வெள்ளி, 6 ஜூலை, 2018

ஞானி கூறியது 
==========---------------

கடவுளுக்கான நியாயத்தை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.

‘சாதனா’வில் தாகூர் எழுதுகிறார்: ‘கடவுள் என்பது இயற்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை.’ ஆக, என்னுடைய கடவுள் நம்பிக்கை இதுதான். இன்று என்னிடம் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பேன். கடவுள் ஒரு அழகான, போதையூட்டும் கருத்தாக்கம்.. அவ்வளவுதான்.

சமூகத்தில், சாமானிய மக்களிடம் உள்ள கடவுள் - மதத்துக்கான நியாயத்தை என்னுடைய சொந்த விருப்பங்களிலிருந்து அணுக மாட்டேன்

மதம் நாம் நினைக்கிற அளவுக்கு வெறுக்கத்தக்கது இல்லை

ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும். அடுத்து, மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும் பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்து அதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா? 

ஆழ்ந்து பார்த்தால், ஒரு இனக்குழுச் சமூகத்தின் மேன்மையான பண்புகளின் கொள்கலமாக அல்லவா கடவுள் மாறிவிடுகிறார்

மதத்தை எப்படி முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியும்? 

என்னுடைய தமிழ் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் தரிசிக்கிறேன். கணியன்பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார் களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. செழுமையான தமிழ்க் கல்வி, சூழலை நசுக்காத தமிழ் வாழ்க்கை, எல்லோரையும் அரவணைக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டது என்னுடைய தமிழ் தேசியம். சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் நிலம் முன்வைக்கும் அறம்தான் அதன் மையம். ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி வேளாண்மை, கல்வி, மருத்துவம், வரலாறு, பண்பாடு, அரசியல் என்று பல தளங்களிலும் இன்று நாம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மாற்றை முன்வைக்கக் கூடியது அது. சங்க இலக்கியத்திலிருந்து இதற்கான கச்சாப்பொருளை நான் பெறுகிறேன். எனக்கு தேசப் பேதம் இல்லை; மொழிப் பேதம் இல்லை; சாதி - மதப் பேதம் இல்லை என்ற பேருணர்வைக் கொண்டது என்னுடைய தமிழ்த் தேசியம்.

மார்க்ஸியர்களுடைய தோல்விக்கான முக்கிய காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே?

இந்தியா ஒரு கூட்டாட்சியாக, ஒன்றியமாக மட்டுமே நீடிக்க வேண்டும்; முடியும். இந்தியாவைப் பார்க்கும் விதத்தில் மட்டும் அல்ல; அறிவியல், கலை, இலக்கியம், மதம் இவை ஒவ்வொன்றை யும் பார்க்கும் விதத்தில் மார்க்ஸியர்களிடம் மாற்றம் வேண்டும்

நமக்குள் ஒரு டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி, சோல்ஸெனித்ஸின் ஏன் தோன்றவில்லை என்ற கேள்வி தான் அதற்கான அடிப்படை. ‘கலை இலக்கியத்தில் உருவத்துக்கு, கலையுணர்வுக்கு, அழகியலுக்கு முதன்மை இல்லை; உள்ளடக்கமாகிய அரசியலுக்கே முதன்மை.’ இதுதான் கட்சி மார்க்ஸியர்களின் திறனாய்வுப் பார்வை யாக இருந்தது. ஸ்டாலின் காலத்திய ஸ்தானோவியத்தின் தொடர்ச்சி இது

தமிழ் அறம் என்பது தொன்றுதொட்டது - இன்று நம்முடைய புழக்கத்தில் இருக்கிற சமதர்மத்துக்கு நிகரானது. இந்தத் தமிழ் அறமானது, தமிழ் இலக்கியம் முழுவதுமே இருக்கிறது. சித்தர் இலக்கியம் இதில் மையம் கொள்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளை, சவால்களைத் தாங்கி நின்ற சக்தி தமிழ் மெய்யியலுக்கு உண்டு. உலகம் இருக்கும் வரை அறத்துக்கான தேட்டமும் இருக்கும்.
-------------------------------------------------------------
எஸ் என் நாகராஜன் 
அரசியலில் மதத்தை எப்படி அணுகுகிறோம் என்பதோடு இதை இணைத்துப் பார்க்க வேண்டும். முதலில், நேரு அல்லது சாவர்க்கர் போன்றோர் சொன்ன மதச்சார்பின்மையில் எனக்கு உடன்பாடு இல்லை. இரண்டுமே நாத்திகவாதத்துடன் தொடர்புடையது. காந்தியும்கூட இதற்கு எதிராகவே இருந்தார். இது மேற்கிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டது - தேசம், தேசியம், தேசபக்தி போன்றவற்றுடன் நெருக்கமான உறவுடையது. ஆக, அந்த வார்த்தையையே நான் தவிர்க்க விரும்புகிறேன். பதிலாக ‘புரட்சிகர மனிதநேயம்’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். ஒருவன் தன்னை அனைத்திலும் காணும் நிலையே அது. நம் மரபில் இது இருக்கிறது.


இரண்டு விதமான உண்மைகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. ஒன்று, விஞ்ஞானம் சொல்லக்கூடிய உண்மை. இன்னொன்று, விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட உண்மை. கடவுள் கற்பனையாகவேகூட இருக்கட்டும். கனவும் கற்பனையும் இல்லை என்றால், மனுஷன் வெறும் ஜடம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக