வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியாரை விமர்சித்து திரு ஜெயமோகன் முன்பே எழுதிய
ஒரு கட்டுரை, தற்போது பெரியாரின் நினைவுநாளை ஒட்டி
மீண்டும் சமூக வலைத் தளங்களில் வலம் வருகிறது.
தங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகள் அதற்கு
வலுவான மறுப்பு எழுதுவீர்கள் என்பது எங்களின்
எதிர்பார்ப்பு. ஆனால் தாங்கள் அந்த நியாயமான
எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது குறித்துத் துளியும்
அக்கறைப் படவில்லை என்பது துரதிருஷ்ட வசமானது.
**
எங்களைப் போன்றவர்கள் பெரியார் செயல்பட்ட
காலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே பெரியாரை நாங்கள்
நேரடியாக அறிவோம். பெரியாரின் செயல்களால்
எங்கள் தலைமுறை பயன் அடைந்தது. எனவே நாங்கள்
பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டவர்கள்.
**
ஆனால், பெரியாரை அறியாத தலைமுறை இன்று
வந்துவிட்டது. அவர்களிடம் ஜெயமோகனின் கட்டுரைகள்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜெயமோகனின்
கருத்துப் பிடியில் இருந்து, இளைய தலைமுறையை
மீட்க, தங்களைப் போன்ற எழுத்துலக ஆளுமைகள்
பங்களிக்க வேண்டும்.
**
ஆனால், அய்யா,  ஜெயமோகனைக் குறித்து எழுத
நேர்கிற போதெல்லாம், தங்களிடம் இருந்து கருத்தியல்
ரீதியிலான மறுப்புகளுக்குப் பதிலாக வெறும் வசவுகளே
வெளிப் படுகின்றன. வசவுகள்! வசவுகள்!! வசவுகள்!!!
**
எனவே "இலக்கியச் சிம்பு" என்ற பட்டம் தங்களுக்குத்தான் 
பொருத்தமாக அமைகிறது என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.     
**
ஜெயமோகனுக்கு மறுப்புத் தருகிற, சிறந்த இலக்கிய
ஆளுமைகளைத் தேடி நான் அலைகிறேன். ஜெயமோகன்
ஆயுதபாணியாக இருக்கிறார். என்னைப் போன்ற
எளியவர்கள் நிராயுத பாணியாக இருக்கிறோம்.
தாங்கள் ஆயுதம் தருவீர்கள் என்று எதிர்பார்த்து
தொடர்ந்து ஏமாற்றம் அடைகிறோம்.
**
காரித் துப்புவதற்கும் திட்டுவதற்கும் என்னைப்
போன்ற பாமரர்கள் போதுமே அய்யா! அதற்கு
தங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகள் எதற்கு? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக