திங்கள், 14 டிசம்பர், 2015

சுற்றுச் சூழல் இஞ்சினியரிங் படிப்பின் முன்னோடி
டாக்டர் அப்துல் கலாம்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
2007 ஜூலை-ஆகஸ்டில் அண்ணா பல்கலையில் வருகைதரு
பேராசிரியராகப் பணியில் சேர்கிறார் டாக்டர் அப்துல் கலாம்.
அப்போது குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து அவர் ஒய்வு
பெற்ற காலம். (அண்ணா பல்கலை உட்பட வேறு பல
பல்கலைகளிலும் அவர் வருகைதரு பேராசிரியராகப்
பணிபுரிகிறார்.)

பேராசிரியர் பணியேற்றதும் பி.இ., பி.டெக் படிப்புகளின்
பாடத்திட்டத்தைப் படித்துப் பார்த்த டாக்டர் கலாம்
அப்பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் எஞ்சினியரிங் பற்றிய
(Environmental Engineering) பாடம் இல்லை என்று கண்டு
அதிர்ச்சி அடைகிறார். உடனடியாக அனைத்து பி.இ மற்றும்
பி.டெக் பாடத்திட்டத்தில் (syllabus) சுற்றுச்சூழல் எஞ்சினியரிங்
பாடங்களைச் சேர்க்க ஆணையிடுகிறார்.

பொதுவாக பாடத்திட்டத்தில் புதிய பாடங்களைச் சேர்க்கும்போது,
நாலாண்டுப் படிப்பான பி.இ,, பி.டெக் படிப்பில், முதலாண்டில்
புதிதாகச் சேரும் மாணவர்களின் பாடத்திட்டத்தில்தான்
புதிய பாடங்கள் சேர்க்கப் படும். ஏற்கனவே பி.இ., பி.டெக்
படிப்பில் சேர்ந்து 2,3,4 ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களின்
பாடத்திட்டத்தில் சேர்ப்பது இல்லை.  பாடத்திட்டத்தில்
புதிய பாடங்களைச் சேர்க்கும்போது கடைப்பிடிக்கப்படும்
பாரம்பரியமான நடைமுறை இதுவே.

ஆனால், டாக்டர் கலாம் அவர்கள் 2,3,4 ஆண்டுகளில்
படிக்கும் மாணவர்களுக்கும் இந்தப் புதிய பாடத்தை அவர்களின்
பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவ்வாறே அந்த ஆண்டில் 7ஆவது செமெஸ்டரில்
பயிலும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும்
சுற்றுச்சூழல் எஞ்சினியரிங் பாடம் சேர்க்கப் பட்டது.
இப்பாடம் மட்டும் ஒரு தாளாக அமைந்தது (one paper).

பாடத்திட்டத்தில் ஒரு புதிய சுமை என்று எந்த மாணவர்களும்
அதை எதிர்க்கவில்லை. பேராசிரியர்களும் கற்பித்தலில்
கூடுதல் சுமை என்று எதிர்க்கவில்லை. சுற்றுச்சூழல்
பற்றிப் பயிலாமல் வெறுமனே எஞ்சிநியரிங் பட்டதாரிகளாக வெளிவருவது  தகாது என்ற டாக்டர் அப்துல் கலாமின்
ஆலோசனையை மாணவர்களும் பேராசிரியர்களும்
ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இன்று பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் சுற்றுச்சூழல்
எஞ்சினியரிங் ஒரு பாடமாக இருக்கிறது என்றால் அதற்கு
முழுமுதல் காரணமாக இருந்தவர் டாக்டர் கலாம்
அவர்களே.

சிந்தித்துப் பாருங்கள். பி.இ., பி.டெக் படிப்புகளுக்குப் பதிலாக,
பிளஸ்டூ மற்றும் பி.எஸ்.சி பாடத்திட்டத்திலும் சுற்றுச்சூழல்
அறிவியல் (Environmental Science) பற்றிய பாடங்களைச் சேர்க்க
வேண்டும் என்று டாக்டர் கலாம் கூறியிருந்தால் எவ்வளவு
எதிர்ப்புக் கிளம்பி இருந்திருக்கும்! குட்டிச்சுவர்க் கழுதைகள்
எத்தனை பொதுநல(!) வழக்குகளைத் தொடர்ந்து இருக்கும்?
சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்(!), பிரின்ஸ் கஜேந்திர
பாபுக்கள் என்று எவ்வளவு பேர் தொலைக்காட்சி
விவாதங்களில் தோன்றி, கிராமப்புற மாணவர்களுக்கு
இந்தப் புதிய பாடச்சுமை தாங்க முடியாத ஒன்று
என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடித்து இருப்பார்கள்.

இதையெல்லாம் நன்கு அறிந்து இருந்த டாக்டர் கலாம்
அவர்கள் பி.இ., பி.டெக் படிப்புகளோடு தம் ஆலோசனையை
நிறுத்திக் கொண்டார். ஏனெனில் அவர் வள்ளுவரின் பின்வரும்
குறளை நன்கறிந்தவர்.

நன்றாற்றல் உள்ளும் தவறுண்(டு) அவரவர்
பண்பறிந்(து) ஆற்றாக் கடை.  
********************************************************************
            
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக