வெள்ளி, 18 டிசம்பர், 2015

சென்னைப் பத்திரிகையாளர் சங்கத் தலைமைக்கு
ஒரு வேண்டுகோள்!
------------------------------------------------------------------------------------
பதிவில் கண்டுள்ள கடிதத்தின் முதல் பத்தியில்
"சிம்புவின் பாடலுக்கு திரு இளையராஜா வருத்தம்
தெரிவித்து இருக்க வேண்டும்"
என்று கூறப் பட்டுள்ளது. இந்தக் கருத்து மிகவும்
அபத்தமாக உள்ளது.
**
சிம்புவின் பாடலுக்கு சிம்புதான் வருத்தம் தெரிவிக்க
வேண்டுமே தவிர, இளையராஜா ஏன் வருத்தம்
தெரிவிக்க வேண்டும்?
**
காவல்துறை சிம்புவின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேவையெனில் காவல்துறை சிம்புவைக் கைது செய்யலாம்.
அப்படியானால், சிம்புவுக்குப் பதிலாக, காவல்துறை
இளையராஜாவைக் கைது செய்ய  வேண்டும்  என்று
சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துமா?
**
யார் தப்பு செய்தாலும் ஒரு தலித்து தான் மன்னிப்புக்
கேட்க வேண்டுமா? எல்லாப் பழியையும் ஒரு தலித்தின்
தலையில்தான் சுமத்துமா சென்னைப் பத்திரிகையாளர்
சங்கம்? மனுநீதியை விட மோசமாக இருக்கிறதே இது?
**
மூல வேர் சிம்புவின் பாடல்தான் எனில், அப்பாடல்
பெண்களை இழிவு படுத்துகிறது எனில், சென்னைப்
பத்திரிகையாளர் சங்கம் சிம்புவை எதிர்த்து அல்லவா
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்!
**
சிம்புவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த
சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் ஏதேனும்
திட்டம் வைத்து இருக்கிறதா? ஏதேனும் அறிவிப்புக்
கொடுத்து இருக்கிறதா? எதுவும் இல்லையே.
அப்படி இருக்க இளையராஜாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம் என்று சென்னைப்
பத்திரிகையாளர் சங்கம் எழுத்து மூலம் அறிவித்து
இருப்பது எந்த விதத்திலும் நேர்மையல்ல; சரியல்ல.
இது சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின்
அப்பட்டமான தலித் எதிர்ப்புப் போக்கு என்பது
புலப்படுகிறது.
**
சாதிய முரண்பாடுகள் மிகவும் கூர்மை அடைந்து இருக்கிற
இன்றைய சமூகச் சூழலில், சென்னைப் பத்திரிகையாளர்
சங்கத்தின் இந்தக் கடிதம் மிக வேகமாக சமூக அமைதியைக்
குலைத்து விடும். ஒரு சாதிக் கலவரத்துக்குப் போதுமான
வெடிமருந்தை இக்கடிதம் கருக்கொண்டு இருக்கிறது.
இது மிகவும் அபாயகரமானது; ஆபத்தானது.
**
எனவே சென்னைப் பத்திரிகையாளர் சங்கமானது
இளையராஜாவை எதிர்த்து நடத்தத் திட்டமிட்டு இருக்கும்
கண்டன ஆர்ப்பாட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு
நாங்கள் கோருகிறோம். சென்னைப் பத்திரிகையாளர்
சங்கம் வெளியிட்டுள்ள அவ்வமைப்பின் தலைவர்
திரு வி அன்பழகன் கையெழுத்திட்டுள்ள 17.12.2015
தேதியிட்ட கடிதத்தையும்  உடனடியாகத் திரும்பப்
பெறுமாறும், இக்கடிதம் பிரசுரிக்கப் பட்டுள்ள முகநூல்
பதிவுகளில் இருந்து அக்கடிதப் பதிவுகளை உடனடியாக
நீக்குமாறும் நாங்கள் கோருகிறோம். சமூக அமைதி
குலையாமல் பார்த்துக் கொள்வது இத்தருணத்தில்
மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்துகிறோம்..
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், மார்க்சிய சிந்தனைப் பயிலகம்,
சென்னை.
இடம்: சென்னை; நாள்: 18.12.2015
------------------------------------------------------------------------------------------------       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக