வெள்ளி, 6 ஜூலை, 2018

pirabaath patnaik professor JNU
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புத்தகங்களில் ஒன்று ‘ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம்’. அதைச் சரியாக நூறு வருடங்களுக்கு முன்னால் லெனின் எழுதி முடித்தார். மிக விரிவான மக்களால் இன்னும் அது வாசிக்கப்படவில்லை. ஆனால், உண்மையில் அது மிக முக்கியமான புத்தகம். புரட்சிகளின் சகாப்தம் வந்து சேர்ந்துவிட்டதாக அந்தப் புத்தகம் வாதிட்டது.
புரட்சிகளின் சகாப்தத்துக்கான காரணம் எது என்பதையும் அது விளக்கியது. உலகம் ஏற்கெனவே பல கூறுகளாகப் பங்கு போடப்பட்டுள்ளது. அந்த உலகத்தை, மேலும் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வதற்காக, அதிகாரமிக்க ஒரு அரசைச் சுற்றி அணிசேர்ந்துள்ள ஏகபோக தனியார் நிறுவனங்களும் அவர்களைப் போலவே வேறொரு அரசைச் சுற்றி அணிசேர்ந்துள்ள போட்டி நிறுவனங்களும் முயல்கின்றன. இந்த நோக்கத்துக்காகப் போர்களில் ஈடுபடுகிற நிலைக்குள் உலக முதலாளித்துவம் நுழைந்துவிட்டது. அதுதான் புரட்சிகளின் சகாப்தத்துக்கு காரணம் என்றார் லெனின்.
பலவீனமான கண்ணி
தொழிலாளர்களின் முன்னால் இரண்டு வாய்ப்புகளை போர் முன்வைத்தது. ஒன்று, போர் முனையில் தங்களைப் போன்ற சக தொழிலாளர்களோடு போராடி ஒருவரையொருவர் கொல்ல வேண்டும் அல்லது இந்த ஏகாதிபத்தியப் போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றி, முதலாளித்துவ சமூக அமைப்பைத் தூக்கி வீச வேண்டும் என்பவையே அவை.
அது மட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் ஏகாதிபத்தியச் சுரண்டலை உலகு தழுவிய ஒரு சங்கிலித் தொடராகக் கண்டது. ஒரு பலவீனமான கண்ணியைக் குறிவைத்து அதை உடைக்க முடியும் என்றது. மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் தங்களின் விடுதலைக்காக நடத்துகிற போராட்டங்களை ஒரு உலகளாவிய புரட்சிக்கான நடைமுறைகளில் கருத்துரீதியாக அது ஒருங்கிணைத்தது.
கம்யூனிஸத்தின் பின்னடைவு
மனிதர்களின் செயலுக்கான பேசுபொருளாக உலகப் புரட்சியை ஏகாதிபத்தியம்தான் உலகத்தின் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவந்தது. அதுதான் ஒரு சாதாரண ஐரோப்பிய தத்துவம் என்ற நிலையிலிருந்த மார்க்சிஸத்தை உலகப் புரட்சிக்கான தத்துவமாக மேம்படுத்தியது.
அதுதான் உலகம் ஒருபோதும் பார்த்திராத புதிய ‘அகிலம்’ எனும் அகில உலக கம்யூனிஸ நிறுவனத்துக்கான கருத்துரீதியான அடித்தளத்தை வழங்கியது. கம்யூனிஸ்ட்டுகளின் சர்வதேச நிறுவனமான அதில்தான் ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி நாடுகளின் பிரதிநிதிகள் சீனா, இந்தியா, வியட்நாம், மெக்ஸிகோ நாடுகளைச் சேர்ந்தவர்களோடு தோளோடு தோள் உரசி நின்றார்கள். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் கணிப்பானது ஒரு முக்கியமான கட்டம் என்பதை உறுதிப்படுத்தின.
முதல் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, போருக்குப் பிறகு ஐரோப்பா எங்கும் நடந்த எழுச்சிகள், பாசிஸத்தின் எழுச்சி, ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர், ஜப்பானிய ராணுவ வாதம், சீனா மீதான ஜப்பானின் தாக்குதல், இரண்டாம் உலகப் போர், கம்யூனிஸ அரசுகளை அமைப்பதற்காக ஐரோப்பாவில் செஞ்சேனையின் அணிவகுப்பு, போருக்குப் பிறகு ஆசியாவில் நடந்த ஆயுதம் தாங்கிய எழுச்சிகள் எனும் நிகழ்வுகள் எல்லாம் ‘உலகம் புரட்சிகளின் சகாப்தத்தில் நுழைந்துவிட்டது’ என்று லெனின் வரைந்து காட்டிய ஒரு வரைபடத்தை உறுதிப்படுத்தும் விதமாக நம்முன் எழுந்த ஒரு காட்சியின் பகுதிகள்தான்.
ஆனால், ‘லெனினிய திருப்புமுனை’ என்று ஒருவர் அழைக்கக்கூடிய இந்த நிலைமையிலிருந்து இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகம் விலகிப்போய்விட்டது. பளீரென்று மின்னிய கம்யூனிஸத்தின் வெற்றிகளின் தருணம்தான் அதன் பின்னடைவுக்கான ஆரம்பமாகவும் இருந்தது என்பது முரண்.
மூன்று சலுகைகள்
முதலாளித்துவம் ‘கம்யூனிஸ அபாய’த்தை ஒழிப் பதற்காக மூன்று பெரிய சலுகைகளை மக்களுக்கு அளித்தது. காலனியாதிக்கத்தைக் கைவிடல், வயது வந்தோருக்கான வாக்குரிமை அடிப்படையிலான ஜனநாயக நிறுவனம், வேலைவாய்ப்பு அதிக அளவில் உருவாக வேண்டும் என்பதற்கான அரசின் தலையீடு ஆகியவையே அவை. இவை மூன்றும்தான் ஐரோப்பாவில் சமூக ஜனநாயகத்தின் கீழான ‘மக்கள் நல அரசு’களுக்கான அளவுகோல்களாகப் புரிந்துகொள்ளப்பட்டவை.
வயது வந்தோருக்கான வாக்குரிமையைக் கொண்டுள்ள ஜனநாயகம் என்பது பெருமளவில் உலகப் போருக்குப் பிறகு உருவான நடைமுறை என்னும் உண்மை பல நேரங்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை.
பிரிட்டனில் வயது வந்தோருக்கான வாக்குரிமை 1928-ல்தான் வந்து சேர்ந்தது. அப்போது பெண்கள் சில சொத்துரிமைக் கட்டுப்பாடுகளுடன் வாக்குரிமை பெற்றனர். ஆனால், பிரான்ஸில் வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் முதல் தேர்தல் 1945-ல்தான் நடந்தது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட ‘தேவையை நிர்வகிப்பதற்கான மேலாண்மை’யில் அரசின் தலையீடு வந்தது. முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தில் தேவையையும் வேலைவாய்ப்பையும் ஒருங்கிணைத்து வைக்கவும் அதிக அளவில் மூலதனத்தை முதலீடு செய்யவும், அவற்றின் விளைவான வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் வளர்ச்சிக்குமான பாதைகளை அது உருவாக்கியது.
மாறி மாறி வந்த அதிகளவிலான உற்பத்தித்திறன் வளர்ச்சியாலும் அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவானதாலும் அவற்றின் தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் பலமடைந்ததாலும் உண்மையான சம்பளங்கள் வேகமாக அதிகரித்தன.
முதலாளித்துவப் பொற்காலம்
1950-களின் ஆரம்பம் முதலாக 1970-களின் ஆரம்பம் வரையிலான காலகட்டத்தில் இத்தகைய அரசு தலையீடு சுருக்கமாக முதலாளித்துவத்தின் ‘பொற்காலம்’ எனப்பட்டது.
முதலாளித்துவத்தின் ‘பொற்காலம்’ முதலாளித்து வத்தால் ஏற்பட்டதல்ல. அதற்கு மாறாக, அதன் ஆட்சிக்குள் அதன் விருப்பங்களுக்கு மாறாக அந்தப் ‘பொற்காலம்’ நிறுவப்பட்டது. அதற்கு முன்னதாக அது ‘தேவையை நிர்வகிப்பதற்கான மேலாண்மை’யை அரசு செய்யக் கூடாது என்று எதிர்த்தது. இப்போது அதுவே அதைச் செய்தது. ‘கம்யூனிஸ அபாய’த்தை ஒழிப்பதற்கான சலுகையாக அது இதைச் செய்தது.
போருக்குப் பிறகான காலகட்டத்தில் அமெரிக்கா வளர்ந்து எழுந்தது. முதலாளித்துவ உலகின் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத தலைவராக அமெரிக்கா இருந்தது. ஏகாதிபத்திய உலகில் உள்ள போட்டியாளர்களை அது அடக்கிவிட்டது. ஆரம்பக் கட்டத்தில் இரண்டாம் உலகப் போர், அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளைப் பலவீனப்படுத்திவிட்டது. தனது சுதந்திர நடமாட்டத்துக்கு உகந்த முறையில் இது இருப்பதாக உணர்ந்த நிதி மூலதனம் உலகளாவிய முறையில் உருவாகியது.
போட்டியாளர்களான நாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஏகபோகப் பெருநிறுவனங்களின் அணிகள் தங்களுக்கு இடையே உலகைப் பங்கிட்டுக்கொள்வதற்கான போராட்டங்களின் சகாப்தம் முடிந்துவிட்டது. அத்தகைய பெருநிறுவனங்களின் அணிகள் இனி மையமான இடத்தைப் பிடிக்கப்போவதில்லை.
காலாவதியாகும் லெனினின் கணிப்பு
சுருக்கமாகச் சொன்னால், லெனினிய திருப்பு முனையான சம்பவங்கள் காலாவதியாகிவிட்டன. போர்கள் தொடர்கின்றன என்பது உண்மைதான். ஆனால், போர்களுக்கான அடிப்படைக் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டி அமையாது. ஏன், துணைக் காரணமாகக்கூட அமையாது.
கம்யூனிஸம் ஏன் திடீரெனத் தகர்ந்துவிட்டது என்று திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்விக்கு என்னிடம் எளிமையான விடை இருப்பதாக நான் நம்புகிறேன். உலகப் புரட்சி வந்துகொண்டிருப்பதாக அளித்த வாக்குறுதியின் மீது கம்யூனிஸம் கட்டமைக்கப்பட்டிருப்பதுதான் அதற்கான விடை என்று நினைக்கிறேன்.
உலகப் புரட்சி சமீபத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், புரட்சி பின்வாங்கிவிட்டது. இப்போது கம்யூனிஸம் தன்னைத்தானே மறு உருவாக்கம் செய்வதற்காக மறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். கம்யூனிஸம் நடைமுறைக்குப் பொருத்தமானதாக தொடர்ந்து இருப்பதற்காக லெனினிய திருப்புமுனைக்கு முந்தைய கட்டத்துக்கு இணையான நிலைக்கு அது வர வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
எங்கே மாற்று?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோயன் ராபின்சனிடம் யாராவது சோவியத் ஒன்றியம் பற்றி மிகக் கடுமையான விமர்சனம் செய்தால் வழக்கமாக ஒன்றைச் சொல்வார். “சோவியத் ஒன்றியம் மட்டும் இல்லையென்றால், இதுபோல நீங்களும் நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம்!” இப்படிச் சொல்லிவிட்டு, ஹிட்லருக்கு எதிராக சோவியத் ஒன்றியம் பெற்ற வெற்றியை அவர் நினைவுகூர்வார்.
இதற்கு முரண்பாடான தாக்கம் இருக்கிறது. முதலாளித்துவத்தின் பொற்காலத்தில் கம்யூனிஸம் பலவீனமடைய வேண்டும் என்ற வேண்டுகோளை ஒருவர் எதிர்பார்த்திருக்க முடியும். அது இல்லாமல், உலக மயத்தின் சகாப்தத்தில் உழைப்பாளர்களின் துன்பங்கள் எங்கும் அதிகரித்துள்ள நிலையில், போராட்டக் களத்தில் வெற்றியைக் கைப்பற்றும் நிலையிலிருந்து தூரமாய் கம்யூனிஸம் இருக்கிறது. அது தோல்வியைச் சந்திக்கும் என்பதுபோலவும் தெரிகிறது.
கம்யூனிஸத்தின் இயலாமையால் லெனினியத்துக்குப் பிறகான தொடர் இணைப்பான சம்பவங்களை அதனால் எதிர்கொள்ள முடியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உலகமயத்தை நோக்கிய முரண்பாடான கலவையான உணர்வுகள் கம்யூனிஸத்துக்கு உள்ளன.
உலகமயத்திலிருந்து துண்டித்துக்கொள்வதில் யாரையும்விட அதிகமான அளவில் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படையானவர்கள். குறைந்த அளவாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உலகமயத்தை எதிர்கொள்வதில் திட்டவட்டமான வழிமுறைகளை வைத்திருப்பதில் பின்தங்கியே உள்ளனர்.
லெனினியத்துக்குப் பிறகான சம்பவங்களின் பின்ன ணியில், நடைமுறைப்படுத்தக் கூடியதானதாக நீடிப் பதில் கம்யூனிஸத்துக்குத் திறன் இல்லை. அந்தத் திறனில்லாமையின் வேர்கள் ஜனநாயகத்தை நோக்கி அது பாரம்பரியமாகக் கொண்டுள்ள முரண்பாடான பலவகை உணர்ச்சிகளில் இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்த அளவில் உலகமயத்தை எதிர்த்தாலும், கம்யூனிஸ்ட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக் கான ஒரு திட்டவட்டமான மாற்று உத்தியை உருவாக்க முடியவில்லை. திட்டவட்டமான மாற்றுத் திட்டத்தோடு தாம் எதிர்நோக்கியிருக்கும் பாதையின் கற்களை கம்யூனிஸ்ட்டுகள் பார்க்கும்போது சூழல்கள் மாறும்!
பிரபாத் பட்நாயக், பேராசிரியர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், 
© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக