சனி, 28 ஜூலை, 2018

மார்க்சிய வரலாறும் சிந்தனைக் குள்ளர்களும்!
மார்க்சிய அறிவைப் பெறுவதற்குப்
பெருந்தடையாக இருக்கும் பாராயணவாதிகள்!
கட்சி கட்டுதல் என்ற கோட்பாடு
லெனினியத்தின் மகத்தான பங்களிப்பு!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
லெனினுக்கும் ரோசாவுக்கும் இடையிலான
ஒரு கருத்து மோதல் (polemic) மார்க்சிய வரலாற்றில்
மிகவும் புகழ் பெற்றது.  1904-05ல் தொடங்கி அதன்
பின்னரும் தொடர்ந்த இக்கருத்தியல் விவாதம்
பற்றி மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர்கள்
அறிவார்கள்.

ரோசா லக்சம்பெர்க் (Rosa Luxemberg  1871-1919)
ஒரு பெண்மணி. போலந்தில் பிறந்து
ஜெர்மனியில் வாழ்ந்தவர். மார்க்சியத்
தத்துவஞானி மற்றும் தலைவர். மார்க்சைப்
போலவே இவரும் ஒரு யூதர். இவர் பொருளியலில்
டாக்டர் பட்டம் பெற்றவர். ஜெர்மனியின்
ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப் பட்டார்.
47 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் மார்க்சிய
உலகில் அழியா இடம் பெற்றவர் ரோசா.

லெனின் ரோசா கருத்து மோதல் எந்தப் பொருள்
பற்றியது? கட்சி கட்டுவது (party building) பற்றியது.
இது குறித்து அறிய விரும்புவோர், "ரஷ்ய சமூக
ஜனநாயகத்தின் அமைப்புப்  பிரச்சினைகள்"
("Organisational questions of Russian Social Democracy") என்ற
1904ல் எழுதப்பட்ட ரோசாவின் கட்டுரையைப்
படிக்கவும். இது தமிழில் மொழிபெயர்க்கப்
படவில்லை. எனவே வாசகர்கள் ஆங்கில
மூலத்தைப் படிக்கவும்.

கட்சி கட்டுதல் பற்றிய லெனினின் முக்கியக்
கோட்பாடு இதுதான். பாட்டாளி வர்க்கத்தின்
முன்னணிப் படையாக இருப்போரைக் கொண்டு
(vanguard of the proletariat)  மையப்படுத்தப்
பட்ட கட்சி கட்டுவது என்பதே. இங்கு லெனின்
முன்வைத்த வேன்கார்டு (vanguard) என்ற
சொல்லாட்சியைக் கவனிக்கவும். மொத்தப்
பாட்டாளி வர்க்கத்திலும் உள்ள மிகவும்
முன்னணியான பகுதியினரையே லெனின்
குறிப்பிடுகிறார்.

இது மென்ஷ்விக்குகள் முன்வைத்த பரந்துபட்ட
கட்சி (broad party) என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும்
எதிரானது என்பதை ஏற்கனவே (இப்பொருள்
பற்றிய முந்திய கட்டுரையில்) பார்த்தோம்.

ரோசாவின் விமர்சனம் என்ன? "கட்சியின்
மத்தியக் கமிட்டியே கட்சியின் மெய்யான
மையக்கரு என்பதும் ஏனைய எல்லா
அமைப்புகளும் மத்தியக் கமிட்டியின்
கட்டளைகளை நிறைவேற்றப் பயன்படும்
அமைப்புகளே" என்பதுமான லெனினின்
கோட்பாட்டை ரோசா விமர்சித்தார்.

பாட்டாளி வர்க்கமே  சமூகத்தில் உள்ள
வர்க்கங்களில் ஆகப் புரட்சிகரமான வர்க்கம்
என்பதே மார்க்சின் போதனை. அந்தப் புரட்சிகர
வர்க்கத்திலும் வடிகட்டி ஒரு முன்னணிப்
படையைக் கொண்டு கட்சி கட்டுகிறோம்.
அந்தக் கட்சியிலும் மையக்கருவான
அமைப்பாக ஒரு மத்தியக் கமிட்டியை
உருவாக்குகிறோம். இவ்வாறு மிகவும்
குறுகிய சிறுபான்மையான (micro minority)
மத்தியக் கமிட்டிக்கு அனைத்துப்
பொறுப்புகளையும் அதிகாரத்தையும்
கொடுப்பது ஏற்புடையதல்ல என்று
கருதினார் ரோசா.

இதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பங்கையும்
திரளான பாட்டாளி வர்க்கத்தினரின் நேரடி
நடவடிக்கையையும்  (independent direct action of the
proletarian masses) வலியுறுத்தினார் ரோசா.
அனைத்தையும் மத்தியக் கமிட்டியே
தீர்மானிப்பது என்பது பாட்டாளி வர்க்கத்தின்
படைப்பாற்றலுக்கு இடமளிக்காமல் விடுவதாகும்
என்றும் ரோசா சுட்டிக் காட்டினார்.

இருப்பினும் லெனின் ரோசா இருவருக்கும் இடையில்
உடன்பாடான விஷயங்கள் நிறையவே இருந்தன.
பொதுவான சோஷலிச லட்சியங்களில் (socialist goals)
இருவரும் ஒன்றியே இருந்தனர். ரோசாவின்
மறைவின்போது (1919 ஜனவரி) லெனின் ரோசாவுக்கு
சிறப்பு மிக்க புகழாஞ்சலி செலுத்தினார்.

கட்சி கட்டுதல் என்பதைப் பொறுத்து
லெனின்-ரோசா விவாதம் மட்டுமல்ல, ஐரோப்பா
முழுவதும் பல்வேறு தளங்களில் பல்வேறு
விவாதங்கள் நடந்தன. ரஷ்யப் புரட்சிக்கு
முன்பான மார்க்சியத்தின் வரலாறு பற்றி
ஆழ்ந்து கற்றோர் இதை அறிந்திருப்பர்.

மார்க்சிய வரலாற்றில் கட்சி கட்டுதல் (party building)
என்ற பொருளில் இவ்வளவு பரந்த மற்றும்
ஆழமான (comprehensive and deep) விவாதம்
எழுந்ததற்குக் காரணம் என்ன?

மார்க்ஸ் காலத்திலேயே தொழிலாளி வர்க்கக்
கட்சிகள் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தன.
மார்க்சின் ஜெர்மனியில் சமூக ஜனநாயகக்
கட்சி (SDP) இருந்தது. மார்க்சின் சீடர்களான
ஆகஸ்ட் பெபேல், வில்லம் லீப்னஹெட் ஆகியோர்
அக்கட்சியின் புகழ்பெற்ற தலைவர்களாக இருந்தனர்.
மேலும் ஜெர்மன் நாடாளுமன்றமான  "ரீச்ஸ்டாக்"கின்
தேர்ந்தெடுக்கப்பட்ட சோஷலிஸ்ட் உறுப்பினர்கள்
இவ்விருவரும். மேலும் ஐரோப்பாவின் பிற
நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் இருந்தன.

என்றாலும், மனிதகுல வரலாற்றில் கம்யூனிஸ்ட்
கட்சி  என்ற கோட்பாடு (concept) முதன் முதலில்
லெனினால் மட்டுமே முன்வைக்கப் படுகிறது.
தான் உருவாக்க இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின்
ஒவ்வொரு அம்சத்தையும் மிகவும் பருண்மையாக
முன்வைத்தார் லெனின்.

அப்படியானால் மார்க்சும் எங்கல்சும் "கம்யூனிஸ்ட்
கட்சி கட்டுதல்" பற்றி திட்டவட்டமான வரையறை
எதுவும் தரவில்லையா? இதற்கான பதில் வியப்பைத்
தரும் விதத்தில் இல்லை என்பதே.

கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது பற்றிய திட்டவட்டமான
வரையறை எதையும் மார்க்சும் எங்கல்சும்
தரவில்லை என்பது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சி
கட்டலாமா என்ற கேள்விக்கு நேர் எதிரான
பதிலையே  மார்க்சும் எங்கல்சும் உறுதிபடத்
தெரிவித்து உள்ளனர்.

மார்க்சியத்தைக் கசடறக் கற்காதவர்களும்,
கொஞ்ச நஞ்சம் கற்றதைக்கூடச் சரியாகப் புரிந்து
கொள்ளாதவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி என்று
தனியாக ஒரு கட்சி தேவையில்லை என்ற மார்க்ஸ்
எங்கல்சின் போதனையைக் கேட்டு அதிர்ச்சி
அடையலாம். பாராயணவாதிகளாலும்
நுனிப்புல்லர்களாலும் மார்க்சைச் சரியாகப்
புரிந்து கொள்ள இயலாது.

ஆனால் மார்க்ஸ் எங்கல்சின் போதனையை
in letter and spirit புரிந்து கொண்டவர்களுக்கு, அதாவது
எழுத்து பூர்வமாக மட்டுமின்றி உணர்வு
பூர்வமாகவும் புரிந்து கொண்டவர்களுக்கு எவ்வித
அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை.

"ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்து
கம்யூனிஸ்டுகளின் நிலை என்ன?" என்ற கேள்வியை
எழுப்பி அதற்கு பதிலும்  தருகின்றனர் மார்க்சும்
எங்கல்சும்.

"ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு
எதிராக, கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்கென்று
தனியாக ஒரு கட்சியை உருவாக்கிக் கொள்ள
மாட்டார்கள்"  என்று பிரகடனம் செய்தனர்
மார்க்சும் எங்கல்சும். In unequivocal terms, in unambigous
terms செய்யப்பட்ட பிரகடனம் இது.
( பார்க்க: கம்யூனிஸ்ட் அறிக்கை, 1848, அத்தியாயம்-2,
பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்களும், முதல் பத்தி,
முதல் வாக்கியத்தில் இருந்து தொடர்ச்சியாக)

 மார்க்சியத்தின் மூல ஆவணங்களில் ஒன்று
கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகும் (Communist Manifesto).
உலகம்  முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள்
அனைவருக்குமான பிரகடனம் இது. இதில் மிகத்
தெளிவாகவும் தீர்மானமாகவும்
"கம்யூனிஸ்டுகள் தங்களுக்கென்று
ஒரு கட்சியை உருவாக்க மாட்டார்கள்" என்று
மார்க்சும் எங்கல்சும் பிரகடனம் செய்கின்றனர்.

ஆங்கில வாசகங்கள் இதோ!
In what relation do the Communists stand to the proletarians as a
whole?

The Communists do not form a separate party opposed to the other
working-class parties.
(Communist manifesto, Marx Engels, 1848, Proletarians and Communists)

மார்க்ஸ் எங்கல்ஸ் மேலும் கூறுகின்றனர்:

"அவர்கள் (கம்யூனிஸ்ட்டுகள்) தங்களுக்கென்று
குழுக்களுக்கே உரித்தான கோட்பாடுகள்
எதையும் சொந்தமாக உருவாக்கிக் கொள்ள
மாட்டார்கள்; அவற்றின் மூலம் பாட்டாளி
வர்க்க இயக்கத்திற்கு வடிவம் கொடுப்பதையோ
வார்த்தெடுப்பதையோ செய்ய மாட்டார்கள்".

(They have no interests separate and apart
from those of the proletariat as a whole. They do not set up any
sectarian principles of their own, by which to shape and mould
the proletarian movement.) Ibid.

தொடர்ந்து மார்க்ஸ் எங்கல்ஸ் கூறுவது:-

"ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளி வர்க்கக்
கட்சிகளின் மிகவும் முன்னேறிய மற்றும்
தீர்மானகரமான பகுதியினர் கம்யூனிஸ்டுகள்".

The Communists, therefore, are on the one hand, practically, the most
advanced and resolute section of the working-class parties of every country,
that section which pushes forward all others; on the other hand,
theoretically, they have over the great mass of the proletariat the
advantage of clearly understanding the line of march, the conditions,
and the ultimate general results of the proletarian movement.
The immediate aim of the Communists is the same as that of all other
proletarian parties: formation of the proletariat into a class, overthrow
of the bourgeois supremacy, conquest of political power by the proletariat.

வாசகர்கள் முழுப்பகுதியையும் படித்துப் பார்க்க
வேண்டும்.புரிந்து கொள்ள வேண்டும்.

பாட்டாளிகளை ஒன்று படுத்தி ஒரு வர்க்கமாக
உருவாக்குவதன் மூலம், பூர்ஷ்வா வர்க்க
ஆட்சியை வீழ்த்தி அரசியல் அதிகாரத்தைக்
கைப்பற்ற முடியும் என்று மார்க்சும் எங்கல்சும்
கருதினர். எனவே கம்யூனிஸ்டுகளுக்கு
கட்சி என்ற ஒரு அமைப்பு தேவையில்லை
என்று மார்க்சும் எங்கல்சும் கருதினர்.

இதற்கு மாறாக, கம்யூனிஸ்டுகளுக்கு உருக்குப்
போன்ற உறுதியுடன் கூடிய ஒரு கட்சி வேண்டும்
என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தார் லெனின்.
அதைச் செயல்படுத்தி வெற்றியும் அடைந்தார்
லெனின். எனவேதான் மார்க்சிய வரலாற்றில்
கட்சி  கட்டுதல் (party building) என்ற கோட்பாடு
லெனினின் பங்களிப்பு என்று மார்க்சிய
ஆய்வாளர்களால் ஏற்கப் படுகிறது.

மார்க்சியத்தைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும்
மார்க்சிய வேடம் தரித்துள்ள சில குட்டி
முதலாளித்துவ அற்பர்கள் பெருந்தடையாக
உள்ளனர். நுனிப்புல்லர்களும் பாராயணவாதிகளும்
கட்சி அணிகள் மார்க்சியம் கற்பதற்குப்
பெருந்தடையாக உள்ளனர். அவர்களை அம்பலப்
படுத்தி முறியடிப்பதன் மூலமே மார்க்சியக்
கல்வியைப் பரவலாக்க இயலும்.
*****************************************************


 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக