செவ்வாய், 17 ஜூலை, 2018

மார்க்ஸ் லெனின் கூறிய
பொருள்முதல்வாதத் தத்துவத்தைக் கைவிட்டு
இமானுவேல் கான்ட்டின் கருத்துமுதல்வாதத்தைச்
செயல்படுத்துகிறது மார்க்சிஸ்ட் கட்சி!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
மார்க்ஸ் எங்கல்ஸ் காலத்தியப் பொருள்முதல்வாதம்
என்பது 19ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம்
ஆகும். மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில்
பிறந்து பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே
மறைந்தனர்.

மார்க்ஸ் எங்கல்சின் பொருள்முதல்வாதம் என்பது
19ஆம் நூற்றாண்டின் அறிவியலை உள்வாங்கி
இருந்தது. அரிஸ்டாட்டில், கோப்பர் நிக்கஸ்,
கெப்ளர், கலிலியோ, நியூட்டன் ஆகியோரின்
அறிவியலை சாத்தியமான அளவுக்கு
மார்க்சும் எங்கல்சும் தங்களின்
பொருள்முதல்வாதத்தில் சேர்த்து இருந்தனர்.
சுருங்கக் கூறின், நியூட்டன் காலத்து இயற்பியல்
(Newtonian physics) மார்க்சியப் பொருள்முதல்வாதத்தின்
அடித்தளமாக இருந்தது.

மார்க்ஸ் காலத்தில், கருத்துமுதல்வாதத்துடன்
நடந்த தத்துவப் போரில் மார்க்சியப்
பொருள்முதல்வாதம் வெற்றி பெற்று இருந்தது.
அதாவது, பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம்
இரண்டுக்குமான தொடர்ச்சியான தத்துவப்
போரில், மார்க்சின் காலத்தில் நடைபெற்ற
சுற்றில் (round) பொருள்முதல்வாதம் வெற்றி
அடைந்து இருந்தது.

இருபதாம் நூற்றாண்டில் லெனின் வருகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே
அறிவியலின் வளர்ச்சி நாலுகால் பாய்ச்சலில்
(galloping) இருந்தது. அறிவியலின் வளர்ச்சியோடு
இணைந்து தன்னை வளர்த்துக் கொண்ட
கருத்துமுதல்வாதமானது பொருள்முதல்
வாதத்தைப் போருக்கு அழைத்தது.

லெனின் தன் விடாமுயற்சியால் தம் காலத்திய
சுற்றில் கருத்துமுதல்வாதத்தை வீழ்த்துகிறார்.
ஆக, அடுத்த சுற்றிலும் பொருள்முதல்வாதமே
வெற்றி அடைகிறது. அப்போதுதான் லெனின்
குறிப்பிடுகிறார்: "போர்க்குணமிக்க
பொருள்முதல்வாதமே கருத்துமுதல்வாதத்தை
வீழ்த்தும்; போர்க்குணமற்ற பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதத்திடம் தோற்று விடும்" என்று.

இன்று இந்த 21ஆம் நூற்றாண்டில் அறிவியல்
அசுரத் தனமாக வளர்ந்து உள்ளது. கருத்துமுதல்
வாதமானது அறிவியலைப் பயன்படுத்தியும்
ஆளும் அரசுகளின் ஆதரவுடனும்
ஆயுதபாணியாகி நிற்கிறது.

எனவே நம் காலத்திய கருத்துமுதல்வாதத்தை
எதிர்கொண்டு முறியடிக்க லெனின் கூறியதை
விட அதிகமான போர்க்குணம் கொண்ட
பொருள்முதல்வாதம் நம்மிடம் வேண்டும்.
இல்லையேல் இந்தச் சுற்றில் பொருள்முதல்வாதம்
தோற்று விடும். இதுதான் இந்த 21ஆம்
நூற்றாண்டில் தத்துவ அரங்கில் கள நிலவரம்.

இமானுவேல் கான்ட்டின் கருத்துமுதல்வாதத்தை
ஏற்கும் மார்க்சிஸ்ட் கட்சி!
---------------------------------------------
ஆனால் கள நிலவரத்துக்கு மாறாகச் செயல்
படுகிறது மார்க்சிஸ்ட் கட்சி. அது கருத்துமுதல்
வாதத்தைத் தன் தத்துவமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்
என்ற லெனினிய போதனையை மார்க்சிஸ்ட்
கட்சி ஏற்கவில்லை.

ஆதிசங்கரரின் கருத்துமுதல்வாதம் கவைக்கு
உதவாது என்பதால், இமானுவேல் கான்ட்டின்
கருத்துமுதல்வாதத்தை தன் செயல்பாட்டுக்கு
உரிய தத்துவமாக மார்க்சிஸ்ட் கட்சி சுவீகரித்துக்
கொண்டுள்ளது. ஞானி, எஸ் என் நாகராஜன்
ஆகியோர் பல பத்தாண்டுகளாகக் கூறி
வந்ததுதான் இது. மார்க்சிஸ்ட் கட்சியின்
தத்துவத்தைப் பொறுத்த மட்டில், இது
மாபெரும் நிலைபாட்டு மாற்றம் ஆகும்
(paradigm shift).

கொஞ்சம் கொஞ்சமாக மெது மெதுவாக
மார்க்சிஸ்ட் கட்சியானது மதங்களைச் சார்ந்தே
தன் அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தது.மதவாதிகளின் பிற்போக்கான நிலைகளை
எதிர்த்துப் போராடாமல் அவற்றுக்கு வால்
பிடித்துக் கொண்டே வந்தது. கிறித்துவ
இஸ்லாமிய மதங்களைப் பொறுத்த மட்டில்,
மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடு பல
பத்தாண்டுகளாக இப்படித்தான் இருந்தது.

இந்தியாவில் இந்துத்துவ சக்திகளின் வளர்ச்சியும்
அவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும்
ஒரு முக்கியமான பின்விளைவை ஏற்படுத்தியது.
இந்துத்துவ சக்திகள் மார்க்சிஸ்ட் கட்சியின்
கிறித்துவ இஸ்லாமியச் சார்புகளை வெற்றிகரமாக
அம்பலப் படுத்தினர். இதனால் மேற்கு வங்கத்தில்
மார்க்சிஸ்ட் கட்சி தனக்கிருந்த இரண்டாம்
இடத்தையும் பாஜகவிடம் பறி கொடுத்தது.

கேரளத்திலும் பாஜகவை எதிர்கொள்வது
மார்க்சிஸ்டுகளுக்குச் சவாலாக இருந்தது.
மேலும் மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்ட
கிறித்துவ இஸ்லாமிய பிற்போக்குத்
தனங்களுக்கு வால்பிடித்த போக்கும்
அதன் இந்து வாக்கு வங்கியில் சேதாரத்தை
ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, மார்க்சிஸ்ட் கட்சியானது
கிறித்துவ இஸ்லாமியப் பிற்போக்குத்
தனங்களுக்கு வால் பிடித்தது போல், தற்போது
இந்துத்துவத்திற்கும் வால் பிடிக்க முடிவு
செய்துள்ளது.

இந்த முடிவை கடந்த பத்தாண்டுகளாகவே
பேரளவில் செயல்படுத்தி வருகிறது மார்க்சிஸ்ட்
கட்சி. இது அனைத்தும் கருத்துமுதல் வாதமாகும்.
இதை நியாயப் படுத்த மார்க்சிடமோ லெனினிடமோ
போக முடியாது. இமானுவேல் கான்ட்டிடம்தான்
போக வேண்டும். போய்விட்டது மார்க்சிஸ்ட் கட்சி.

ஆக மார்க்சிஸ்ட் கட்சி கருத்துமுதல் வாதத்திடம்
சரண் அடைந்து விட்டது. கருத்துமுதல்வாதத்திற்கு
கப்பம் கட்டுகிறது. இதுதான் அதன்
செயல்பாடுகளில் வெளிப்படுகிறது.

ஆக தத்துவத்தில் செய்துகொண்ட பாரதூரமான
இந்த மாற்றத்தை மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படையாக
அறிவிக்கவில்லை. திருத்தல்வாதத்திற்கே
உரிய இரட்டைவேடத் தன்மையுடன் இன்னமும்
பொருள்முதல்வாதத்தைத் தூக்கிப் பிடிப்பதாக
நாடகம் ஆடுகிறது. இந்த நாடகத்தை மக்களால்
ஏற்க இயலவில்லை. எனவே மார்க்சிஸ்ட் கட்சி
மீதான கண்டனங்களை மக்கள் அங்கீகரித்து
ஏற்கின்றனர்.

தங்களின் கொள்கை இதுதான் என்று மார்க்சிஸ்ட்
கட்சி அறிவிக்கலாம். குருசேவ் அறிவித்தார்.
கோர்ப்பச்சேவ் அறிவித்தார். டெங் சியோ பிங்
அறிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியும்
அறிவிக்கட்டுமே!
************************************************** 
yechchooriyai

மிஸ்டர் லெனின் மணாளன்,
யெச்சூரியைப் பாதுகாக்கும் விதமாக நீங்கள்
பேசலாம். ஆனால் லெனினின் செயல்பாடு
Kantian deviation என்று பேசினால் நாக்கை
இழுத்து வைத்து அறுத்து விடுவேன். உங்களின்
அறிவின் வரம்புக்கு உட்பட்ட இடங்களில்
சென்று பின்னூட்டம் இடவும்.
   


பிறழ் புரிதலைத் தவிர்க்கவும்!
----------------------------------------------------
நாத்திகராக இருக்க வேண்டிய யெச்சூரி
ஆத்திகராக மாறி விட்டார் என்று இக்கட்டுரை
சொல்லவில்லை. அப்படிப் புரிந்து கொள்ளும்
மடமைக்கு நான் பொறுப்பாக முடியாது.
மார்க்சிஸ்ட் கட்சியானது பொருள்முதல்
வாதத்தைக் கைவிடுகிறது என்பதும் கான்ட்டின்
தத்துவத்தை ஏற்கிறது என்பதும்தான் இங்கு
விமர்சிக்கப் படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகளில் பலர்
குறிப்பாக அறிவுஜீவிகள் பின்நவீனத்துவச்
செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்கள் என்பதாலேயே
கட்சிக்குள் கான்ட்டின் தத்துவத்திற்கு
எதிர்ப்பு இல்லை. 





            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக