புதன், 9 டிசம்பர், 2015

சென்னையின் அழிவுக்குக் காரணம் என்ன?
உண்மையான காரணத்தை அறிவோம்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல்  மன்றம்
-------------------------------------------------------------------------------
1) பூமி சூடேறி வருவதால், அதாவது புவி வெப்பம் அடைதல்
என்னும் GLOBAL WARMING காரணமாக அதிக மழை பெய்து
விட்டது. இதுவே சென்னையின் அழிவுக்குக் காரணம்
என்கின்றனர் சிலர்.

2) 2015 நவம்பர்-டிசம்பர் மழையானது புவி வெப்பம் அடைதல்
காரணமாகத்தான் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படாத ஒன்று.
இன்னொன்று, புவி வெப்பம் அடைதல் என்பது global phenomenon.
இதை A என்க. சென்னையில் மழை என்பது local phenomenon.
இதை B என்க. A தான் Bக்கு காரணம் என்றால் அது நிரூபிக்கப்
பட்டிருக்க வேண்டும். அப்படியே அதுதான் காரணம் என்றால்
எந்த அளவுக்கு அது காரணம் என்பதைக் கூற வேண்டும்.

3) ஆனால் சென்னையின் அழிவுக்கு புவி வெப்பம் அடைதல் மீது
பழி போடுபவர்களால் மேற்கூறிய கேள்விகள் எதற்கும் விடை
அளிக்க முடியவில்லை. முடியாதுதான்.  தெரிந்தால் அல்லவா
விடையளிக்க இயலும்!

4) வேறு சிலரோ பசிபிக் மகா சமுத்திரத்தில் இருந்து எல் நினோ
என்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து இதுதான் காரணம்
என்கிறார்கள். சென்னையின் மழைக்கு இந்த எல் நினோதான்
காரணம் என்று இணையதளங்களில் ஆய்வுக் கட்டுரை(!)
வெளியிடுகிறார்கள்.

5) எல் நினோ என்பது ஒரு ஸ்பானிய மொழிச் சொல். இதற்குக்
குட்டிப் பையன் என்று பொருள். பசிபிக் மகாசமுத்திரத்தின்
மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாறுபாடு வானிலையில் சில
மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதே எல் நினோ நிகழ்வு.

6) பசிபிக் மகாசமுத்திரம் மட்டுமல்ல, எங்கெல்லாம்
சமுத்திரங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இத்தகைய
(எல் நினோ போன்ற) வானிலை நிகழ்வுகள் ஏற்படும்.
உதாரணமாக, அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில், NAO என்ற
நிகழ்வு ஏற்படும். (NAO = North Atlantic Oscillation). நமது இந்து
மகாசமுத்திரத்தில்,  IOD என்ற நிகழ்வு ஏற்படுகிறது.
(IOD = Indian Ocean Dipole)    

7) சென்னையின் மழை, வெள்ளம், அழிவு ஆகியவற்றுக்கு
புவி வெப்பமடைதலோ எல் நிநோவோ காரணம் அல்ல.
இதுதான் காரணம் என்று கூறுவது பொத்தாம்பொதுவாகக்
கூறுவதாகும். (too general a statement). தாங்கள் சொன்ன
கருத்துக்குப் பொறுப்பேற்க முடியாத கோழைகளே
இவ்வாறு கூறிவிட்டுச் செல்ல முடியும்.

8) நாம் தற்போது ஒரு பின்நவீனத்துவ உலகில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறோம். இது அதீத தனிமனித வாதத்தையும்
அதீத கருத்து சுதந்திரத்தையும் கோருகிறது. தனிமனிதவாதம்
மேலோங்கும்போது, சமூகப் பொறுப்பு (social commitment) என்பது
 குறைந்து விடுகிறது. பின் நவீனத்துவம் தரும் கருத்து
சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள், எத்தகைய சமூகப்
பொறுப்பும் இன்றி, சமூகத்துக்குப் பதில் சொல்லும்
கடமையையும் உதறித் தள்ளிவிட்டு அபத்தமாக எழுதித்
தள்ளுகிறார்கள்.

9) உலகில் கழிப்பறை தோன்றியதில் இருந்தே கழிப்பறைச்
சுவர்களில் எழுதுதலும் தொடங்கி விட்டது. இது குறித்துக்
கவலைப் பட்டுக் கட்டுப்படி ஆகுமா? அவ்வப்போது சுவருக்கு
வெள்ளையடிப்பதே போதுமானது. எனவே சென்னையின்
அழிவுக்குக் காரணம் Global warming என்றும் எல் நினோ
என்றும் வெளிவரும் உளறல்களைப் புறக்கணிப்போம்.

10) புவி வெப்பம் அடைந்து வருகிறது என்பது உண்மையே.
இது குறித்து நியூட்டன் அறிவியல் மன்றம் சில கட்டுரைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதற்காக 350 இயக்கம் என்ற
பெயரில் ஓர் இயக்கத்தையும் அது ஆரம்பித்துள்ளது. இது
வாசகர்கள் அறிந்ததே.

10) அப்படியானால், சென்னையின் அழிவுக்கான உண்மையான
காரணம்தான் என்ன? நள்ளிரவில் ஊர் உறங்கும் வேளையில்,
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 50000 கனஅடி
நீரைத் திறந்து விட்டதுதான் காரணம். இரவு உறங்கப் போகும் முன்பு
தெருவில் ஓரடி தண்ணீர் தேங்கி நின்றது. விடிந்ததும்
பார்த்தால், தரைத்தளம் மூழ்கி முதல்மாடி வரை தண்ணீர்
வெள்ளமாகச் சூழ்ந்து கொண்டது.தப்பிக்க வழியில்லாமல்
போனது மக்களுக்கு.

11) எத்தகைய முன்னெச்சரிக்கையும் வழங்காமல்,
தான்தோன்றித் தனமாக ஏரிநீரைத் திறந்து விட்டதே
நிகழ்ந்த பேரழிவுக்குக் காரணம். தினமும் 3000 கன அடி
என்ற அளவில் controlled flow மேற்கொள்ளப் பட்டு இருந்தால்
இந்த அழிவு ஏற்பட்டே இருக்காது.
*****************************************************************


            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக