செவ்வாய், 10 ஜூலை, 2018

பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே 
பொருள்முதல்வாதம் பிரதிபலிக்கிறதா?
ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில்
இருக்கும் எலக்ட்ரான்!
--------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பது
நமக்குத் தெரியும். சந்திரன் எப்படி? அதுவும்
தன்னைத்தானே சுற்றுகிறது. மற்றக் கோள்கள்
எப்படி? அவையும் தம்மைத்தாமே சுற்றுகின்றன.
ஆங்கிலத்தில் இதை rotation என்று சொல்லுகிறோம்.

எலக்ட்ரான் என்பது மிகவும் நுண்ணிய ஒரு துகள்.
இதுவும் தன்னைத்தானே சுற்றுகிறது. இதை
தற்சுழற்சி (self spin) என்கிறோம்.

இப்படி எலக்ட்ரான் தன்னைத்தானே சுற்றுவதில்
இரண்டு விதம் உண்டு.
1. மேல்நோக்கிய சுழற்சி (SPIN UP)
2. கீழ்நோக்கிய சுழற்சி (SPIN DOWN).
இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்ட
படங்களைப் பார்க்கவும்.படங்களில் உள்ள
அம்புக் குறிகளை கவனமாகப் பார்க்கவும்.

சரி, இப்போது குவான்டம் தியரிக்கு வருவோம்.
Quantum Superposition என்று ஒரு கோட்பாடு உண்டு.
ஒரு துகள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட நிலைகளில் (states) இருக்கும்.என்று
குவான்டம் சூப்பர்பொசிஷன் கோட்பாடு கூறுகிறது.

ஸ்பின் அப் (spin up) என்பது ஒரு நிலை (state);
ஸ்பின் டவுன் (spin down) என்பது ஒரு நிலை.
ஒரே நேரத்தில் இவ்விரண்டு நிலைகளிலும்
ஒரு எலக்ட்ரான் இருக்கும் என்று சூப்பர்
பொசிஷன் கோட்பாடு கூறுகிறது.

இதை நம் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.
இல்லையா? சரி, பகுத்தறிவு என்பது என்ன?
பிறந்ததில் இருந்து பதினெட்டு வயது வரை
நம் மூளையில் அடைக்கப்பட்டு உறைந்து
போய் இருக்கும் சிந்தனையைத்தான்
பகுத்தறிவு என்கிறோம். அதாவது தகவல்கள்,
தர்க்கங்கள், விதிகள் போன்ற பலவற்றின்
தொகுப்புதான் பகுத்தறிவு. 

இதுவரைக்கும் நமது அறிவு சரியென்று எதை
நம்பியதோ, அதற்கு நேர் எதிராக ஒரு விஷயம்
வரும்போது, நமது அறிவு அதை ஏற்க மறுக்கிறது.
நமது அறிவு அதை ஏற்க மறுக்கிறது
என்பதாலேயே அது உண்மையல்ல என்று
ஆகி விடுமா?

ஒரே நேரத்தில் ஒரு எலக்ட்ரான் SPIN UP,
SPIN DOWN ஆகிய இரு சாத்தியமான
நிலைகளிலும் இருக்கிறது என்பது
பல்வேறு பரிசோதனைகளில் நிரூபிக்கப்
பட்டு இருக்கிறது.

ஒரு நுண்ணிய துகளான எலக்ட்ரான்
அலையாகவும் இருக்கிறது என்பதை
முன்பு எழுதி இருந்தேன். துகள் என்றாலே
மிக மிக மிக நுண்ணிய ஒரு பொருள்.
அலை என்றால் நீளமாக இருப்பது.      .
இவ்வளவு நுண்ணிய ஒரு துகள் எப்படி
அலையாக இருக்க முடியும் என்று நம்
பகுத்தறிவு நம்ப மறுத்தது.

ஆனால் எலக்ட்ரான் அலையாகவும் இருக்கிறது
என்பது நிரூபிக்கப்பட்டு, எலக்ட்ரானின்
அலைநீளமும் கண்டு பிடிக்கப்பட்டது.

முந்திய கட்டுரையில் எலக்ட்ரானின்
அலைநீளத்தைக் கண்டுபிடிக்கும் கணக்கு
ஒன்றைக் கொடுத்திருந்தேன். நினைவு
இருக்கிறதா? அந்தக் கணக்கில் எலக்ட்ரானின்
அலைநீளம் சில நானோமீட்டர் என்று .பார்த்தோம்.

குவான்டம் கம்ப்யூட்டர் என்ற ஒன்று தயாரிப்பில்
இருக்கிறது. என்று முடியுமோ தெரியவில்லை.
சாதாரண கம்யூட்டர்கள் 0 அல்லது 1 என்ற இரண்டு
நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும்.
குவாண்டம் கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில் 0, 1 என்ற
இரண்டு நிலைகளிலும் இருக்கும். அது தயாராகி
விற்பனைக்கு வரதன் போகிறது! அப்போது எப்படி
ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் 0,1 என்னும்
இரண்டு நிலைகளிலும்  இருக்கிறது என்பதை
எல்லோரும் உணரலாம்..

இக்கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு எலக்ட்ரான்
ஒரே நேரத்தில் ஸ்பின் அப், ஸ்பின் டவுன் என்ற இரு
நிலைகளிலும் இருக்கிறது என்பதைச் சொல்லி
இருந்தேன். இதைப் புரிந்து கொள்ள ஒரு
படத்தையும் இணைத்துள்ளேன். அதை நன்றாகப்
பாருங்கள். அதில் ஒரு எலக்ட்ரானின் இரண்டு
முனைகளிலும் அம்புக்குறி இருப்பதை பாருங்கள்.

மேலும் ஸ்பின் அப், ஸ்பின் டவுன் என்ற இரண்டும்
64, 36 என்ற விகிதத்தில் அதில் உள்ளதைப்
பாருங்கள். இந்த 64,36 என்ற விகிதம் எப்படி வந்தது என்பதற்கெல்லாம் சூத்திரங்கள் உள்ளன.
ஒரு குவான்டம் கம்ப்யூட்டரில் ஒரு எலக்ட்ரான்
ஒரே நேரத்தில் SPIN UP, SPIN DOWN என்ற இரண்டு
நிலைகளிலும் இருப்பதை உணர்த்தும் படம் அது.

சரி,  இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்?
சொல்லியாக வேண்டும். இதெல்லாம் ADVANCED
Quantum Physics என்பதனால், வெகு சிலரே இதை
அறிந்திருக்க முடியும். மேலும் இந்த விவரங்கள்
எல்லாம் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலுமே
உள்ளன. தமிழில் இல்லை. 700 கோடி உலக மக்கள்
தொகையில், இதைத் தமிழில் சொல்வது
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம்
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு
இருக்கிறோமே! இன்றைய குவான்டம்
இயற்பியல் எல்லாவற்றையும் தலைகீழாகப்
புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறதே!
தத்துவத்தைப் புதுப்பிக்க வேண்டாமா?
வேண்டாம் என்றால், இன்றைய இயற்பியல்
பிரபஞ்சம் பற்றிய பார்வையை அடியோடு
மாற்றி விடுகிறதே! அதற்கெல்லாம்
பொருள்முதல்வாதத்தில் என்ன விளக்கம்
இருக்கிறது?

ஆக, இவை மார்க்சியர்களின் கவனத்துக்கு
உரியவை. கவனத்திற்கு கொண்டு வருகிறோம்!
***********************************************     
    .  


    

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக