்கரிய இடதுசாரி சக்திகள்
தாமாக முன்வந்து இந்த விவாதப் போரைத் 
தொடங்கவில்லை. எதிர் முகாம் வலுச்சண்டைக்கு 
இழுத்ததால் இவர்கள் வேறு வழியின்றி, உறையில்
இருந்து உடைவாட்களை உருவுகின்றனர்.
**
ஆசிரியர்-பாண்டே விவாதம் மேற்கூறியவற்றின் 
ஒரு வெளிப்பாடே! 
**
ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே -இந்த 
வையம் முழுவதும் துண்டு செய்வேன்.
---புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
**********************************************************888         

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக