வெள்ளி, 6 ஜூலை, 2018

ஞானியின் கட்டுரை!
writersamsblogspot
--------------------
இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி கோவை ஞானி. இந்தியத் தளத்தில் மார்க்ஸையும் பெரியாரையும் இணைப்பது ஞானியினுடைய சிந்தனையின் மையம். 30 ஆண்டுகளுக்கு முன், அவருடைய 50-களில் நீரிழிவு நோய் முழுமையாக ஞானியின் பார்வையைப் பறித்தது. எனினும், தன்னுடைய வாசிப்பையோ, எழுத்தையோ, பேச்சையோ எது ஒன்றும் நிறுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை. காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை அவருடைய சிஷ்யையான மீனாட்சி வாசிக்கக் கேட்கிறார். நினைத்ததைச் சொல்லி எழுதுகிறார். முதுமை அவரைச் சங்கடத்துக்குள்ளாக்குவதையும் உணர முடிகிறது. உரையாடலில் உட்கார்ந்துவிட்டால் உற்சாகமாகிவிடுகிறார்.

கி.பழனிசாமி, எப்போது ஞானி ஆனீர்கள்? 

என்னுடைய பால்ய கால சினேகிதர் துரைசாமி. ஒரே ஊருக்குள் இருந்தாலும் கருத்துகளைக் கடிதங்களாகப் பறிமாறிக்கொள்வதை விளையாட்டாகச் செய்துவந்தோம். அவர் ஞானி என்ற பெயரில் எழுதுவார். ஒருநாள் ‘இந்தப் பெயரை நான் விட்டுவிடுகிறேன். நீ எடுத்துக்கொள்’ என்றார். தத்துவங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்ததால், இளம் வயதிலேயே நான் ஞானி ஆகிவிட்டேன்.


இன்றைய ஞானியின் உருவாக்கத்தில் குடும்பத்தின் பங்கு என்னவாக இருந்தது?

நான் பிறந்து வளர்ந்த சோமனூர், சின்ன கிராமம். அப்பா கிருஷ்ணசாமி. அம்மா மாரியம்மாள். அப்பா அரிசி, பருத்தி வியாபாரத்தில் இருந்தார். அம்மா குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். வீட்டில் என்னோடு சேர்த்து எட்டுப் பிள்ளைகள். தேசிய இயக்கத்தில் பற்றுக் கொண்டிருந்தவர் அப்பா. சுதந்திரத்துக்குப் பின் நாடு மாறிவிடும் என்று நம்பியவர். சாமானிய மக்களின் கனவுகளும் நம்பிக்கைகளும் எப்படி நொறுங்குபடுகின்றன என்பதை அப்பாவின் வழியாகப் பார்த்தேன். காங்கிரஸ் மீதான நம்பிக்கை உடையவும் எது உண்மையான சுயராஜ்ஜியத்தைத் தரும் என்ற மாற்றைத் தேடவும் அப்பாவின் உடைவும் ஒரு காரணம். படிப்பு, வாசிப்புக்கேற்ற சூழலைக் குடும்பமே கொடுத்தது. என்னுடைய காதல் மனைவி இந்திராணி குடும்பத்தை முழுக்க அவர் தோள்களில் சுமந்தவர். என் எழுத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்காக காவல் துறையினரின் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள் இருந்த காலத்தில்கூட ஊக்கம் கொடுத்தவர் அவர். பெரிய இழப்பு அவருடைய மறைவு. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே புகைப்படக்காரர்கள். உடன் இல்லையென்றாலும், என் செயல்பாட்டுக்குத் துணையாகவே இருக்கிறார்கள்.

நீங்கள் பிறந்து வளர்ந்த காலகட்டமானது, தமிழகத்தில் திராவிட இயக்கம் தழைத்த காலகட்டம். நீங்கள் படித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அன்றைய மாணவர் அரசியலின் விளைநிலம். உங்களுடைய தமிழுணர்வுக்குக் காரணமாக திராவிட இயக்கத்தைப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், பொதுவுடைமை இயக்கத்தையே தேர்ந்தெடுத்தீர்கள். ஏன்?
என்னுடைய கிராமம் விவசாயிகளுக்கு இணையாக நெசவாளர்களையும் கொண்டது. படிக்கச் சென்ற கோவை, ஆலைத் தொழிலாளர்களால் நிறைந்தது. அப்போது, தஞ்சாவூரில் அரசியல் விழிப்புணர்வோடு ஒருவன் படித்து வெளியே வந்தால், அவன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். அதுவே கோவையாக இருந்தால், மார்க்ஸியனாக இருப்பான். நான் அப்படித்தான் மார்க்ஸியனாகிவிட்டேன். பெரியார், அண்ணா மீது மதிப்பு இருந்தது. ஒரு கூட்டம் தவறவிட்டதில்லை. புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிடுவேன். ஆனால், சத்தமான நாத்திகவாதம் ஒரு தடையாக இருந்தது. கடவுளுக்கான நியாயத்தை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

கடவுள் - மதம் சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாடு இங்கு மார்க்ஸியர்களையுமே சங்கடப்படுத்தக் கூடியது. கடவுளுக்கான நியாயத்திலிருந்துதான் மதத்துக்கான நியாயத்தை உருவாக்கிக்கொண்டீர்களா?
சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை இருந்தது. அதேசமயம், ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா’ என்ற கேள்வியும் துரத்தியது. அரவிந்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தரையெல்லாம் ஆழ்ந்து கற்றேன். கடவுளைக் காணப் போராடினேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தீவிரமான தியானப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். என்னென்னவோ அனுபவங்கள். ஒருநாள் கண்ணை மூடித் தியானிக்கிறேன். கண்ணுக்குள் ஒரு வெளிச்சம். அதில் மிதக்கிறேன். உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம் சுரந்து உடம்பினுள் ஓடுவதுபோல இருக்கிறது. உடம்பெல்லாம் பரவசம். தியானம் பழகிவிட்டது. இப்படியே சில மாதங்கள். அந்தச் சமயத்தில் அருகில் இருக்கும் எதைத் தொட்டாலும் கடவுள்போலத் தோன்றும். எல்லாமே கடவுள். பரவசமான அனுபவம். ஆனால், சீக்கிரமே குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகள் வந்துவிட்டன. விடுதியில் சாப்பிடச் சென்றால் சாப்பாடும் கடவுள், நானும் கடவுள். எப்படி கடவுள் தன்னைத்தானே சாப்பிடுவது? சாமி கும்பிடச் சென்றால், நானும் கடவுள், விக்கிரகமும் கடவுள். நான் ஏன் அவனைக் கும்பிட வேண்டும்? பெரிய குழப்பம். உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. ‘மோகினி அடித்துவிட்டது’ என்று வீட்டில் முடிவெடுத்துவிட்டார்கள். பிற்பாடு தாகூரைப் படித்தபோதுதான் குழப்பம் நீங்கியது. ‘சாதனா’வில் தாகூர் எழுதுகிறார்: ‘கடவுள் என்பது இயற்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை.’ ஆக, என்னுடைய கடவுள் நம்பிக்கை இதுதான். இன்று என்னிடம் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பேன். கடவுள் ஒரு அழகான, போதையூட்டும் கருத்தாக்கம்.. அவ்வளவுதான். ஆனால், சமூகத்தில், சாமானிய மக்களிடம் உள்ள கடவுள் - மதத்துக்கான நியாயத்தை என்னுடைய சொந்த விருப்பங்களிலிருந்து அணுக மாட்டேன்.

மதம் ஒதுக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்றே பெரும்பாலான மார்க்ஸியர்கள் கருதுகிறார்கள். நீங்கள் இந்தத் தளத்தில் நிறையப் பயணித்திருக்கிறீர்கள். இன்றைக்கு எந்த இடத்தை வந்தடைந்திருக்கிறீர்கள்?
மதத்தைப் பற்றி மார்க்ஸ் நிறையப் பேசியிருக்கிறார். ‘மதம் ஒரு அபின்’ என்று அவர் சொன்னதை மேற்கோள்காட்டி நிறையப் பேர் இப்படிப் பேசுவதுண்டு. ஜெர்மனில் அபின் என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உண்டு. ஒன்று, போதையூட்டக்கூடியது. மற்றொன்று, வலியை மறக்கச்செய்யும் மயக்க மருந்து. பிந்தைய அர்த்தத்திலேயே மார்க்ஸ் அதைப் பயன்படுத்துகிறார். “மக்களின் ஏக்கப் பெருமூச்சு மதம். அது, இதயம் அற்ற உலகின் இதயம். ஆன்மா அற்ற உலகின் ஆன்மா. தனியுடைமை, அரசதிகாரம் இருக்கும் வரை மதமும் இருக்கும். கொடுமையான சமூகச் சூழலில் மதம் தரும் ஆறுதல் இல்லாமல் மனிதர்களால் வாழ்வைச் சகித்துக்கொள்ள முடியாது.” இதையெல்லாமும் மார்க்ஸ்தான் சொல்கிறார். மதம் நாம் நினைக்கிற அளவுக்கு வெறுக்கத்தக்கது இல்லை. ஜான் லெவிஸ் சொல்கிறார், “மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.” என்னைப் பொறுத்த அளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன். சமுதாயத்தில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும். அடுத்து, மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும் பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்து அதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா? திருவாய்மொழிப் பாடலின் வரி இது: ‘ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை...” எவ்வளவு கொடிய ஏக்கத் துயர் இது! ஆழ்ந்து பார்த்தால், ஒரு இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாக அல்லவா கடவுள் மாறிவிடுகிறார். மத வெறி, மத அரசியலுக்கு எதிராக நாம் உயிரையும் கொடுக்கலாம். மதத்தை எப்படி முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியும்? தொடக்கத்தில் பெரியாரிடத்திலிருந்து தள்ளி நிற்க இதெல்லாமும் சேர்ந்துதான் காரணமாக இருந்தன.

பெரியாரியர்களிலேயேகூட பெரியாரை சாதி ஒழிப்பாளராகப் பார்த்தவர்களைக் காட்டிலும் கடவுள் மறுப்பாளராகப் பார்த்தவர்கள் அதிகம். தொடக்கத்தில் நீங்களும் அப்படியே பார்த்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?
சொல்லலாம். கடவுள் மறுப்பு என்கிற தளத்தில் மட்டும் இல்லை; அவருடைய பிராமணிய எதிர்ப்பையும்கூட தொடக்கக் காலத்தில் சுருக்கித்தான் புரிந்துகொண்டிருந்தேன். என்னுடைய தாத்தா காதல் திருமணம் செய்துகொண்டவர். என் குடும்பத்தில் நான் உட்பட பலரும் சாதி கடந்து காதல் திருமணம் செய்துகொண்டோம். சாதிக் கலப்பு அல்லது சாதி மறுப்பு எங்கள் வீட்டில் சகஜமாகிவிட்டதால் சாதிப் பாகுபாட்டின் கொடுங்கோன்மையை வீரியமாக நான் புரிந்துகொள்ளவில்லை. என்னுடைய ஆசிரியர்களில் பலர் பிராமணர்கள். தன்னலம் கிடையாது. வேற்றுமை பாராட்டல் கிடையாது. பெரும் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்கள். அதனால், பிராமணர்கள் மீதும் பெரிய மதிப்பு எனக்கு உண்டு. இந்தக் காரணங்களால் அந்த வயதில் பெரியாரின் பிராமணிய எதிர்ப்பானது, ‘பிராமணர் எதிர்ப்பல்ல; சாதி ஒழிப்பின் மையம்’ என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேன். பிற்பாடுதான் பெரியார் முழுமையாகப் புரிபட்டார். ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் சாதியின், பிராமணியத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டேன். பெரியாருடைய கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு எல்லாமே சமத்துவத்துக்கான முழக்கம்தான். உண்மையில், சுயமரியாதைதான் பெரியாரின் மெய்யியல் - தத்துவம். பகுத்தறிவு என்பதேகூட பெரியாருடைய ஆய்வுமுறையே தவிர, அது அவருடைய மெய்யியல் கிடையாது. பெரியாரியத்தின் மையம் சமதர்மம். இந்தப் புள்ளியில்தான் மார்க்ஸுடன் பெரியாரை இணைக்கிறேன்.

பிராமணியத்தைப் பற்றிப் பேசுகையில், சாதியடுக்குக் கட்டுமானம், பாகுபாடுகள், தீண்டாமை இவற்றோடு மட்டும் அல்லாமல், அதனுடைய பிற பண்பு வடிவங்களைப் பற்றியும் பேசுகிறோம். உதாரணமாக, இந்தியாவில் நவீன அரசும் நவீன அறிவியலும் வளர்ச்சி முழக்கமும் பிராமணியத்தன்மை கொண்டிருப்பதைச் சொல்லலாம். பிராமணியத்தை விமர்சிக்கக் கூடிய நம்மைப் போன்றவர்கள், அப்படியே அபிராமணியத்தைப் பற்றியும் பேசலாம் என்று நினைக்கிறேன். பிராமணரல்லாத சமூகங்களிடம் உள்ள கலாச்சாரம், பிராமணியத்துக்கு மாற்றான பண்பை நாம் அபிராமணியம் என்று குறிப்பிடலாம் என்றால், இன்றைக்கு அதனுடைய நிலை என்ன? உதாரணமாக அது நவீன அரசு, நவீன அறிவியல், வளர்ச்சி போன்றவற்றை எப்படிப் பார்க்கிறது? பிராமணியத்தை விமர்சிப்பவர்கள் அபிராமணிய பண்பை வளர்த்திருக்கிறார்களா? அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எந்த மதிப்பீடுகளைக் கொண்டதாக இருக்கிறது?
இது ஒரு அபாரமான கேள்வி. ஆரியரும் திராவிடரும் இணைந்து செயல்படாமல் சாதியம் என்ற அமைப்பு இந்தியாவில் உறுதிப்பட வாய்ப்பில்லை. பிராமணர்கள் மட்டுமே பிராமணியத்தைக் கைக்கொள்ளவில்லை என்றாலும், பெருமளவில் பிராமண சமூகத்தின் பண்பே பிராமணியத்தின் பண்பாகவும் இருக்கிறது. அதன் கேடுகளையே நாம் விமர்சிக்கிறோம். மாற்று தொடர்பாகப் பேசுகிறோம். அபிராமணியம் என்று நீங்கள் ஒன்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது பிராமணரல்லாத சமூகங்களின் பண்புகளின் தொகுப்பாக, அவர்களுடைய மதிப்பீடாக இருக்க வேண்டும். இன்னொரு வகையில், பிராமணியத்தில் நாம் விமர்சிக்கும் கேடான விஷயங்களுக்கு மாற்றையும் அபிராமணியம் கொண்டிருக்க வேண்டும். அப்படியான பண்புகள் சமூகத்தில் இயல்பாக இருந்தனவா என்றால், இருந்தன. இப்போதும்கூட பழங்குடி சமூகங்களிடமும் கிராமங்களி லும் அவற்றில் எவ்வளவோ மிச்சம் இருக்கின்றன. பொதுக் கலாச்சாரத்தில் அவை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றனவா என்றால், இல்லை. இந்தியாவில் இன்றைய வாழ்க்கை என்பது பிராமணியத்தை விமர்சிப்பவர்களும் பிராமணியத்தை கைக்கொள்வதாகவே இருக்கிறது என்பதே நிதர்சனம்.

பெரியார் ஒரு மாற்றை முன்னெடுத்தார். உதாரணத்துக்கு, சுயமரியாதைத் திருமணம். பிற்பாடு அது வளரவில்லை. தேய்வதையும் பார்க்கிறோம். ஏன்?
பிராமணிய எதிர்ப்பு என்பது ஒவ்வொரு சமூகத்திலும் இரண்டு வகையில் நடக்க வேண்டும். ஒன்று, வெளி விமர் சனம். மற்றொன்று, உள் விமர்சனம். பிராமணரில் தொடங்கி தலித்துகள் வரை பின்னையது நடப்பதில்லை. அதனால்தான் ஆள் மாறினாலும் கலாச்சாரம் மாறவில்லை. ஆள் மாற்றத்தைக் காட்டிலும் முக்கியம் கலாச்சார மாற்றம். இந்த இடத்தில்தான் தமிழ் தேசியத்தை ஒரு மாற்றாக நான் முன்வைக்கிறேன்.

தமிழ் நிலத்தில் ஒரு மாற்று இருக்கிறது. ஆனால், தமிழ் தேசியம் என்று அதைச் சொல்ல முடியுமா? இன்றைக்குக் களத்திலுள்ள தமிழ் தேசியம் மேலும் நம்மைக் குறுக்குவதாக அல்லவா இருக்கிறது?
 
ஒருவகையில் இது சாதி தேசியமும்கூட அல்லவா?
உண்மைதான். இன்றைய அரசியல் அரங்கிலுள்ள பிரிவினை தமிழ் தேசியத்தை நான் குறிப்பிடவில்லை. என்னுடைய தமிழ் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் தரிசிக்கிறேன். கணியன்பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார் களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. செழுமையான தமிழ்க் கல்வி, சூழலை நசுக்காத தமிழ் வாழ்க்கை, எல்லோரையும் அரவணைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டது என்னுடைய தமிழ் தேசியம். சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் நிலம் முன்வைக்கும் அறம்தான் அதன் மையம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களிலும் இன்று நாம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மாற்றை முன்வைக்கக் கூடியது அது. சங்க இலக்கியத்திலிருந்து இதற்கான கச்சாப்பொருளை நான் பெறுகிறேன். எனக்கு தேசப் பேதம் இல்லை; மொழிப் பேதம் இல்லை; சாதி - மதப் பேதம் இல்லை என்ற பேருணர்வைக் கொண்டது என்னுடைய தமிழ்த் தேசியம். பெரியாரிடத்திலிருந்து பெறும் தொலைநோக்கின் தொடர்ச்சி அது.

தேசியம் எனும் கருத்துக்கே எதிரியாக இருந்தவர் பெரியார். “தேசியம் என்பதே புரட்டு; தேசாபிமானம் என்பது யோக்கியமற்ற சூழ்ச்சி” என்றவர். அமெரிக்க தேசியம், இந்திய தேசியம்போல, தமிழ் தேசியமும் ஒரு தேசியம்தான். தேசியத்தில் உள்ள எல்லா ஆபத்துகளும் தமிழ் தேசியத்திலும் தொடரத்தானே செய்யும்? பெரியாரை உங்கள் ஆசான்களில் ஒருவராகக் கருதும் நீங்கள், தமிழ் தேசியத்தை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறீர்கள்?அதே பெரியார்தானே “தமிழ்நாடு தமிழருக்கே!” என்கிறார்! அதற்குள் தமிழ் தேசியம் இருக்கிறதா, இல்லையா? “அரசு கூடாது” என்கிறார் மார்க்ஸ். ஆனால், அரசைக் கைப்பற்றித்தான் அரசு அற்ற நிலையை உருவாக்க முடியும் என்பதையும் மார்க்ஸியம்தான் சொல்கிறது. முரணியக்கத்தில்தான் வரலாறு இயங்குகிறது. மார்க்ஸியர் கள் கைக்கொள்ள வேண்டிய அரசியலும் இது.

ஆனால், இன்னமும் பெரியாரையே இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகளால் வரித்துக்கொள்ள முடியவில்லையே?

மார்க்ஸியர்களுடைய தோல்விக்கான முக்கிய காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே? திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டி இருந்ததாலேயே தமிழ் மரபையும் அவர்கள் ஒதுக்கினார்கள். திராவிட இயக்கத்தோடு தோழமையுடன் மார்க்ஸியர் கள் உரையாடியிருக்க வேண்டும். தமிழ் மெய்யியலை மார்க்ஸியர்கள் காண முடியாமல்போனது தற்செயலானது அல்ல. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையை பிராமணத் தலைவர்கள் ஆக்கிரமித்திருந்ததன் விளைவையும், இங்கே கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிராமணியத்தின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதையும் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். உயரிய லட்சியம் என்றாலும், அரசியல் தளத்தில் ஓருலகம் என்று ஒன்று கிடையாது. எந்தத் தத்துவமும் அந்தந்த நில எல்லைக்குள் ஒன்று கலக்கும்போதே அரசியல் அர்த்தம் பெறுகிறது. இந்தியா ஒரு கூட்டாட்சியாக, ஒன்றியமாக மட்டுமே நீடிக்க வேண்டும்; முடியும். இந்தியாவைப் பார்க்கும் விதத்தில் மட்டும் அல்ல; அறிவியல், கலை, இலக்கியம், மதம் இவை ஒவ்வொன்றை யும் பார்க்கும் விதத்தில் மார்க்ஸியர்களிடம் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தேசியம், கர்நாடகத்தில் கன்னட தேசியம் என்று மண்ணுக்கேற்ற மார்க்ஸியத்தை அவர்கள் தழுவ வேண்டும். மார்க்ஸ் முதல் மாவோ வரை இது அந்நியமானதல்ல.

முன்பு உங்களுக்கு மாவோயிஸத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆயுதவழிப் புரட்சியை ஆதரித்திருக்கிறீர்கள். இப்போது அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மார்க்ஸிய, லெனினிய, மாவோவியக் கூட்டுக் கலவை என்று அந்தச் சிந்தனையைச் சொல்லலாம். அது கனவு காணும் சமூகத்தின் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை. ஆனால், ஆயுதப் பாதையை இன்று நான் ஆதரிக்கவில்லை. வன்முறை நம்மைச் சார்ந்திருக்கும் சாதாரண மக்கள் மீது கூடுதலான அரச வன்முறைக்கும் சர்வநாசத்துக்குமே வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். சாரு மஜும்தார் காலத்திலேயே இங்கு மாவோவிய இயக்கங்கள் கட்டப்பட்ட விதத்தில் எனக்கு முரண்பாடு இருந்தது.

சாரு மஜும்தாரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள், இல்லையா?

சந்தித்திருக்கிறேன். எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, நான் மூன்று பேருமாகச் சேர்ந்து பார்த்தோம். சாரு மஜும்தார் கோயம்புத்தூர் வந்திருந்தார். சந்திக்க விரும்பினார். சென்றிருந்தோம். 3 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ராஜதுரை ஏராளமான கேள்விகளை அவரிடம் முன்வைத்தார். சாரு மஜும்தார் கொடுத்த பதில் திருப்தியாக இல்லை. நிறைய கற்பனையாக, மிகைப்படுத்தல்களாகப் பேசினார். கட்சி மீதோ, உள்ளூர் தலைமை மீதோ நாங்கள் முன்வைத்த எந்த விமர்சனத்தையும் அவர் ஆக்கபூர்வமாக எதிர்கொள்ளவில்லை. ‘இதே கொள்கையுடன் நீங்களும் ஒரு கட்சி தொடங்குங்களேன்’ என்றார். அவருக்குக் கடுமை யான ஆஸ்துமா பாதிப்பு அப்போது இருந்தது. அப்படியும் அவர் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்ததும், உழைத்ததும் எங்களுக்கு வியப்பையும் மதிப்பையும் தந்தது. ஆனால், நாங்கள் அவருடன் பயணிக்க முடியாது என்று எடுத்த முடிவில் தவறேதும் இல்லை என்ற எண்ணமே அவரைச் சந்தித்துத் திரும்பும்போது ஏற்பட்டது.

உங்களுடைய இலக்கியக் கோட்பாடுகள், தமிழ்நாட்டில் அதுவரையிலான மார்க்ஸிய இலக்கியச் சட்டகத்தை உடைத்தவை. ‘புதிய தலைமுறை’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’, ‘தமிழ் நேயம்’ இப்படி நீங்கள் பங்கெடுத்த சிற்றிதழ்கள் யாவுமே அரசியல், சுற்றுச்சூழல், தத்துவத்துக்கு இணையாக கலை - இலக்கியத்திலும் ஒரு மாற்றுச் சட்டகத்தை உருவாக்க முனைந்திருக்கின்றன. எது இதற்கான அடிப்படையாக இருந்தது? என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?
நமக்குள் ஒரு டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி, சோல்ஸெனித்ஸின் ஏன் தோன்றவில்லை என்ற கேள்வி தான் அதற்கான அடிப்படை. ‘கலை இலக்கியத்தில் உருவத்துக்கு, கலையுணர்வுக்கு, அழகியலுக்கு முதன்மை இல்லை; உள்ளடக்கமாகிய அரசியலுக்கே முதன்மை.’ இதுதான் கட்சி மார்க்ஸியர்களின் திறனாய்வுப் பார்வை யாக இருந்தது. ஸ்டாலின் காலத்திய ஸ்தானோவியத்தின் தொடர்ச்சி இது. இலக்கியத்தில் காமத்தைக்கூட வெறுத்தார்கள். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எழுத்துகளை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கினார்கள். முற்றிலும் அதிகார வர்க்க கண்ணோட்டத்திலேயே இலக்கியம் அணுகப்படுமானால், அத்தகைய இலக்கியம் உருப்படாது என்று நான் எழுதினேன். இன்றைக்கு நிறைய மாறியிருக்கிறதே! சிரமங்களாக எதுவும் தோன்றவில்லை. பத்திரிகைகள் நடத்தியதுகூட. ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு பத்திரிகையைக் கொண்டுவந்துவிடுவோம். எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, புலவர் ஆதி இப்படி நிறைய நண்பர்கள். போட்டி போட்டுக்கொண்டு வாசிப்போம். கேள்விப்படும் புதிய விஷயங்கள், சிந்தனைகள் யாவையும் சுற்றியிருப்பவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்பட்டோம். கடமையாக நினைத்து, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்ததால் எதுவுமே இழப்பாகவோ, சுமையாகவோ தெரியவில்லை.

விமர்சனங்களைக் கடந்து இந்தியாவில் இதுவரையிலான தலைவர்களில் மகத்தான இடதுசாரித் தலைவர் என்று யாரைச் சொல்வீர்கள்?
காந்தி, அம்பேத்கர், பெரியார். கொடிய சமத்துவ எதிரியான, ஒவ்வொரு இந்திய உடலுக்குள்ளும் உறைந் திருக்கும் தீண்டாமையின் ஆகிருதியை நமக்கு உணர்த்துகிறார் அம்பேத்கர். அந்தத் தீண்டாமையைத் தத்துவமாக மாற்றும், இந்தியாவின் வலிய எதிரியான பிராமணியத்தை எதிர்ப்பதற்காகவே ஒரு இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் அதனுடைய ஆகிருதியை உணர்த்துகிறார் பெரியார். எந்த அநீதிக்கும் எதிரான போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை நமக்குத் தருகிறார் காந்தி. நாம் அத்தனை பேரும் சாகத் துணிந்து சாத்வீகமாக உட்கார்ந்துவிட்டால், எப்படியான அதிகாரமும் பணிந்துதான் ஆக வேண்டும். ஒரு சாமானிய இந்தியனுக்கு இவர்களைக் காட்டிலும் கைக்கொள்ளப் பற்றுக்கோல்கள் இல்லை.

தமிழ் மெய்யியல், தமிழ் அறம் என்றெல்லாம் பேசுகிறோம். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய அரசியல் - சமூகச் சூழலில் இவையெல்லாம் தொடர்ந்தும் நீடிக்க முடியுமா?
தமிழ் அறம் என்பது தொன்றுதொட்டது - இன்று நம்முடைய புழக்கத்தில் இருக்கிற சமதர்மத்துக்கு நிகரானது. இந்தத் தமிழ் அறமானது, தமிழ் இலக்கியம் முழுவதுமே இருக்கிறது. சித்தர் இலக்கியம் இதில் மையம் கொள்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளை, சவால்களைத் தாங்கி நின்ற சக்தி தமிழ் மெய்யியலுக்கு உண்டு. உலகம் இருக்கும் வரை அறத்துக்கான தேட்டமும் இருக்கும்.

ஜூன், 2018, ‘தி இந்து’  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக