சனி, 21 ஜூலை, 2018

அரட்டையும் விவாதமும்
குட்டி முதலாளித்துவமும்!
மார்க்சிய பால பாடம்!
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
குட்டி முதலாளித்துவத்தின் பண்புகள் என்ன?
அவை எப்படி நடைமுறையில் வெளிப்படும்?
இது பற்றிப் பார்ப்போம்.

1) தகுதிக்கு மீறிய புகழை விரும்பும் கு.மு.
-----------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவம் எப்போதுமே புகழை
விரும்பும். ஒரு கு.மு ஆசாமி தான் பாராட்டப்
பட வேண்டும் என்றும் புகழப்பட வேண்டும்
என்றும் எப்போதுமே விரும்புவார்.

தன் தகுதிக்கு மீறிய புகழுக்கு ஏங்குவது
கு.மு ஆசாமிகளின் பண்பு. a plus b whole squared
என்ற சூத்திரத்தை மட்டுமே அறிந்த
கு.மு ஆசாமி தன்னை ஒரு கணித மேதையாகக்
கற்பனை செய்து கொள்ளுவான்.

நியூட்டனின் மூன்று இயக்க விதிகளை மட்டும்
(laws of motion) அறிந்து வைத்துள்ள ஒரு குமு ஆசாமி
தனக்கு இயற்பியலில் நோபல் பரிசு கிடைக்க
வேண்டும் என்று விரும்புவான்.

தன்னைப் போலவே தகுதிக்கு மீறிய புகழை
விரும்பும் சக கு.மு ஆசாமிகளுடன் காரிய சாத்திய
நட்பைத் பேணும் குட்டி முதலாளித்துவம். ஒரு
அமைப்பில் இது மாதிரி கு.மு ஆசாமிகள் ஒரு
குழுவாகச் செயல்படுவார்கள்.  பரஸ்பரம் முதுகு
சொறிந்து கொள்வார்கள். இவர்களை இணைக்கும்
காரணி (unifying factor) தகுதிக்கு மீறிய புகழுக்கு
ஏங்கும் அற்பத்தனமே.

2) சொற்காமுகம் (phrase mongering):
------------------------------------------------------
குட்டி முதலாளித்துவத்தின் இன்னொரு பண்பு
சொற்காமுகம் ஆகும். கஷ்டப்பட்டுப் படித்து
தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள விரும்பாத
கு.மு சொற்காமுகத்தில் தஞ்சமடையும். ஒரு மார்க்சிய
அமைப்பில் உள்ள கு.மு ஆசாமி சொற்காமுகத்தில்
திளைத்துக் கொண்டிருப்பான்.     

நடைமுறை ஏதுமற்ற கு.மு ஆசாமிகள்
சொற்காமுகத்தில் திளைப்பது வாடிக்கை.
மார்க்சியச் சொற்களை (Marxist jargon) அவ்வப்போது
மந்திர உச்சாடனம் செய்து கொண்டும்,
மார்க்சிய மேற்கோள்களை out of contextல்
பேசிக்கொண்டும் கு.மு ஆசாமிகள் அரட்டை
அடிப்பது வாடிக்கை.

அரட்டை என்பது வேறு. விவாதம் என்பது வேறு.
பல கு.மு மூடர்களுக்கு இரண்டுக்கும் உள்ள
வேறுபாடு தெரியாது. அவர்கள் தங்களின் இழிந்த
அரட்டையையே விவாதமாகக் கருதும் பாரிய
தவறைச் செய்வார்கள்.

விவாதம் என்பது ஒரு நோக்கத்துடன் கூடியது.
அரட்டை என்பது நோக்கம் எதுவும் இல்லாதது.
விவாதத்தில் தத்தம் தரப்பை நியாயப் படுத்தும்
தரவுகளை, தர்க்கங்களை, ஆதாரங்களை
முன்வைக்க வேண்டிய தேவை உண்டு.

ஆனால் அரட்டை அப்படியல்ல. வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ என்பது போல் பேசலாம். 
தர்க்கங்களுக்குப் பதில் விதண்டாவாதம்.
தரவுகளுக்குப் பதில் வசை, அவதூறு
ஆகியவையே அரட்டையில் இடம்பெறும்.


3) சுய விமர்சனம் செய்து கொள்ளாமல் இருத்தல்
மற்றும் விமர்சனத்தை ஏற்க மறுத்தல்!
-------------------------------------------------------------------------------------
மெய்யான கறாரான சுய விமர்சனம் தனிமனித
வளர்ச்சிக்கோ அல்லது அமைப்பின் வளர்ச்சிக்கோ
அவசியம். பகிரங்கமாகச் செய்யாவிட்டாலும்
ரகசியமாகவேனும் மெய்யான சுயவிமர்சனம்
செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் குட்டி முதலாளித்துவம் மெய்யான
சுயவிமர்சனத்தை ஒருபோதும் ஏற்காது.
மாறாக, ஊரை ஏமாற்ற, யாந்திரீகமான (mechanical) 
சுயவிமர்சனத்தைச் செய்யும். இது எப்பயனையும்
தராது.

அதே போல் பிறரின் நியாயமான விமர்சனத்தையும்
கு.மு ஏற்காது. விமர்சனம் என்ற பெயரில்
அவதூறுகளும், வசைகளுமே பெரும்பாலும்
இருக்கிற நமது சூழலில், சூழலின் இந்த நிலையைப்
பயன்படுத்திக் கொண்டு கு.மு தப்பிக்கும்.

4) தாராளவாதம்!
------------------------------
குட்டி முதலாளித்துவம் கறார்த் தன்மையை
விரும்பாது. தாராள வாதத்தை (liberalism)
விரும்பி நடைமுறைப் படுத்தும். இது குறித்து
அறிய மாவோ எழுதிய "தாராள வாதத்தை
எதிர்ப்போம் (Combat Liberalism) என்ற கட்டுரையைப்
.படிக்கவும்.

இவை கு.மு.வின் பண்புகள். இந்தப் பண்புகளை
வெளிப்படுத்துவோர் கு.மு ஆசாமிகள். இவை
மட்டுமல்ல; இன்னும் நிறைய உள்ளன. அவற்றைப்
பின்னர் காணலாம்.

ஐரோப்பியக் குட்டி முதலாளித்துவத்தை விட
இந்தியக் குட்டி முதலாளித்துவம் மிகவும்
ஆபத்தானது. இது நிலப்பிரபுத்துவ வேர்களைக்
கொண்டது. உடைமை வர்க்கச் சிந்தனையே
குட்டி முதலாளித்துவத்தை ஏற்படுத்துகிறது.

இவை அனைத்தும் மார்க்சிய பாலபாடம் ஆகும்.
******************************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக