வெள்ளி, 13 ஜூலை, 2018

ஆதிசங்கரரை அவரின் வகையறாக்களை
வதம் செய்த மகிஷாசுர மர்த்தினி!
குடலைக் கிழித்து மாலையாக  அணிந்தவர் யார்?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஷ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஷிரோதினி வாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஷ்ணுனுதே

பகவதி ஹேஷிதி கந்த குடும்பினி
பூரி குடும்பினி பூரி கிருதே
ஜெய ஜெயஹே  மகிஷாசுர மர்த்தினி
ரம்யக பர்த்தினி ஷைல சுதே

என்ற வாசகர்களின் வாழ்த்தொலிக்கு நடுவில்
இமானுவேல் கான்ட்டை, பெர்க்லி பாதிரியாரை,
ஆதிசங்கரரை வதம் செய்தவர் அயன் ராண்ட்.
இவர் கருத்துமுதல்வாதிகளை  வதம் செய்த 
ஒரு மகிஷாசுர மர்த்தினி!     
     
வலதுசாரி அறிவுஜீவிகள் நடுவில் நிரம்பவும்
செல்வாக்குப் பெற்றவர் அயன் ராண்டு.
இவர் ஒரு பெண்மணி. ஒரு ஆங்கில
நாவலாசிரியர். இதற்கெல்லாம் மேலாக
இவர் ஒரு தத்துவஞானி (Philosopher).

வேறு எவராவது பெண் தத்துவஞானி
இருக்கிறார்களா? இருந்தோர் இருப்போர் உட்பட.
வாசகர்கள் பதில் கூறலாம்.

அயன் ராண்டின் தத்துவம் புறவயவாதம்
(objectivism) ஆகும். இது பொருள்முதல்வாதத்
தத்துவம் ஆகும்.

இமானுவேல் கான்ட் என்ற கருத்துமுதல்வாதத்
தத்துவஞானியை நார் நாராகக் கிழித்துத்
தொங்க விட்டவர் அயன் ராண்டு. பெர்க்லி
பாதிரியாரின் கருத்துக்களை,  ஆதிசங்கரரின்
அத்வைதத்தை அழித்தவர் அயன் ராண்டு.

உலகிலேயே மிகவும் தீமையான மனிதர் என்று
இமானுவேல் கான்ட்டை வர்ணித்தார்
அயன் ராண்டு. ஏன் கான்ட்டுக்கு இவ்வளவு
முக்கியத்துவம் கொடுத்து அழித்தார் ராண்ட்?
கான்ட்தான் உலக வரலாற்றிலேயே கடவுள்
உண்டு என்று நிரூபித்த ஒரே தத்துவ ஞானி.

அயன் ராண்ட் எழுதிய எல்லா நூல்களையும்
படிக்காவிட்டாலும் அவரின் புகழ்பெற்ற
இரண்டு நாவல்களை வாசகர்கள் கண்டிப்பாக
வாசிக்க வேண்டும்.

1. அவரின் The Fountainhead நாவல். இன்றைய விலை
அமேசானில் ரூ 1100.
2. Atlas shrugged என்ற நாவல். கிட்டத்தட்ட அதே
விலை இருக்கக் கூடும்.
இந்த இரண்டு நாவல்களும் பொடி எழுத்தில்
600 பக்கங்களைக் கொண்டவை. நல்ல பதிப்பு
என்றால் 900 பக்கங்கள் வரும். நல்ல ஆங்கிலப்
புலமையும் ஆங்கில நூல் வாசிப்புப் பழக்கமும்
இருந்தால் மட்டுமே இந்நாவல்களை வாசிக்க
முடியும்.
(சார், உங்கள் பேச்சைக் கேட்டு வாங்கினேன்,
இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே என்று யாரும்
புகார் செய்யக் கூடாது)

அயன் ராண்ட் ஒரு சிறந்த பொருள்முதல்வாதி.
என்றாலும் அவர் மார்க்சியவாதி அல்ல. அவர்
ஒரு முதலாளித்துவவாதி.

முதலாளித்துவவாதி என்றால் எப்படிப்
பொருள்முதல்வாதியாக இருக்க முடியும்
என்று ஆவேசமாகக் கேட்கிறான் துலுக்காணம்.
நாட்பட்ட மலச்சிக்கல் உள்ள நமது அணில் ஆணி
இலை ஈக்கள் புகழ் பொருள்முதல்வாதிகளின்
வகுப்பில் மார்க்சியம் கற்றவன் துலுக்காணம்.
பின் அவனுடைய மூளைவளர்ச்சி எப்படி இருக்கும்?

முதலாளித்துவம் பொருள்முதல்வாதம், கருத்து
முதல்வாதம் இரண்டையும் தன தேவைக்கு
ஏற்பப் பயன்படுத்தும். பொருள்முதல்வாதம்
இல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி நடைபெற
முடியாது.

பூர்ஷ்வாக்களில் கணிசமானோர்
பொருள்முதல்வாதிகளாக இருப்பதில்
வியப்பதற்கு ஒன்றுமில்லை.

ஒவ்வொரு IIT மாணவனும் கல்லூரியில்
சேர்ந்தவுடன் அயன் ராண்டின் The Fountainhead
நாவலைப் படிக்கிறான். IAS பயிற்சி பெறும்
மாணவர்கள், IIM மாணவர்கள், தரமான
பொறியியல் கலோரிகளில் படிக்கும் மாணவர்கள்
என பலதரப்பட்டோர் அயன் ராண்டின்
The Fountainhead நாவலைப் படித்து வருகின்றனர்.

ஏன்? இந்த நாவலைப் படித்தால்தான் இதற்கு
விடை தெரியும். உணவின் ருசி அதைச்
சாப்பிடும்போதுதான் தெரியும்.
The proof of the pudding is in eating.

The Fountainhead நாவல் 1943ல் நம்மில் பலர் பிறப்பதற்கு
முன்பே எழுதப் பட்டது. நாவல் எழுதப்பட்டு
இன்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும்
இந்நாவல் இன்றும் விற்பனையில் சாதனை
படைக்கிறது.

இடதுசாரி முகாமில் அயன் ராண்டை அறிமுகப்
படுத்தியது நியூட்டன் அறிவியல் மன்றம்தான்.
எனினும் என்ன பயன்? யாரும் இன்னும்
அயன் ராண்டின் The Fountainhead நாவலைப்
படிக்கவில்லை. இனிமேலும் படிக்க
மாட்டார்கள்.

இறுதியாக ஒரு கேள்வி.  The Fountainhead  நாவலின்
கதாநாயகன் பெயர் என்ன? வாசகர்கள்
பதிலளிக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஜெயலலிதா அயன் ராண்டின்
நாவல்கள் அனைத்தையும் படித்திருக்கிறார்
என்று ஒரு வாசகர் குறிப்பிட்டார். அது
உண்மைதான். ஜெயலலிதா அயன் ராண்டின்
ஆளுமையிலும் அவரின் எழுத்துத் திறனிலும்
மயங்கிப்போய் இருக்க வேண்டும். அவர்
தன்னையே அயன் ராண்டாக   மனதில்
வரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆளுமை அயன் ராண்டின்
ஆளுமையின் தாக்கத்துக்கு உள்ளான ஒன்று.
*********************************************************

    

  

1 கருத்து: