திங்கள், 2 ஜூலை, 2018

(12) உண்மை என்பது இரண்டா? இரண்டற்றதா?
எஸ் என் நாகராஜனின் கேள்விக்கு
மார்க்சியத் தோழர்கள்  பதிலளிக்கலாம்!
ஞானிக்கு மறுப்பு கட்டுரைத் தொடர்! எண்-12.
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
"இரண்டு விதமான உண்மைகள் இந்த உலகத்தில் 
இருக்கின்றன. ஒன்று, விஞ்ஞானம் சொல்லக்கூடிய உண்மை  
இன்னொன்று, விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட உண்மை" 
என்கிறார் எஸ் என் நாகராஜன்.
(பார்க்க:சமஸ் நேர்காணல், தமிழ் இந்து, 08.06.2018)


நாகராஜனின் கேள்வி பெரும் தத்துவார்த்த
முக்கியத்துவம் கொண்டது. இரண்டு விதமான 
உண்மைகள் இருப்பதாக நாகராஜன் கூறுகிறார்.
அப்படியானால், உண்மை என்பது இரண்டற்றது 
என்று கூறுவது தவறா?

தமது கருத்தின் மூலமாக ஆதிசங்கரருக்கு 
மரண அடி கொடுக்கிறார் நாகராஜன்.பிரம்மம் 
என்பதே ஒரே உண்மை, முழுமுதல் உண்மை 
(absolute truth) என்றார் ஆதிசங்கரர் தமது 
அத்வைதத்தில். ஒரே உண்மை, முழுமுதல் 
உண்மை என்றெல்லாம் எதுவும் கிடையாது 
என்றும், உண்மை என்றாலே அது இரண்டாகத்தான் 
இருக்கும் என்கிறார் நாகராஜன்.

நாகராஜன் அத்வைதி அல்லர். அவர் துவைதி.
இராமானுஜரை ஆழ்வார்களைப் போற்றும் 
நாகராஜன் இயல்பிலேயே ஆதிசங்கரருக்கும் 
அவரின் அத்வைதத்திற்கும் எதிரானவர்.

கடவுள் இருக்கிறாரா?
----------------------------------------
அடுத்து கற்பனையாக இருந்தாலும்கூட கடவுள் 
மனித குலத்துக்குத் தேவை என்கிறார் நாகராஜன்.
(பார்க்க: மேற்படி சமஸ் நேர்காணல்) 

கற்பனை என்றாலும் 
கற்சிலை என்றாலும் 
கந்தனே உனை மறவேன் 
என்று டி எம் செளந்திர ராஜனைப்போல் 
பாடிக்கொண்டு திரிகிறார் நாகராஜன்.  

மனிதகுல வரலாற்றிலேயே கடவுள் இருக்கிறார் 
என்று நிரூபித்த ஒரே தத்துவஞானி இமானுவேல் 
கான்ட் மட்டுமே.(பார்க்க: A critique of Pure Reason, கான்ட் 
எழுதிய நூல்).  அதே போல கடவுள் இல்லை 
என்று நிரூபித்த ஒரே தத்துவஞானி யாரென்றால் 
லுத்விக் பாயர்பாக் மட்டுமே. (பார்க்க: கிறிஸ்துவத்தின் 
சாரம் என்ற பாயர்பாக்கின் நூல்)    

இவ்விருவரிடமும் இருந்து வேறுபட்டு 
கடவுள் இறந்து விட்டார் என்று
அறிவித்த ஒரே தத்துவஞானி பிரடெரிக் நீட்சே.
மூவருமே ஜெர்மானியர்கள். அது மட்டுமல்ல 
கான்ட், நீட்சே ஆகியோரின் தொடர்ச்சியாக வந்த  
மார்ட்டின் ஹைடெக்கரும் ஜெர்மானியரே.
மார்க்ஸ் காலம்தொட்டு இன்று வரை தத்துவச் 
செழுமையில் ஏகபோகமாக இருப்பது ஜெர்மனியே.   

ஒரு சமூகத்தின் அடித்தளம் என்பது பொருளாதாரமே.
மதம் என்பது அச்சமூகத்தின் மேல்கட்டுமானம்.
பொருளியல் அடித்தளத்தை மாற்றினால், 
மேல்கட்டுமானமாக இருக்கிற அரசியல், மதம்,
கலை, பண்பாடு எல்லாமுமே மாறிவிடும். இதுதான் 
மதம் பற்றிய மார்க்சியப்  பார்வை. 

அதாவது பொருளியல் அடித்தளமே பிரதானமானது 
(primary). மதம் போன்ற விஷயங்கள் 
இரண்டாம்பட்சமானவை (secondary). எனவே மார்க்ஸ் 
சமூகத்தின் பொருளியல் அடித்தளத்தை மாற்றுகிற 
வேலைக்கே முதலிடம் கொடுத்தார். 

மேலும் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய 
தேவை எதுவும் மார்க்சுக்கு இருக்கவில்லை.
மார்க்சின் ஆசான் லுத்விக் பாயர்பாக் ஏற்கனவே 
அதை நிரூபித்து விட்டார். 

உண்மை என்பது இரண்டற்றதா?
---------------------------------------------------------
மீண்டும் பிரதான கேள்விக்கு வருவோம்.

1. உண்மை என்பது எப்போதுமே ஒன்றுதானா?
அல்லது பலவகைப் பட்டதா?
2. முழுமுதல் உண்மை (absolute truth) என்பது உண்டா?
அல்லது முழுமுதல் உண்மை என்ற ஒன்றே கிடையாதா?

மனிதன் சிந்திக்கத் தொடங்கியதில் இருந்து 
சில பிரதான கேள்விகளுக்கான அவனது விடை 
இரண்டு வகைப்பட்டதாக இருந்தது.
ஒன்று: இயற்பியல் விடை (PHYSICAL)
இரண்டு: இயற்பியலற்ற விடை (METAPHYSICAL)

இயற்பியல் விடை என்பது இயற்கையின், அறிவியலின் விதிகளுக்கு தர்க்கங்களுக்கு உட்பட்டது.  
இயற்பியலற்ற விடை என்பது மேற்கூறிய 
விதிகளுக்கு உட்படாதது; இயற்கைக்கு 
அப்பாற்பட்டது. நாகராஜன் இவ்விரண்டும் 
வேண்டும் என்கிறார். சமயங்களில் இயற்பியலற்ற 
விடையை மட்டுமே ஏற்கிறார். உதாரணம்: கடவுள்.

1900ல் பெர்லின் நகரில் மாக்ஸ் பிளாங்க் (Max Planck)
குவான் டம் கொள்கையை முன்மொழிகிறார்.
1905ல் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டையும், 
1915ல் பொதுச் சார்பியல் கோட்பாட்டையும் 
ஐன்ஸ்டின் முன்மொழிகிறார்.

மூல ஆசான்கள் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய 
இருவரின் மறைவுக்குப் பின்னரே இக்கொள்கைகள் 
(Quantum and Relativity theories) வெளியாகின்றன.(மார்க்ஸ் 
மறைவு 1883ல்; எங்கல்ஸ் மறைவு 1895ல்). மார்க்ஸ் 
வாழ்ந்த காலத்தில் லண்டன் நகரில் மின்சாரமே 
அறிமுகம் ஆகவில்லை என்பதும் மார்க்சின் 
மலையளவான படைப்புகள் எழுதப்பட 
எண்ணெய் விளக்குகள் (oil lamps) துணைநின்றன  
என்பதையும் நினைவு கூர்வோம்.

பிரதான கேள்விக்கு விடை காண வசதியாக,
முதலில் இயற்கையில் முழுமுதலானது(absolute)
உண்டா என்று பார்த்து விடலாம்.
நியூட்டனின் இயற்பியலில் வெளி (space) என்பதும் 
காலம் (time) என்பதும் முழுமுதலானவை என்று 
( space and time are absolute) சொல்லப் பட்டது. ஐன்ஸ்டினின் 
சார்பியல் கோட்பாடு இதை மறுத்தது. 

ஆக, இயற்கையில் முழுமுதலானது இல்லாதபோது 
சமூகத்தில் இருக்குமா என்பதற்கு விடை காண 
வேண்டும்.

அடுத்து, உண்மை என்பது இரண்டற்றதா என்ற 
கேள்வியைப் பரிசீலிப்போம். முதலில் உண்மை 
என்றால் என்ன என்பதை வரையறுக்க வேண்டும்.

ஒரு பொருளோ அல்லது சிந்தனையோ நம்மிடம் 
இருக்கிறது. இதைப் பற்றிய மெய்விவரங்கள் (facts)
அனைத்தையும் (அதன் இருப்பு, பண்புகள் முதலியன)
மதிப்பீடு என்று வைத்துக் கொள்ளுவோம்.
உண்மை என்பது என்னவெனில், பொருளுக்கும் 
அதைப்பற்றிய மதிப்பீட்டுக்கும் உள்ள 
தொடர்பு ஆகும்.

இந்த மதிப்பீடு நூற்றுக்கு நூறு சரியாக 
இருக்கும் என்றால், அந்த மதிப்பீடு உண்மை 
எனப்படும். நூற்றுக்கு நூறு தவறு என்றால் 
பொய் எனப்படும். பெருமளவுக்குச் சரி என்றால் 
அந்த மதிப்பீடு தோராயம் (approximation) எனப்படும்.

உதாரணமாக, பை என்ற  கணித எண்ணுக்கு 
22/7 என்ற மதிப்பு உண்டு. இந்த மதிப்பு உண்மை 
அல்ல. இது தோராயமே.

நாகராஜனின் கேள்விக்கு நவீன அறிவியலில் 
பதில் உள்ளது. பத்தாம் பசலித்தனமான, 
புராதனமான காய்ந்து கருவாடாகிப்போன 
பதில்களை இன்றைய இளைய சமுதாயம் ஏற்றுக் 
கொள்ளாது. நாகராஜனின் கேள்விக்குப் பதில் 
தருமாறு இன்றைய படித்த அறிவார்ந்த இளைய 
சமுதாயம் .கோருகிறது.

குவான்டம் கொள்கையும் சார்பியல் கொள்கையும்
ஏற்படுத்தியுள்ள, உலகைப் பற்றிய புதிய 
கண்ணோட்டத்தின் அடிப்படையிலான பதிலே 
இப்போதைய தேவை.

இப்பதிலை மார்க்சியத் தோழர்கள் தரட்டும்.
தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப் 
படுகின்றன.
******************************************************

   
       


    
        









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக