ஞாயிறு, 22 ஜூலை, 2018

கம்யூனிஸ்ட் கட்சி என்பதன் வரையறை என்ன?
ஜனநாயக மத்தியத்துவம் என்றால் என்ன?
மாவோ கூறிய இருவழிப்பாதை என்றால் என்ன?
மார்க்சிய பால பாடம்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1848ல் மார்க்சும் எங்கல்சும் சேர்ந்து கம்யூனிஸ்ட்
அறிக்கை (Communist Manifesto) என்ற நூலை
எழுதினர். உலகம் முழுவதும் உள்ள எல்லா
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குமான பொதுவான
வேலைத்திட்டம் (programme) இது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் அடிப்படையில்
ஒரு குறிப்பிட்ட நாட்டில் நிலவும் பருண்மையான
நிலைமைகளை ஆய்வு செய்து அந்த நாட்டுக்கு
ஏற்ற வேலைத்திட்டத்தை உருவாக்கிக்
கொள்வது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமை.

ஆக மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையின்
அடிப்படையில், குறிப்பிட்ட நாட்டுக்கான
வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு
செயல்படும் எந்த ஒரு கட்சியும் கம்யூனிஸ்ட்
கட்சி ஆகும். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சி
என்பதற்கான வரையறை.

கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவது குறித்தும்
அதற்கான அடிப்படைகள் குறித்தும் மார்க்சும்
எங்கல்சும் திட்டவட்டமான எந்த வரையறையும்
தரவில்லை. கம்யூனிஸ்டு கட்சி என்ற ஒரு
அமைப்பை  எப்படி உருவாக்குவது, எப்படிச்
செயல்படுத்துவது என்பது குறித்த கறாரான
மிகத் தெளிவான வரையறையை லெனின்
வழங்கி உள்ளார்.  அதை நடைமுறைப் படுத்தியும்
காட்டி உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி என்ற
கோட்பாடே (concept) லெனின் உலகக்
கம்யூனிஸ்ட்களுக்கு வழங்கிய கொடையாகும்.
ஸ்டாலின் எழுதிய "லெனினிசத்தின் அடிப்படை
அம்சங்கள்" என்ற நூலை வாசகர்கள் படிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி என்னும் அமைப்பு எப்படிச்
செயல்பட வேண்டும்? கட்சி அமைப்பானது
(party organisation) இயங்குவதற்கான அமைப்புக்
கோட்பாடு எது? இதற்கு விடையாக
"ஜனநாயக மத்தியத்துவம்" (democratic centralism)
என்ற கோட்பாட்டை உலகக் கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்கு கொடையாக அளித்தார் லெனின்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பதில் இரண்டு
அம்சங்கள் இருக்கின்றன. 1. ஜனநாயகம்
2. மத்தியத்துவம். இந்த இரண்டுக்கும் இடையில்
ஒரு முரண்தர்க்க உறவு (dialectical relation) இருப்பதாக
லெனின் கருதினார்.

ஒரு பிரச்சினையில் முடிவு எடுக்கப்படும் வரை
கட்சி உறுப்பினர்கள் எந்தக் கருத்தையும்
கொண்டிருக்கலாம். அதாவது  முடிவு எடுக்கப்படாத
பிரச்சினையில் ஆதரவு எதிர்ப்பு என்னும் இருவேறு
நிலைகளில் எதனையும் கொண்டிருக்கலாம்.
தங்களின் நிலைபாட்டை வலியுறுத்திப் பேசலாம்.
அதற்கு கட்சி உறுப்பினர்களுக்கு முழு சுதந்திரம்
உண்டு. ஜனநாயக மத்தியத்துவம் என்பதில்
இது ஜனநாயகம் ஆகும்.

ஆனால், ஒரு பிரச்சினையில் விவாதித்து முடிவு
எடுக்கப்பட்ட பின்னால், எடுக்கப்பட்ட முடிவையே
கட்சி முழுவதும் ஏற்றுச் செயல்பட வேண்டும்.
எடுக்கப்பட்ட முடிவை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ
எவருக்கும் உரிமை இல்லை. ஜனநாயக
மத்தியத்துவம் என்பதில் இது மத்தியத்துவம் ஆகும்.

ஆக, முடிவு எடுக்கும் வரை ஜனநாயகமும்,
முடிவு எடுக்கப்பட்ட பின்னர் மத்தியத்துவமும்
செயல்படும். இதுதான் ஜனநாயக மத்தியத்துவம்
ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டுக்கு
லெனின் ஏன் வந்தார், எப்படி வந்தார் என்று
அறிய விரும்புவோர் லெனின் எழுதிய "ஓரடி
முன்னால், ஈரடிபின்னால்" என்ற நூலைப்
படிக்கவும். அன்று ரஷ்யாவில் இருந்த சமூக
ஜனநாயகக் கட்சியில் (இதுதான் அன்றைய
ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சி) லெனின் பெற்ற
அனுபவங்களே இதற்கு காரணம். அக்கட்சியில்
பெருவாரியான சந்தர்ப்பங்களில் லெனின்
சிறுபான்மையாகவே இருந்தார். லெனினின்
கருத்துக்கு ஆதரவு அளிப்பவராக பிளகானவ்
மட்டுமே இருந்தார்.     

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்த மட்டில்,
கட்சி  காங்கிரஸ் (party congress) எனப்படும் கட்சி
மாநாடே அதிஉயர்ந்த கொள்கை முடிவெடுக்கும்
அமைப்பாகும் (highest policy making body).

ஒரு மாநாட்டுக்கும் இன்னொரு மாநாட்டுக்கும்
இடையில் கட்சியின் மத்தியக் கமிட்டியே
(Central Committee) கட்சியை முழுவதுமாக
வழி நடத்தும். அரசு அடக்குமுறை அதிகமாக
உள்ள பிரதேசங்களில், ஒரு மாற்று ஏற்பாடாக
மாற்று மத்தியக் கமிட்டியையும் கம்யூனிஸ்ட்
கட்சி ஏற்பாடு செய்து கொள்ளும்.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமே
பொலிட் பீரோ அமைப்பு இருக்கிறது. என்றாலும்
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில்,
மத்தியக் கமிட்டியை உயர்மட்ட அமைப்பாகும்.
பொலிட் பீரோ என்பது சில வேலைப்
பிரிவினைகளின் அடிப்படையில், நடைமுறை
வசதிக்காகச் செய்து கொள்ளப்படும் ஒரு
ஏற்பாடே (arrangement) ஆகும்.

இருவழிப்பாதை (two line path)  என்றால் என்ன?
----------------------------------------------------------------------------
சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில்
எது சரி, எது தவறு என்று கம்யூனிஸ்ட் கட்சியால்
தீர்மானிக்க இயலாமல் போகும். எனவே
முடிவெடுக்க முடியாமல் கட்சித் தலைமை
திணறும்.

மார்க்சியத்தில் எல்லாவற்றுக்கும் "தயார்நிலை
அட்டவணை" (Ready Reckoner) கிடையாது. மார்க்சியம்
என்பது Trigonometric Tables அல்ல. sin 38, tan 63 ஆகியவற்றின் 
மதிப்பை  அட்டவணையைப் புரட்டிப்  பார்த்து
ஒரு கணித மாணவன் சொல்வது போல, சகல
பிரச்சினைகளுக்குமான தயார்நிலைத் தீர்வு
அட்டவணையை மார்க்சோ லெனினோ
உருவாக்கி இருக்கவில்லை. அப்படி உருவாக்க
முடியுமானால் அது மார்க்சியம் அல்ல மதமே
ஆகும்.   

சீனத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்ட போது,
இருவழிப்பாதை என்ற தீர்வை மாவோ
முன்மொழிந்தார். அதாவது ஒரு குறிப்பிட்ட
பிரச்சினையில், A என்றும் B என்றும் இரண்டு
வேறுபட்ட தீர்வுகள் இருக்கும்போது, இரண்டில்
எது சரி என்று தீர்மானிக்க இயலாதபோது,
இரண்டையும் வெவ்வேறு பிரதேசங்களில்
செயல்படுத்திப் பார்ப்பது என்ற முடிவை
மாவோ எடுத்தார். இதுவே இருவழிப்பாதை
ஆகும்.

இரண்டு தீர்வுகளையும் செயல்படுத்திய பின்
கிடைக்கிற அனுபவங்களில் இருந்தும், ஏற்பட்ட
பின்விளைவுகளில் இருந்தும் எது சரியானது
என்று தீர்மானிக்க இயலும். இது அறிவியல்
பரிசோதனைகளில் பின்பற்றப்படும்
Trial and Error முறை போன்றது. 

கம்யூனிசம் என்றாலே சர்வாதிகாரம் என்று
பேசும் மூடர்களுக்கு மாவோ முன்மொழிந்த
இருவழிப்பாதை பற்றி எதுவும் தெரியாது.
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி என்பது
ஒரு கொள்ளைக் கூட்டம் போன்று செயல்படும்
அமைப்பு என்றும்,  கட்சியின் பொதுச்செயலர்
கொள்ளைக்கூட்ட பாஸ் (boss) என்றும் எழுதிய
அ மார்க்சின் ஆதரவாளர்கள் இருவழிப்பதை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

லெனின் முன்மொழிந்த ஜனநாயக
மத்தியத்துவம் என்பதை ஏற்றுக் கொண்டு,
அதில் இருவழிப்பாதை என்னும் மேம்பாட்டை
(improvement) அறிமுகம் செய்தவர் மாவோ.
*****************************************************
 

     
      

    

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக