புதன், 18 ஜூலை, 2018

பின்நவீனத்துவமும் என்ஜிஓக்களும்!
மார்க்சியத்தை பலவீனப் படுத்த
மேற்கொண்ட திட்டமிட்ட முயற்சிகள்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பாவில்
பின்நவீனத்துவம்  பெரும் செல்வாக்கைப்
பெற்று இருந்தது. என்றாலும் இந்தியாவில்
1980களில்தான் பின்நவீனத்துவம் நுழைந்தது.

ஆரம்பத்தில் ஒரு இலக்கியப் போக்காகத்
தன்னை வெளிப்படுத்திக் கொண்ட
பின்நவீனத்துவம், மெல்ல மெல்ல ஆனால்
உறுதியுடன் தத்துவம், அரசியல் ஆகிய
துறைகளில் நுழைந்தது.

இதே காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய
அமைப்புகளான என்ஜிஓக்கள் எனப்படும்      
(NGO = Non Governmental Organisation) தொண்டு
நிறுவனங்களும் இந்தியாவில் அதிகரித்தன.

1960 களின் இறுதியில் தோன்றிய நக்சல்பாரி
விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சியும்,
அதைத் தொடர்ந்த மார்க்சிய லெனினியக்
கட்சியின் உதயமும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு
மட்டுமல்ல உலக முதலாளித்துவத்திற்கும்
பெரும் கிலியை ஏற்படுத்தின.

இதன் விளைவாக உலக ஏகாதிபத்தியத்தின்
அஜெண்டாவில் இந்தியா முக்கியமான இடத்தைப்
பிடித்தது. நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து
மக்களின் போராட்ட உணர்வுகள் காட்டுத்தீயாக
மாறி விடக்கூடாது என்ற எண்ணமும், மக்களின் 
போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க
என்ஜிஓக்களை இந்தியாவில் இறக்குவது
என்ற திட்டமும் ஏகாதிபத்தியத்தால்
நடைமுறைப் படுத்தப் பட்டது.

ஆக, ஒருபுறம் பின்நவீனத்துவம், இன்னொரு
புறம் என்ஜிஓக்கள் என்ற இந்த இரட்டைக்
குழல் துப்பாக்கிகள் இந்தியப் புரட்சிகர
இயக்கங்கள் மீது தாக்குதல் தொடுத்தன.
இத்தாக்குதல்  வன்முறையை வழியாகக்
கொண்டதல்ல. மாறாக வாழைப்பழத்தில்
ஊசி இறக்குவது போன்ற நடைமுறையைக்
கொண்டிருந்தது.

ஒரு மெய்யான மார்க்சியப் போராளிக்கும்,
ஏகாதிபத்திய அமைப்பிடம் காசு வாங்கும்
எடுபிடிக்கும் மக்களால் வேறுபாடு காண
முடியாத அளவுக்கு, திறமையும் ஆற்றலும்
நிரம்பிய ஊழியர்களையே என்ஜிஓக்களின்
தலைமைப் பொறுப்பில் அமர்த்தியது
ஏகாதிபத்தியம்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்ட தில்
என்று வள்ளுவர் கூறியது போன்று
புரட்சிகர மாறுவேடம் அணிந்த கயவர்கள்
என்ஜிஓக்களின் தலைமையில் இருந்தனர்.

தத்துவரீதியாக பின்நவீனத்துவம்
மார்க்சியத்தை, சமூக மாற்றத்தை பலவீனப்
படுத்தும் தர்க்கத்தை வழங்கியது. மறுவாசிப்பு
என்ற பெயரில் மார்க்சியத்தின் குறைகள்,
போதாமைகள், ஜனநாயக மறுப்புக்
கோட்பாடுகள், சாத்தியப்பாடின்மை ஆகிய
விஷயங்கள் பொதுத்தளத்தில் விவாதமாக
எடுத்துச் செல்லப்பட்டு அறிவுஜீவிகளிடையே
தாக்கத்தை ஏற்படுத்தின.

மார்க்சியம் சரியில்லை என்பவர்கள்
செயல்படுவதற்கு என்ஜிஓக்கள் புகலிடம்
அளித்தன. ஒட்டுமொத்த சமூக மாற்றத்தைக்
குறிவைத்துச் செயல்படுவதற்கு மாறாக,
அவ்வப்போது எழும் குறிப்பான பிரச்சினைகளில்
செயல்பட ஏதுவாக என்ஜிஓக்கள் மக்கள்
இயக்கங்களைக் கட்டமைத்தன.

தீஸ்தா செதல்வாத், கூடங்குளம் உதயகுமார்,
அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் என்ஜிஓ
ஆட்களே. அவர்களின் போராட்டங்களுக்கு
என்ஜிஓக்கள் மூலமாக நிதி பெற்றனர்.

தத்துவம், அரசியல் ஆகிய முதன்மையான
இரு அரங்குகளிலும் பின்நவீனத்துவமும்
என்ஜிஓக்களும் மார்க்சிய அரசியலை,
அமைப்புகளை, இயக்கங்களை, மக்களுக்குத்
தலைமை தாங்கும் ஆற்றலை  சேதாரப்
படுத்தின என்பது வரலாறு.

அறிந்தும் அறியாமலும் தத்துவார்த்த ரீதியாக
கணிசமான இடதுசாரி அறிவுஜீவிகள்
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
ஆட்பட்டு உள்ளனர். எல்லாக் கம்யூனிஸ்ட்
கட்சிகளிலும் (மா-லெ கட்சிகள் உட்பட)
கணிசமான அணிகள் பின்நவீனத்துவத்தின்
செல்வாக்கிற்கு இரையாகி உள்ளனர்.
இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.

பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக
பின்நவீனத்துவம் இமானுவேல் கான்ட்டின்
தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
இடதுசாரி அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர்
கான்ட்டை ஏற்றுக் கொண்டவர்களே.

இன்று மார்க்சிஸ்ட் கட்சியானது (CPM)
கருத்துமுதல்வாத விலகலை, கான்ட்டிய
விலகலை (Kantian deviation) நடைமுறைப்
படுத்தும்போது அக்கட்சிக்குள் எவ்விதமான
உட்கட்சிப் போராட்டமும் நிகழவில்லை
என்பதே இதற்குச் சான்றாகும்.

ஒரு சில மார்க்சிய லெனினியக் கட்சிகளும்
கூட, கான்ட்டிய விலகலை பெருமளவில்
நடைமுறையாகக் கொண்டுள்ளன என்பதும்
கசப்பான உண்மைகள்.

ஆக முதலாளித்துவத்தை எதிர்த்துப்
போராடுவதுதான் கான்ட்டிய விலகலையும்
எதிர்த்துப் போராட வேண்டும். இது அறிவியலின்
துணை இல்லாமல் முடியாது.
------------------------------------------------------------------------------            
பின்குறிப்பு: திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக்
கட்சிகள் பாராட்டுக்கு உரியவை.
அக்கட்சிகளிடம் பின்நவீனத்துவச் சிந்தனை
கிடையாது. என்ஜிஓ தொடர்பும் கிடையாது.
அவை feudal கட்சிகள். பாமக, விசிக போன்ற
கட்சிகளில் பி.ந சிந்தனையும் உண்டு.
என்ஜிஓ தொடர்பும் உண்டு.
**************************************************  
       
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக