ஞாயிறு, 15 ஜூலை, 2018

பாபநாசம் திரைப்படமும்
குட்டி முதலாளித்துவக் குள்ளர்களின் அழுகல் சிந்தனையும்!
-----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் படங்கள் குறித்து பெருமை கொள்ளும் வாய்ப்பைத்
தமிழ்த் திரையுலகம் அபூர்வமாகவே தருகிறது. ஆகப் பெரும்
பான்மையான தமிழ்ப்பட இயக்குனர்கள் சமூக விரோதி
களாகவும் குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களாகவும்
இருந்து வரும் ஒரு சூழலில், தரமான சமூகப் பயன்பாடு
கொண்ட படங்கள் உருவாவதற்கு வழியே இல்லை.
அறிவியலின் வளர்ச்சியை முற்ற முழுக்கப் பயன்படுத்திக்
கொண்டு, தனது சதைப்பிண்டங்களை வளர்த்துக் கொள்ளும்
தமிழ்த்திரையுலகம், அறிவியல் கதைப்பின்னல் கொண்ட
உருப்படியான படங்களை மக்களுக்கு வழங்குவது குறித்துக்
கனவிலும் சிந்தித்தது இல்லை என்பதுதான் வரலாறு.
சிந்தித்தாலும் அவர்களால் இயலாது என்பது யதார்த்தம்.
உபபாண்டவமும் வெண்முரசும் தரும் தமிழ் எழுத்தாளர்கள்
இன்னும் மகாபாரதத்தையே தாண்டவில்லை என்னும்போது,
அறிவியலை அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது
பெருமூடத்தனம் ஆகிவிடும். ஆக, தமிழ் இலக்கிய உலகில்
அறிவியல் இல்லை என்னும்போது தமிழ் சினிமாவில்
மட்டும் எங்கிருந்து வரும்? சட்டியில் இருந்தால்தானே
அகப்பையில் வரும்!

ஆனால், அமெரிக்காவில், மேலை ஐரோப்பிய நாடுகளில்,
ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாடுகளில், பரந்துபட்ட
மக்களின் (அதாவது சராசரிப் பாமர மக்களின்) அறிவியல்
உணர்வும் புரிதலும் உயர்ந்த கட்டத்தில் உள்ளன. செக்ஸ்
என்பது சினிமாவில் எவ்வளவு இயல்பானதோ, எவ்வளவு
சாதாரணமானதோ அவ்வளவு சாதாரணமாக அறிவியல்
செய்திகளும் கருத்துக்களும் அவர்களின் சினிமாக்களில்
இடம் பெறுகின்றன.அனைவராலும் புரிந்து கொள்ளப்
படுகின்றன. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நிலையைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.

இச்சூழலில் கமலஹாசன் நடித்து வெளிவந்திருக்கும்
பாபநாசம் என்ற படம் கவனிப்புக்கு உரியதாகிறது.
இப்படத்தில் கமல் வெறும் நடிகர் மட்டுமே. படத்தை
மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
உரையாடல் ஜெயமோகன். இது 2013இல் மோகன்லால்
நடித்து மலையாளத்தில் வெளிவந்த திருஷ்யம் என்ற
படத்தின் தமிழ்ப்பதிப்பு ஆகும். (திருஷ்யம் = காட்சி).

இப்படம் ஜப்பானியத் திரைத்தொடர் ஒன்றின் தழுவல் என்று
கூறப்படும் விடயங்கள் நமது அக்கறைக்கானவை அல்ல.
கலிலியோ என்ற ஜப்பானியத் தொலைக்காட்சித் தொடரின்
ஒரு எப்பிசோட் ஆன "SUSPECT X" மற்றும் THE PERFECT NUMBER
என்னும் கொரியத் திரைப்படம் ஆகிய இரண்டும் திருஷ்யம்
மற்றும் பாபநாசம் படங்களின் மூலம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் அறிவியல் சூழல் இல்லாததால் பிற
நாடுகளிடம் கடன் பெற வேண்டியுள்ள, நம் சார்பு
நிலையை இது காட்டுகிறது.

இங்கு கூறப்படும் அனைத்துத் திரைப்படங்களின் மூலம்
யாதெனில், THE DEVOTION OF SUSPECT X என்ற 2005இல்
வெளியான, கெய்கோ ஹிகாஷினோ (Keigo Higashino)
என்ற பொறியாளர் ஜப்பான் மொழியில் எழுதிய நாவலே.
இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.
Flipcart மூலம் ரூ 399 விலையில் (டெலிவரி கட்டணம்
உட்பட) இந்நாவலை வாங்கினேன்; நேற்றுத்தான்
படித்து முடித்தேன். இந்நாவல் இருபது லட்சம் பிரதிகள்
விற்றுள்ளது.

ஓர் அபலைத்தாயும் மகளும் சேர்ந்து, தங்கள் வாழ்வில்
குறுக்கிட்ட ஒரு கயவனை எதேச்சையாகக் கொன்று
விடுகின்றனர். இப்பெண்ணின் அண்டை வீட்டுக்காரர்
ஒரு கணித நிபுணர். அவர் கொலையை மறைத்து,
பிணத்தை அப்புறப்படுத்தி அப்பெண்ணுக்கு உதவி புரிகிறார்.

போலிஸ் வருகிறது. போலிசின் குறைந்த மூளையால்
இப்புதிருக்கு விடைகாண முடியவில்லை. எனவே ஒரு
இயற்பியல் அறிஞரை இப்புதிருக்கு விடைகாணக் கோரி
போலிஸ் அமர்த்துகிறது. இதன் பிறகு, கதை முழுவதும்
mathematician versus physicist என்று ஆகி விடுகிறது.

நாவலில் வரும் இயற்பியலாளர் பாத்திரத்தின் பெயர்
டாக்டர் மானபு யுகாவா. நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியரான ஹிடேகி யுகாவாவின் பெயர்
கதாபாத்திரத்துக்கு வைக்கப் பட்டுள்ளது.
ஜப்பான் விஞ்ஞானி யுகாவா, 1949இல் மேஸான் துகள்களைக்
கண்டறிந்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.

இந்த நாவலின் இந்தியப் பிரதிபலிப்புகளாக, திருஷ்யம்
பாபநாசம் படங்கள் விளங்குகின்றன. மலையாள
வாசகர்களை விடத் தமிழ் வாசகர்கள் அறிவில்
குறைந்தவர்கள் என்பதைக் கணக்கில் கொண்டு,
பாபநாசம் படத்தில் கமல் தேவையான மாற்றங்களைச்
செய்துள்ளார்; படத்தின் மொத்த நேரத்தையும் அதிகரித்து
உள்ளார்.

Mathematician versus Physicist என்பதுதான் படம். எனினும்,
படத்தில் எங்கும் கணிதச் சூத்திரங்களோ இயற்பியல்
சமன்பாடுகளோ இல்லை. அவை நாவலில் மறைந்து 
இருக்கின்றன.
மூளை உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம்!
***************************************************************
2015ல் எழுதியது மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக