வெள்ளி, 25 டிசம்பர், 2015

நவீன அறிவியலின் தந்தை நியூட்டன் பிறந்தார்!
டிசம்பர் 25, 1642
இன்று 373ஆவது பிறந்த நாள்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
இங்கிலாந்து நாட்டில் பிறந்த இயற்பியல் மற்றும் கணித
அறிஞரான சர்  ஐசக் நியூட்டன் நவீன அறிவியலின் தந்தை
என்று போற்றப் படுகிறார். இன்றைக்கு 373 ஆண்டுகளுக்கு
முன்பு, 1642இல் டிசம்பர் 25 அன்று பிறந்த நியூட்டனின்
கோட்பாடுகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

ஜூலியஸ் சீசரின் பெயரால் வழங்கப் படும் ஜூலியன்
காலண்டர் எனப்படும் காலக் கணித முறையே நியூட்டன்
காலத்தில் இங்கிலாந்தில் பின்பற்றப் பட்டது. டிசம்பர் 25இல்
நியூட்டன் பிறந்தார் என்பது ஜூலியன் காலண்டர்
அடிப்படையில் அமைந்தது. இது பழைய பாணி (Old Style)
நாட்குறிப்பு முறை என வழங்கப் படுகிறது.

தற்போது உலகெங்கும் பின்பற்றப்பட்டு வரும் காலக்
கணக்கு முறை "கிரகோரி காலண்டர்" முறை ஆகும்.
இது அக்டோபர் 15, 1582 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
போப்பாண்டவர் பதின்மூன்றாம் கிரகோரி (Pope Gregory XIII)
காலத்தில் இது அறிமுகப் படுத்தப் பட்டது. இது புதிய பாணி
நாட்குறிப்பு முறை (New Style) எனப்படுகிறது.

கிரகோரி காலண்டர் முறைப்படி, நியூட்டனின் பிறந்தநாள்
ஜனவரி 4, 1643 ஆகும். நியூட்டன் 84 ஆண்டுகள் வாழ்ந்து
மார்ச் 20, 1726இல் மறைந்தார். கிரகோரி காலண்டரின்படி,
நியூட்டனின் மறைவு 31 மார்ச் 1727 அன்று நிகழ்ந்தது.    

நியூட்டன் பரிசோதனை இயற்பியலாளர் (experimental physicist)
மட்டுமின்றி கோட்பாட்டு இயற்பியலாளரும் (theoretical physicist)
ஆவார். மேலும் நியூட்டன் ஒரு மகத்தான கணித அறிஞரும்
ஆவார். கால்குலசை முதன்முதலில் கண்டு பிடித்தவர்
நியூட்டனே. பின்னரே, ஜெர்மன் அறிஞர் காரல் லீபிநிட்ஸ்
கால்குலசைக் கண்டு பிடித்தார். இருவரும் ஒருவரை
ஒருவர் சாராமல் சொந்த முறையில் கால்குலசைக்
கண்டுபிடித்தனர். முதலில் கண்டுபிடித்த நியூட்டன்
தாமதமாகப் பிரசுரித்தார். பின்னர் கண்டுபிடித்த
லீபிநிட்ஸ் முன்னரே பிரசுரித்தார்.

நியூட்டனின் இயக்க விதிகள் (laws of motion), ஈர்ப்புவிசைக்
கோட்பாடு ஆகியவை இன்று உலகில் ஒவ்வொரு
பள்ளி மாணவனாலும் படிக்கப் படுகின்றன. எனவே,
மறைந்த பின்னும் நியூட்டன் வாழ்கிறார். என்றென்றும்
வாழ்வார்.

பின்வரும் எளிய இயற்பியல் கணக்கைச் செய்து,
நியூட்டன் அறிவியல் மன்றத்துடன் இணைந்து,
நியூட்டனுக்கு அஞ்சலி  செலுத்த முன்வருக!

2 கி.கி நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் ஒரு
விசையால், அப்பொருள் 1 மீ/second squared என்ற
முடுக்கத்தைப் பெறுகிறது என்றால் அதே விசையானது
10 கி.கி நிறையுள்ள பொருளின்மீது ஏற்படுத்தும்
முடுக்கம் என்ன?

 A certain force gives a 2 kg object an acceleration  of 1 meter per second squared.
What acceleration would the same force give a 10 kg object?

இது மிகவும் எளிய மனக்கணக்கு. பள்ளி மாணவனால்
செய்ய இயலும்.
******************************************************************


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக