திமுகவும் அதிமுகவும் சமமா?
மகஇக தலைவர் மருதய்யன் சூடு!
---------------------------------------------------------------
சென்னை மாநகரத்தில் இருப்பவர்கள். பீச் தாம்பரம் மின்சார ரயிலில் பயணம்
செய்யும் போது பேச்சு கொடுத்துப் பாருங்கள். “இவ்ளோ வெள்ளம் வந்திருக்குதே,
அம்மா கவனிக்கலையே, கொடநாட்டுல போயி உட்கார்ந்துகிட்டாங்க”
அப்படினு பேச்சை ஆரம்பிங்க. “என்ன சார் செய்ய முடியும்?
மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூணு நாள்ல பெஞ்சிருச்சே” என்று
ஜெயலலிதாவின் வசனத்தைப் பேசுவார்கள். அதை மறுத்து உரிய
ஆதாரங்களை அடுக்கத் தொடங்கினால், ஒரு ஸ்டெப் தாண்டுவார்கள்.
“ஆமாமா ஒண்ணும் சரியில்லை சார். தி.மு.க.காரன் காலத்திலேயே
இது ஆரம்பமாயிடுச்சி” என்று தி.மு.க ஆட்சிகால முறைகேடுகள்
சிலவற்றை சொல்வார்கள். “நீங்கள் சொல்வது போல் அல்ல” என்று
வாதாடினால், “எவன் சார் யோக்கியன்? இந்த காலத்தில யாரை நம்ப
முடியுது? எல்லாம் திருட்டுப்பயலுக” என்று சொல்லி தங்களது
உரையை முடித்துக் கொள்வார்கள்..
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் வேறுபாடு இல்லையா?
இல்லையென்றுதான் பலரும் பேசுகிறார்கள்.
இப்போ தாத்ரி கொலை நடந்திருக்கிறது. கல்புர்கி கொலை நடந்திருக்கிறது.
பன்சாரே கொலை நடந்திருக்கிறது. அடுக்கடுக்காக, அறிவுத்துறையினர்
மீது தாக்குதல் நடக்கிறது. இதை பற்றிய அ.தி.மு.க.வின் கருத்தென்ன
என்று யாராவது கேட்டதுண்டா? எந்த ஊடகமாவது ஏன் கருத்து
சொல்லவில்லை என்று அவர்களை மடக்கியதுண்டா?
அப்படி கருத்து சொல்லாமலிருப்பதே பி.ஜே.பி. ஆதரவு நிலைப்பாடு
என்று யாருக்கும் புரிவதில்லையா? நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றதற்கு
அம்மா வாழ்த்து தெரிவிக்கவில்லை, ஏன் தெரிவிக்கவில்லை?
அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த அர்த்தத்தை யாரும்
கேள்விக்குள்ளாக்காமலேயே
தி.மு.க.வும்., அ.தி.மு.க.வும் சமம் என்று பேசுகிறார்கள்.
பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. கருவறை நுழைவு,
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கை இருக்கிறது.
தமிழ்பாடும் கோரிக்கை இருக்கிறது. சுயமரியாதைத் திருமணம்
தொடர்பான கோரிக்கை இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை
எடுத்துக்கொண்டு நான் கோபாலபுரம் போகட்டுமா?
போயஸ் தோட்டம் போகட்டுமா?
போயஸ் தோட்டம் என்ன செய்தது? தில்லைக்கோயிலை தீட்சிதர் வசம்
திரும்ப பிடுங்கி ஒப்படைத்தது. தி.மு.க. எவ்வளவு ஊசலாடும்
கட்சியாக இருந்தாலும் தமிழ்பாடும் போராட்டம் நடத்தி
ஒரு எல்லைக்கு வந்தபிறகு, தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்டுகின்ற
ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறது. அந்தக்கோயிலை மேற்கொள்கிற
நடவடிக்கையை அது மேற்கொள்கிறது. ஜெயலலிதா அரசு அதைப்
பிடுங்கி தீட்சிதர்கள் வசம் வழங்கியது. இதில் வேறுபாடே இல்லையா?
பார்ப்பன பாசிசத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிராக எவ்வளவு
பலவீனமாக இருந்தாலும் – பேசுகின்ற கட்சிக்கும் அதிமுகவுக்கும்
வேறுபாடு இல்லையென்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்?
யார் கலப்பு மணத்தை எதிர்க்கிறார்களோ, யார் தமிழை எதிர்க்கிறார்களோ,
யார் சாதிப் பாகுபாட்டை பராமரிக்க விரும்புகிறார்களோ
அவர்கள்தான் வேறுபாடு இல்லையென்று சொல்ல முடியும்.
அவர்கள் நிச்சயமாக முகமூடியணிந்த அ.தி.மு.க. ஆதரவாளர்கள்.
முகமூடி அணிந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: வினவு இணையதளம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக