வியாழன், 26 ஜூலை, 2018

மார்க்சிய நோக்கில்
சிறந்த கலைச்சொல்லாக்க அறிஞர்
சி பா ஆதித்தனாரே!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
மறைந்த சி பா ஆதித்தனார் சிறந்த தமிழறிஞர்.
தமிழ்ப் பற்றாளர். தினத்தந்தி நாளிதழின்
நிறுவனர் மற்றும் ஆசிரியர். பள்ளிக்கே சென்றிராத
எழுத்தறிவு கூடப் பெற்றிராத எளிய மக்களுக்கு
தினத்தந்தி மூலம் கல்வி கற்பித்தவர்; தமிழ்
கற்பித்தவர். அவரின் தினத்தந்தி நாளிதழ்
ஆயிரம் தொடக்கப் பள்ளிகளுக்குச் சமம்.
ஆதித்தனார் ஒரு முதலாளியும் (பூர்ஷ்வா) ஆவார்.

தினத்தந்தி வெளிவந்த காலத்தில்,மதுரையில் இருந்து
"தமிழ்நாடு" என்று ஒரு நாளிதழ் வந்தது. கருமுத்து
தியாகராசன் செட்டியார் அதை நடத்தி வந்தார்.
அவர் யாரினும் கூடுதலான தமிழ்ப் பற்றாளர்;
உணர்வாளர்; அறிஞர்.

ஆனால் ஆதித்தனாருக்கு நேர் எதிரான கோட்பாட்டைப்
பின்பற்றி தமிழ்நாடு இதழை நடத்தி வந்தார்.
தனித்தமிழாக இருக்க வேண்டும் என்பதற்கு
மட்டும் அழுத்தம் கொடுத்தாரே தவிர, மக்களுக்குப்
புரிய வேண்டும் என்ற நோக்கமே கருமுத்து
தியாகராசன் செட்டியார் அவர்களுக்கு இல்லை.
1960களில் நான் சிறுவனாக இருந்தபோது
தமிழ்நாடு இதழை வாசிக்க முயன்றவன். ரஷ்யா
என்பதை உருசியா என்று எழுதி இருப்பார் செட்டியார்.

இதன் விளைவாக, தமிழ்நாடு நாளிதழ் மக்களால்
புறக்கணிக்கப்பட்டது. செட்டியாரும் பத்திரிகையை
இழுத்து மூடினார். பல ஆலைகளை வெற்றிகரமாக
நடத்திய செட்டியாரால் ஒரு நாளிதழை நடத்த
முடியவில்லை. காரணம் அவர் பின்பற்றிய
மக்கள் விரோத தனித்தமிழ்க் கொள்கையே.

அதே நேரத்தில், யாரினும் கூடுதலான தமிழ்ப்
பற்றாளரான ஆதித்தனாரோ தினத்தந்தி நாளிதழை
வணிகரீதியாகவும் சமூக ரீதியாகவும்
வெற்றிகரமாக நடத்தினார். ஆதித்தனாரிடம்
இருந்து தமிழ்ச் சமூகம் பாடம் கற்றுக் கொள்ள
வேண்டும்.

நாள்தாள் எழுத்தாளர் கையேடு என்ற ஒரு
நூலை ஆதித்தனார் எழுதி இருக்கிறார். அது
எனக்கு ஒரு பைபிளாக இருந்தது. என்னுடைய
தமிழ் எழுத்துக்களின் எளிமைக்கு ஆதித்தனார்
அவர்களும் ஒரு காரணம்.

1970களில் தமிழ்நாட்டில் முதன் முதலாக டிவி
வந்தது. அப்போது ஆதித்தனார் தினத்தந்தியில்,
"இன்று முதல் தமிழ்நாட்டில் "பட ரேடியோ"
அறிமுகம் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டார்.
டிவி என்பதற்கு பட ரேடியோ என்ற சொல் அற்புதமான
சொல். அக்காலத்தில் டிரான்சிஸ்டரை கைரேடியோ
என்று சொல்லும் வழக்கம் இருந்தது. கைக்கடிகாரம்,
கைக்குழந்தை என்பது போல், கைரேடியோ.

புதிய சொல்லை உருவாக்கும்போது அது மக்களுக்குப்
புரிய வேண்டும் என்பதில் அழுத்தம் தருபவர்
ஆதித்தனார். முந்தின நாள் இரவு  தினத்தந்தியில்
எழுதிய புதிய சொல் மக்களுக்குப் புரிந்திருக்கிறதா 
என்று மறுநாள் காலை டீக்கடையில் அமர்ந்து
தினத்தந்தி படிப்பவர்களின் எதிர்வினையைக்
குறித்துக் கொள்வார் ஆதித்தனார். இதுதான்
புறநிலை யதார்த்ததுடன் தமது அகநிலை
பொருந்தி நிற்கிறதா என்று ஆராயும் வழி.
இதுதான் பொருள்முதல்வாத வழி. இதுதான்
மார்க்சிய வழி.

மற்றவர்கள் அப்படி அல்லர். அவர்கள் தங்களின்
அகநிலையை (subjectivity)  ஆய்வுக்கு உட்படுத்துவது
இல்லை. இது கருத்துமுதல்வாதப் பார்வை.
மக்கள் விரோதப் பார்வை. மார்க்சியத்துக்கு
எதிரான பார்வை.

காங்கிரசின் ஐந்தாண்டுத் திட்டங்களை ஒட்டி
அன்றைய அரசுகள் புதிய திட்டப்பணிகளை
முன்னெடுத்தன. நிர்மாணத் திட்டம் என்று
இதை எழுதினார் ஆதித்தனார். இது மக்களுக்குப்
புரியவில்லை என்பதுடன் நிர்மாணம் என்பதை
நிர்வாணம் என்றே பலரும் உணர்ந்ததால்,
மறுநாளே நிர்மாணத் திட்டம் என்ற பெயரை
மாற்றி, ஆக்கவேலைத் திட்டம் என்று எழுதினார்
ஆதித்தனார்.

பேச்சு வழக்கில் உள்ள தமிழே உயிரோட்டமான
தமிழ்; அதைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்.
இதுவே ஆதித்தனாரின் பொன் விதி (Golden rule).

ஆக, ஆதித்தனாரை மார்க்சிய மொழிக்
கொள்கையைப் பின்பற்றியவர் என்றும்.
மொழியைப் பொறுத்து அவர்
மார்க்சியவாதியாகவே இருந்தார் என்றும்
நியூட்டன் அறிவியல் மன்றம் வரையறை
செய்கிறது.

ஆதித்தனார் மட்டுமல்ல, அக்காலத்தில்
கல்கண்டு என்று ஒரு சிறுவர் வார ஏடு
வெளிவந்தது. அதன் ஆசிரியர் தமிழ்வாணன்.
இவரும் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர்.இவர்
பல்வேறு துப்பறியும் நாவல்களை தொடர்கதையாக
எழுதியவர். தமது கதைகளின் பாத்திரங்களுக்கு
தமிழிலேயே பெயர் வைப்பர். சான்றாகச் சில:
நாவலன், மணிமொழி, பேரின்பம், கார்மேகம்.
வாடகைக்கார் என்றும் காரோட்டி என்றும் எழுதுவார்.
டாக்சி என்றோ டிரைவர் என்றோ எழுத மாட்டார்.

ஆதித்தனார், தமிழ்வாணன் ஆகியோர் மிக்க
சிறு வயதில் இருந்தே என்னைக் கவர்ந்த
ஆசிரியர்கள்.

இத்துடன் இந்தக் கட்டுரை முடிகிறது. இதற்கு மேல்
இந்தக் கட்டுரையை நீட்டிக்க வேண்டிய தேவை
எதுவும் இல்லை. ஆனாலும் நீட்டிக்க வேண்டியுள்ளது.
ஏன்? குட்டி முதலாளித்துவமும் கோணல்
முதலாளித்துவமும்  புற்றுக்குள் இருந்து தலையை
மட்டும் வெளிக்காட்டும் பாம்புகளைப் போல
தலைகளை வெளிக்காட்டும்.

குட்டி முதலாளித்துவத்தை அடித்து உதைத்து
நிர்வாணப் படுத்தி, உடம்பு முழுவதும் பழுக்கக்
காய்ச்சிய இரும்பால் சூடு போட வேண்டும்.
இல்லையேல் குட்டி முதலாளித்துவம் கொக்கரிக்கும்.

ஆ..ஆதித்தனார் எப்படி மார்க்சியர் ஆவார் என்று
கேட்டு குட்டி முதலாளித்துவம் தன் அறியாமையை
வெளிப்படுத்தும். இதற்கு என்ன பதில்? சூடுதான்.
சூடு போடாமல் குட்டி முதலாளித்துவம் அடங்காது.

1972ல் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தமிழ்நாட்டில் நிலமீட்சிப்
போராட்டத்தை நடத்தியது. நிலப்பறி இயக்கம்
என்று பத்திரிகைகள் இதைக் குறிப்பிட்டு. நெல்லை
மாவட்டம் தாதன்குளத்தில் ஆதித்தனாருக்குச்
சொந்தமான நிலங்கள் உள்ளன.அவரின் நிலத்தில்
செங்கொடியோடு கம்யூனிஸ்ட்டுகள் இறங்கிப்
போராட்டம் நடத்தினர். இதில் எங்கள் ஊரைச்
சேர்ந்த (நெல்லை மாவட்டம், வீரவநல்லூர்)
கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்றனர்.

தாதன்குளம் பண்ணையில் இறங்கச் சென்ற
கம்யூனிஸ்டுகள் என்னையும் அழைத்துச் சென்றனர்.
பத்திரிக்கைச் செய்தி அனுப்ப, கலெக்டருக்குத்
தந்தி (telegram) கொடுக்க என்று பல்வேறு
உதவிகளுக்காக என்னையும் அழைத்துச் சென்றனர்.
நான் அப்போது கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்தேன். கம்யூனிஸ்டுகளின் முகாமில்
படித்த, ஆங்கிலம் தெரிந்த ஒரு நபர் நான்தான்
என்பதால் என்னையும் அழைத்துச் சென்றனர்.

அனைவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குக் கொண்டுபோகப்பட்டனர். சிறை வாசலில்
நீண்ட வரிசையில் கம்யூனிஸ்டுகள் நின்றிருந்தனர்.

ஜனசக்திக்கு அனுப்ப வேண்டிய செய்திக்குறிப்பில்
போராடிய அனைவரின் பெயரையும் கம்யூனிஸ்ட்
தலைவர்கள் சொல்லக் சொல்ல நான் எழுதி இருந்தேன்.
அதை மாவட்டச் செயலாளர் வி எஸ் காந்தி
அவர்களுக்கு வாசித்துக் காட்டச் சொன்னார்கள்;
வாசித்துக் காட்டினேன்.

"உன் பெயரை ஏன் எழுதவில்லை? அதையும் எழுது"
என்றார் வி எஸ் காந்தி. "அண்ணாச்சி, நான் வயலில்
இறங்கவில்லையே" என்றேன். "வயக்காட்ல
எறங்கினாத்தானா ? அப்படி இல்ல. நாங்கள் ஒரு
வேலை செய்தோம்; நீ வேறு ஒரு வேலை செய்தாய்!
நீயும் போராட்டத்தில் பங்கெடுத்தவன்தான்; இது
ஒரு division of labour" என்றார் வி எஸ் காந்தி.

நான் தயங்கினேன்.என்னிடம் இருந்த நோட்டைப்
பிடுங்கி அதில் என் பெயரை எழுதினார்
அருகில் இருந்த தூத்துக்குடி மாதவன்.
(இவர் தூத்துக்குடி  செயலாளர், CPI).

வி எஸ் காந்தி அவர்கள்  இன்றில்லை.ஆனால்
அவருடன் பழகிய அந்த நினைவுகள் அழிவதில்லை.
அவை இன்றும் கண்களில் கண்ணீர்த்தடத்தை
ஏற்படுத்துகின்றன.

ஆக, சி பா ஆதித்தனாரின் தமிழ்ப் பணிகளைப்
பாராட்டுவதும், அதே நேரத்தில் அவரின்
பண்ணையில் செங்கொடியுடன் இறங்குவதும்
ஆகிய இரண்டு வேலைகளையும் செய்தவர்தான்
இந்தக் கட்டுரை ஆசிரியர். எனவே ஆதித்தனாரின்
மொழிக்கொள்கைக்கு அங்கீகாரம் அளிக்கும்
உரிமையும்  அருகதையும் அதிகாரமும்
நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு உண்டு.   
*****************************************************    
     
        






   





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக