ஞாயிறு, 15 ஜூலை, 2018

SVR பற்றி ஜெயமோகன்
-------------------------------------
தமிழ்ச்சூழலில் மார்க்ஸியக் கோட்பாடுகள் வெறும் பொருளியல் அடிப்படையிலேயே பேசப்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது. பண்பாட்டை முழுக்க முழுக்கப் பொருளியலடிப்படையிலேயே அணுகிவந்தனர் அக்கால மார்க்ஸியர். அது இயந்திரவாத மார்க்ஸியம் என சொல்லப்பட்டது.
அந்தக்காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் உள்ளுறையாக இருந்த இன்னொரு பண்பாட்டு அணுகுமுறையை வெளியே கொண்டு வந்து விவாதித்தவர்கள் என தமிழ்ச்சூழலில் முதன்மையாகச் சொல்லப்படவேண்டியவர்கள் எஸ்.என்.நாகராசன், ஞானி ஆகியோர். அவர்களின் தொடர்ச்சியாக அவற்றை நேர்த்தியான நூல்களாக முன்வைத்தவர் எஸ்.வி.ராஜதுரை.
மனிதனின்உழைப்பில் உள்ள படைப்பூக்கத்தன்மையை நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் வெவ்வேறு வகைகளில் அழிக்கின்றன. அதன் விளைவாக உழைப்பில் இருந்து அன்னியமாகும் தொழிலாளி ஆன்மீகமான வெறுமையைச் சென்றடைகிறான். அந்த ஆன்மீக வெறுமையே அவனை கலாச்சார சிக்கல்களை நோக்கி கொண்டுசெல்கிறது.
மார்க்ஸ் அவரது இளம்வயதில் முன்வைத்த இந்த கோட்பாட்டை அவரே பிற்காலத்தில் நிராகரித்தார். ஆனால் மார்க்ஸால் நிராகரிக்கப்பட்டாலும் இது முக்கியமானது என உணர்ந்த அல்தூஸர் போன்ற பல ஐரோப்பிய அறிஞர்கள் இதை மேற்கொண்டு வளர்த்தெடுத்தனர்
இந்த அன்னியமாதல் கோட்பாட்டையும் அதையொட்டிய ஐரோப்பிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களையும் நல்ல தமிழில் அறிமுகம் செய்து தமிழக மார்க்ஸிய விவாதங்களில் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டு நோக்கு உருவாக எஸ்.வி.ராஜதுரையின் அன்னியமாதல் என்ற முக்கியமான நூல் வழிவகுத்தது
அதன் வழிநூல்களாகிய அல்தூசர் ஓர் அறிமுகம், பிராங்கப்ர்ட் மார்க்ஸியம் போன்றவையும் இன்றும் தமிழ் வாசகனுக்கு முக்கியமானவையே.
2. மார்க்ஸிய அறம் என்பது என்ன என்ற வினா தமிழ்ச்சூழலில் என்றும் இருந்தது. சம்பிரதாய மார்க்ஸியர்கள் அறம் என்பது ஆளும்வர்க்கத்தால் ஒடுக்க்கப்படும் சமூகங்கள் மீது ஒரு கட்டுப்பாடாக உருவாக்கப்பட்டது மட்டுமே என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். தொழிலாளிவர்க்கப்புரட்சி உருவாகும்போது அப்புரட்சியின் வெற்றியை சாத்தியமாக்கும் எதுவும் அறமே என்றும் , அதுவே புரட்சிகர அறம் என்றும், மார்க்ஸியர் அந்த அறத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்றும் சொன்னார்கள்
மார்க்ஸியஅறம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு விவாதித்த நூல்களில் எஸ்.வி.ராஜதுரையின் ‘ருஷ்யப்புரட்சி-இலக்கிய சாட்சியம்’ என்ற நூல் முக்கியமானது. புரட்சிகர அறம் என்பதை ஒரு சந்தர்ப்பவாதமாகப் புரிந்துகொண்ட ருஷ்ய மார்க்ஸியத் தலைமை எப்படி அறமில்லாத ஒரு நிலையை உருவாக்கியது, அது எப்படி படிப்படியாக அவர்களையே அழிப்பதாக ஆகியது என அது விளக்குகிறது.
அந்தத் தேடலை புஷ்கின், தல்ஸ்தோய், போரீஸ் பாஸ்டர்நாக் என பல இலக்கியமேதைகளின் ஆக்கங்கள் வழியாகச் சொல்லிச்செல்லும் அந்த நூல் ஓர் இலக்கியச் சாதனை. அதில் பாஸ்டர்நாக் பற்றிய பகுதி ஓர் உச்சம்.
எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு இந்த அடிப்படையில் மிக முக்கியமானது. அவரது பிற்காலகட்ட ஆளுமைவீழ்ச்சிகள், சமரசங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவரது பங்களிப்பு நம் சிந்தனைச்சூழலில் அப்படியேதான் இருக்கும்.
ஜெ

1 கருத்து:

  1. காந்தி,அல்தூஸர்,அந்தோனியோ கிராம்ஸி,புராங்போட் மாக்ஸியம்,மவோ ஏ சேதுங்,பின் நவீன சிந்தனையாளர்கள் போன்றவர்களுக்கு இடையிலான ஒற்றுமை-வேற்றுமைகளை விளக்க முடியுமா !
    இதில் காந்தியியம் எல்லா சித்தாந்தங்களுக்கும் மேலால் எவ்வாறு பார்க்கப்பட முடியும்??

    பதிலளிநீக்கு