செவ்வாய், 17 ஜூலை, 2018

என்னுடைய மார்க்சிய ஆசான்களில் ஒருவரான
தோழர் பி ஆர் பி அவர்களுக்கு நினைவாஞ்சலி!
---------------------------------------------------------------------------------
1970களின் பிற்பகுதி. நான் சென்னை மேற்கு
மாம்பலத்தில் பேச்சிலர் விடுதியில் தங்கி
தொலைதொடர்பில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த நேரம்.

நான் அப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தேன்.
தோழர் பி ஆர் பரமேஸ்வரன் சென்னை செங்கை
மாவட்டச் செயலாளராக இருந்தார். அவருடன்
அறிமுகமும் பழக்கமும் தொடர்பும் ஏற்பட்டது.

என்னுடைய பெரும்பகுதி ஓய்வு நேரத்தை
நான் தோழர் பி ஆர் பி அவர்களுடன் கழித்தேன்.
சளைக்காமல் மார்க்சிய விளக்கம் அளிக்கக்
கூடியவர். மணிக்கணக்கில் வகுப்பு எடுக்கக்
கூடியவர்.

எனது மார்க்சிய ஆசான்களில் பி ஆர் பியும்
ஒருவர். ஒருமுறை கேரளா சமாஜத்தில்
நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அப்போது ML
வட்டாரத்தில் பிரபலமாக இருந்த "மூன்று
உலகக் கோட்பாடு" (Three worlds theory) பற்றி
வகுப்பு எடுத்தார். 3 மணி நேர வகுப்பு.
காலை 10.15க்கு பேசத் தொடங்கியவர் மதியம்
1.15க்குத்தான் முடித்தார்.

நான் முன்வரிசையில் அமர்ந்திருப்பேன். பேசி
முடித்ததும் என்னைத் தேடுவார். அவருக்குத்
தேவையான கத்தரி பிராண்ட் சிகரெட்டை
அவருக்குக் கொடுப்பேன். நானும் அவரும்
புகைத்துக் கொண்டே வருவோம்.

வேட்டி, அரைக்கை சட்டை, இயல்பான எளிமை.
அந்தக் காலக்கட்டத்தில் அவர் மணிக்கணக்காக
உரையாடியது என்னுடன்தான். எந்த ஒரு
கேள்வியையும் தயக்கமின்றிக் கேட்பேன்.
அவரும் விடை சொல்லுவார்.

அப்போது என்னுடன் ஒரு ML தோழர் என்னுடைய
விடுதியில் பக்கத்து அறையில் தங்கி இருந்தார்.
தற்போது மகஇகவில் பணியாற்றும் அந்த மூத்த
தோழர் என்னுடன் இரவு முழுவதும் உரையாடுவார்.
அவரிடம் நான் பி ஆர் பி சொன்னதை எல்லாம்
சொல்லுவேன். அதை எல்லாம் அவர் மறுப்பார்.
மறுநாள் பி ஆர் பியைப் பார்த்தவுடன் அறைத்தோழர்
கூறிய மறுப்புகளை பி ஆர் பியிடம்
தெரிவிப்பேன், அவர் அதையும் மறுப்பார்.

அவரின் மறுப்பை என் அறைத் தோழரிடம்
கூறுவேன். அவர் அதற்கு மறுமொழி கூற,
அதை மறுநாள் பி ஆர் பியிடம் கூற இப்படி
விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கும்.
ஒருநாள் என்னிடம் பி ஆர் பி கூறினார்:
"இதுதான் இளங்கோ, மார்க்சியம் கூறும்
இயங்கியல் (DIALECTICS)". அது உண்மையே
என்று உணர்ந்தேன்.

நான் ML கட்சிக்குச் செல்லும் வரை பி ஆர் பியுடன்
மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்தேன்.
ML கட்சிக்குச் செல்வது என்று முடிவெடுத்த உடன்,
அவரிடம்  சொல்லாமல் போவது சரியென்று எனக்குத்
தோன்றவில்லை. என்னைக் காணவில்லையே
என்று அவர் தேடக்கூடும். கூட்டத்தில் பேசி
முடித்தவுடன் அவரின் கண்கள் அந்த அரங்கம்
முழுவதும் என்னைத் தேடக் கூடும்.

எனவே சொல்லி விட்டுப் போவது என்று முடிவு
செய்தேன்; அவரிடம் சொன்னேன். "எங்கிருந்தாலும்
வாழ்க" என்று வாழ்த்தினார். அதன் பிறகு
அவரைச் சந்திக்கவே வாய்ப்பு இல்லை.

இன்று தோழர் ராமகிருஷ்ணனின் பதிவில்
அவரின் நினைவுநாள் என்ற குறிப்பைப்
படித்தேன்.கண்கள் குளமாகின. இரண்டு
நிமிடம் கண்ணீர் விட்டு அழுதேன். இதை
எழுதுவதன் மூலம் தோழர் பி ஆர் பிக்கு
அவரின் முன்னாள் மாணவனாகிய நான் என்
நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
------------------------------------------------------------------------------
படம் உதவி: தோழர் Subramanian Ramakrishnan
******************************************************* 
 15    

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக