வெள்ளி, 20 ஜூலை, 2018

பின்நவீனத்துவமும் சிந்தனைக் குள்ளர்களும்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து
ஐரோப்பாவில் உருவான ஒரு சிந்தனைப்
போக்கு பின்நவீனத்துவம் (post modernism) ஆகும்.
1950களில் உருப்பெற்று, 1960களில் செல்வாக்குப்
பெற்று இன்று உலகெங்கும் பரவியுள்ள ஒரு
சிந்தனைப் பள்ளியே (school of thought)
பின்நவீனத்துவம் ஆகும்.

பின்நவீனத்துவத்தை ஒரு தத்துவம் என்றும்
கூறலாம். இந்த உலகை பிரபஞ்சத்தை சமூகத்தை
மனித வாழ்க்கையை விளக்குவது தத்துவம் ஆகும்.
பின்நவீனத்துவமும் பிற தத்துவங்களைப்
போல உலகை அதன் பார்வையில் விளக்குகிறது.

தத்துவங்களுக்கு ஒரு பிரபஞ்சத் தன்மை
(universality) உண்டு. பின்நவீனத்துவத்திற்கும்
அது இருக்கிறது.

மார்க்சியம் நவீனத் தத்துவம் (Marxism is modernism)
ஆகும். தொழிற்புரட்சிக்குப் பிந்திய உலகம்
நவீன உலகம் ஆகும். இந்த நவீன உலகின்
தத்துவம் மார்க்சியம் என்பதால், மார்க்சியம்
நவீனத்துவம் என்று அழைக்கப் படுகிறது.

மார்க்சியத்துக்குப் பின் வந்த தத்துவம் 
பின்நவீனத்துவம்  ஆகும். எனவேதான் இந்தப் பெயர்.

ஒன்றிரண்டு கட்டுரைகளைப் படித்து யாரும்
மார்க்சியத்தை அறிந்து கொண்டதாகச் சொல்ல
முடியாது. அது போலவே ஒன்றிரண்டு
கட்டுரைகளைப்  படித்து விட்டு யாரும்
பின்நவீனத்துவத்தை முற்றாக அறிந்து
கொண்டதாகக் கூற இயலாது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம்
ஒரு பின்நவீனத்துவ உலகம் ஆகும். பின்நவீனத்துவ
சிந்தனை முறை உலகெங்கும் அறிவுத் 
துறைகளில் ஏற்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மார்க்சிய மூல ஆசான்களின் நூல்களைப்
படிப்பது போலவே பின்நவீனத்துவ ஆசான்களின்
நூல்களையும் படிக்க வேண்டும். அவை அனைத்தும்
ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளன.
தமிழிலோ வேறு இந்திய மொழிகளிலோ
பின்நவீனத்துவ மூல நூல்கள் மொழிபெயர்க்கப்
படவில்லை.

பின்நவீனத்துவ மூல நூல்களைப் படித்தோர்
ஓரளவுக்கு உண்டு. அவர்கள் யாவரும்
பின்நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களே.
பின்நவீனத்துவத்தை எதிர்ப்பதாகச் சொல்வோரில்
ஒருவர் கூட பின்நவீனத்துவ மூல நூல்களைப்
படித்ததில்லை. இது மட்டுமல்ல அந்த நூல்கள்
பற்றியோ, பின்நவீனத்துவ ஆசான்கள் பற்றியோ
எதுவும் தெரியாதவர்களே நூறு சதம் பேரும்.  

பின்நவீனத்துவத்தை ஏகாதிபத்தியங்கள்
உருவாக்கின; பின்நவீனத்துவம் உலகமயத்தை
முன்னெடுக்கிறது என்பன போன்ற
உளறல்களே தமிழ்ச் சூழலில் காணக் கிடைக்கும்
கருத்து முத்துக்கள்.

பொருள்முதல்வாதத்தையோ கருத்துமுதல்
வாதத்தையோ  ஏகாதிபத்தியம் உண்டாக்கியதா?
அல்லது முதலாளித்துவம் உண்டாக்கியதா?
சமூகத்தின் இயல்பான தேவைகளில் இருந்தே
தத்துவங்கள் பிறக்கின்றன. அவற்றை யாரும்
செயற்கையாக உண்டாக்க முடியாது.  

உருவான தத்துவங்களை ஒரு வர்க்க சமூக
அமைப்பில், அந்தந்த வர்க்கங்கள் தங்களின்
தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்
கொள்கின்றன.

மார்க்சியத்தை உருவாக்கிய காரல் மார்க்ஸ்
ஜெர்மானிய அறிஞர் லுத்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தைத் தேர்ந்து எடுத்தார்.
அவர் ஏன் அவர் பிறந்த ஊரிலியே இருந்த
ஜெர்மனியின் இமானுவேல் கான்ட் உருவாக்கிய
கருத்துமுதல்வாதத்தைத் தேர்ந்து எடுக்கவில்லை?

முதலாளித்துவம் பொருள்முதல்வாதத்தையும்
பயன்படுத்துகிறது. கருத்துமுதல்வாதத்தையும்
பயன்படுத்துகிறது. பின்நவீனத்துவத்தையும்
பயன்படுத்துகிறது.

எனவே தத்துவங்களை ஆளும் வர்க்கங்கள்
தங்கள் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தும்.
பாட்டாளி வர்க்கமும் அப்படிப் பயன்படுத்தலாம்
என்பதுதான் சீதாராம் யெச்சூரி போன்றோர்
முன்வைக்கும் கோட்பாடு.

இதனால்தான் இமானுவேல் கான்ட்டின்
கருத்துமுதல்வாதத்தை யெச்சூரி, கத்தார்,
ஞானி, எஸ் என் நாகராஜன் ஆகியோர்
பயன்படுத்துகின்றனர்.

கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம்
என்னும் இரண்டையும் சம மதிப்பு உடைய
கோட்பாடுகளாக பின்நவீனத்துவம்
வரையறுக்கிறது. ஒன்று சிறந்தது, இன்னொன்று
மட்டமானது என்று பின்நவீனத்துவம்
பார்ப்பதில்லை.

இந்தியாவில் பின்நவீனத்துவம் மார்க்சியத்தை
எதிர்த்து என்ன செய்தது என்ற கேள்விக்கு
விடையாக முன்னர் எழுதினேன். அது இதுதான்.

மார்க்சியம் மக்களை  வர்க்கங்களாக
ஒன்றிணைக்கிறது. இது கால்குலஸ் கணிதத்தில்
வரும் integration போன்றது.

பின்நவீனத்துவம் மக்களை மேலும் மேலும்
வேறுபடுத்தி சின்னாபின்னமாக்கி விடுகிறது
(fragmentation). இது கால்குலஸ் கணிதம் கூறும்
differentiation ஆகும்.

வேறு எளிமையான உதாரணம் கூறக்கூடாதா 
என்று கேட்கலாம். இது மார்க்சியம் பின்நவீனத்துவம் 
இரண்டையும் ஒருசேர விளக்கும் ஆகச் சிறந்த
உதாரணம்.

மார்க்சியமானது zero to infinity என்று integrate
செய்யும்போது, மக்களை infinitesimal levelக்கு
பின்நவீனத்துவம் சிதறடித்து விடுகிறது.
இதன் பிறகு, வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதோ
அல்லது   உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் 
என்ற  மார்க்சின் முழக்கத்தை நடைமுறைப்
படுத்துவதோ கடினமாகி விடுகிறது. 

மார்க்சியம் சேர்க்கும்!
பின்நவீனத்துவம் பிரிக்கும்!!

மார்க்சியம் குழாயில் தண்ணீர் கொண்டு வந்து
தொட்டியை நிரப்பும்!
பின்நவீனத்துவம் தொட்டியில் உள்ள 
குழாயைத் திறந்து விட்டு தண்ணீரை வெளியேற்றும்!!
**********************************************************

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக