செவ்வாய், 22 டிசம்பர், 2015

வினையால் அணையும் பெயர் என்றால் என்ன?
------------------------------------------------------------------------------
அவ்வப்போது கொஞ்சம் தமிழ் இலக்கணம் (1)
(ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலானது)
----------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------------------
நெரிசல் மிகுந்த கடைத்தெருவில், ஒரு பெண்ணிடம்
இருந்து அவளின் கைப்பையைப் பறித்துக் கொண்டு
ஓடுகிறான் ஒருவன். அவன் பெயர் ராமசாமியா
முத்துசாமியா என்றெல்லாம் கூட்டத்தினருக்குத் தெரியாது.
எனவே, "ஓடியவனைப் பிடி" என்று கூட்டம் குரல்
எழுப்புகிறது.

இங்கு ஓடியவன் என்பது ஒரு பெயர். இந்தப் பெயர் எப்படி
வந்தது? அவன் செய்த செயல் ஓடியது. இந்தச் செயலால்
அவனுக்கு ஓடியவன் என்று பெயர் வந்தது. இது செய்த
செயலால் ஏற்படும் பெயர். அதாவது வினையால்
அணையும் பெயர். (வினை = செயல்; அணையும் = சேரும்)

ஆக, ஓடியவன் என்பது வினையால் அணையும் பெயர்.
இது போலவே, ஆடியவன், பாடியவன், தேடியவன் ஆகியன
வினையால் அணையும் பெயர்கள்.

மேலும் பல எடுத்துக் காட்டுகள்:
----------------------------------------------------
பாடலை எழுதியவன் யார்? .... இதில் எழுதியவன் என்பது
வினையால் அணையும் பெயர்.
எழுதுகிறவன், எழுதுபவன் ஆகியனவும் வினையால்
அணையும் பெயர்களே.

படித்தவன், வெடித்தவன், அழுதவன், அழுதவள், புகைத்தவன்,
சமைத்தவள், பாடியவள், தைத்தவள், வளர்த்தவள்,
மிதித்தவன், வரைந்தவள், சிரித்தவள் ஆகியனவும்
வினையால் அணையும் பெயர்களே.
-------------------------------------------------------------------------------------------------
இதைப் படிக்கும் வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த
வினையால் அணையும் பெயர்களை இங்கு எழுதுவதை
வரவேற்கிறோம்.
*******************************************************************

1 கருத்து: