திங்கள், 7 டிசம்பர், 2015

ஜோதிட சாஸ்திரம் உண்மையானதே!
போலி ஜோதிடர்களால் ஜோதிடத்துக்கு கெட்ட பெயர்!
சென்னையின் அழிவுக்குக் காரணம் நெப்டியூன் தோஷமே!
ஜோதிட சாஸ்திரத்தை எதிர்ப்பவர்களைச் சிறை செய்க!
-----------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
குவான்டம் ஜோதிட சாஸ்திரி, QUANTUM ASTROLOGY.
--------------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இக்கட்டுரையை IQ 105க்கு மேல் உள்ளவர்கள்
மட்டும் படிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------
செவ்வாய் தோஷம் பற்றியும் அதன் கெடுதிகள் பற்றியும்
தமிழ்ச் சமூகம் நன்கு அறிந்துள்ளது. ஆண் பெண் இருவருக்கும்
செவ்வாய் தோஷம் ஏற்படக் கூடும். இந்த தோஷத்தால் பீடிக்கப்
பட்டவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் ஏற்படாமல் போகும்.
இதெல்லாம் தமிழர்களும் இந்தியர்களும் அறிந்த ஒன்றே.

எங்களின் ஜோதிட சாஸ்திரத்தின்படி, செவ்வாய் கிரகம்
தவிர, வேறு பல கிரகங்களாலும் தோஷம் ஏற்படும். யுரேனஸ்
நெப்டியூன் ஆகிய இரண்டு கிரகங்களாலும் ஏற்படும்
யுரேனஸ் தோஷம், நெப்டியூன் தோஷம் ஆகியவை செவ்வாய்
தோஷத்தை விடப் பல்லாயிரம் மடங்கு தீவிரமானவை.

செவ்வாய் தோஷம் என்பது வெறும் மானுட தோஷம் மட்டுமே.
அதாவது மானுடர்களை மட்டுமே அது பாதிக்கும். ஆனால்
யுரேனஸ் தோஷமும் நெப்டியூன் தோஷமும் மானுடர்கள்,
பிற உயிரினங்களை (யானை முதல் கல்லுக்குள் உள்ள
தேரை வரை) மட்டுமின்றி உயிரற்ற பொருட்களையும்
பாதிக்கும். சுருங்கக் கூறின், சேதனம் அசேதனம்  உள்ளிட்ட
அனைத்தையும் பாதிக்கும்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமிக்குக் காரணம் யுரேனஸ்
தோஷமே. இந்த பூமியில் ஏற்படும் தரை பூகம்பம்,
ஜல பூகம்பம் (சுனாமி) ஆகியவை அனைத்தையும் கட்டுப்
படுத்துவது யுரேனஸ் கிரகாதிபதியே. அதே போல் மழை
வெள்ளம் நீர்ப்பெருக்கு,புயல் ஆகிய அனைத்தையும் கட்டுப்
படுத்துவது நெப்டியூன் கிரகாதிபதியே.
   
தற்போது (2015 கார்த்திகை) நிகழ்ந்து வரும் மழை மற்றும்
வெள்ளப் பெருக்கால் சென்னை மற்றும் கடலூர் நகரங்கள்
அழிந்ததற்குக் காரணம் நெப்டியூன் தோஷமே. தகுந்த
பரிகாரங்களை மேற்கொண்டு தோஷ நிவர்த்தி செய்யாமல்
இருந்தால் மீண்டும் மீண்டும் நெப்டியூன் தோஷத்தால்
அழிவு நேர்வது உறுதி.

சில போலி ஜோதிடர்கள் கூறுவது போல், மன்மத ஆண்டில்
பெருமழையும் வெள்ளமும் வெள்ள பாதிப்பும் ஏற்படும்
என்பது பொய். மழை வெள்ள  பாதிப்புக்குக் காரணம்
நெப்டியூன் தோஷமே தவிர மன்மத ஆண்டு அல்ல.
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத முதல் குரோதன அட்சய
ஈறாக உள்ள அறுபது ஆண்டுகளிலும் மழை வெள்ள
பாதிப்பு  ஏற்படுமேயானால், அதற்குக் காரணம் நெப்டியூன்
கிரகாதிபதியே.

இதனால்தான் எங்களின் ஜோதிட சாஸ்திரத்தில், யுரேனஸ்
கிரகத்தை பூகம்பகாரகன் என்றும் நெப்டியூன் கிரகத்தை
பிரளயகாரகன் என்றும் குறிப்பிடுகிறோம்.

இந்தியாவில் 99.9999999999999999999999999999999999 சதம் போலி
ஜோதிடர்களே. இவர்களின் ஜோதிட சாஸ்திரம்
அடிப்படையிலேயே குறைபாடு உடையது. இவர்கள் போடும்
ராசிக்கட்டம், கிரகநிலை ஆகியவற்றைக் கவனியுங்கள்.
இவர்கள் மொத்தம் ஒன்பது கிரகங்களை மட்டுமே கணக்கில்
கொள்வார்கள். (ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரம், கிரகம்
ஆகிய அனைத்துமே கிரகம் என்றுதான் கொள்ளப்படும். கிரகம்
என்றால் வீடு என்று பொருள்). ஒன்பது கிரகங்கள் அல்ல,
மொத்தம் பதின்மூன்று கிரகங்களைக் கணக்கில் கொள்ள
வேண்டும்.

எங்களின் ஜோதிட சாஸ்திரத்தில், 1) சூரியன் 2) சந்திரன்
3)செவ்வாய் 4) புதன் 5)வியாழன் 6)வெள்ளி 7)சனி 8)ராகு
9) கேது ஆகிய ஒன்பது கிரகங்களுடன்,
10) யுரேனஸ் 11) நெப்டியூன் 12) மனுஷ்ய 13) இதர
ஆகியவற்றையும் சேர்த்து பதின்மூன்று கிரகங்களைக்
கணக்கில் கொள்கிறோம்.

ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள், ஜெட் விமானங்கள்
ஆகியவற்றோடு மனிதர்கள் ஏவிய பல்வேறு
விண்கலன்களையும் ஸ்பூட்னிக் முதல் மங்கள்யான்
வரையிலான செயற்கைக்கோள்களையும், விண்வெளியில்
நிறுவப்பட்ட ISS விண்வெளி நிலையத்தையும் மற்றும்
இவை போன்ற அனைத்தையும் மனுஷ்ய என்னும் ஓர்
ஒற்றைக் கிரகமாகக் கணக்கில் கொள்கிறோம்.

மேலும், சூரியக் குடும்பத்திலும் வேறு பல குடும்பங்களிலும்
உள்ள கணக்கற்ற கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட
அனைத்து வான் பொருட்களையும் (all celestial bodies in this universe)
"இதர"  என்னும் கிரகமாகக் கருதுகிறோம். இவ்வாறு
எங்களின்  ஜோதிட சாஸ்திரத்தில் இந்தப் பிரபஞ்சம்
முழுமையும் அடக்கி விட்டமையால் எங்களின் கணிப்புகள்
நூற்றுக்கு நூறு சதம் துல்லியமாக உள்ளன. எங்களின்
ஜோதிட சாஸ்திரம் மட்டுமே மெய்யானது. மீதி
அனைத்தும் போலியே என்று அடித்துக் கூறுகிறோம்.

எமது ஜோதிட சாஸ்திரம் குவான்டம் ஜோதிடம் (QUANTUM
ASTROLOGY) ஆகும். உலகின் ஒரே குவான்டம் ஜோதிடர்
இக்கட்டுரையாசிரியராகிய பி இளங்கோ சுப்பிரமணியன்
என்னும் நான்தான். வேறு எவருக்கும் இந்தப் பதங்களை
உச்சரிக்கும், பயன்படுத்தும் உரிமையோ அருகதையோ
கிடையாது.

இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தில் இந்தப் பொருளில்
எழுதப்பட்ட முதல் கட்டுரை இதுதான். இதன் காப்புரிமை
பதிப்புரிமை ஆகிய அனைத்தும் இக்கட்டுரை ஆசிரியருக்கே.

எங்களின் குவான்டம் ஜோதிட சாஸ்திரத்தை  எதிர்ப்பவர்கள்
அனைவரையும் மத்திய மாநில அரசுகள் சிறையில்
அடைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

நெப்டியூன் தோஷத்துக்கு பரிகாரம் உண்டா? தோஷ நிவர்த்தி
செய்ய இயலுமா என்பது குறித்து அடுத்தடுத்து கட்டுரைகள்
எழுதப்படும். குறைந்தபட்ச IQ Level 110 உடையவர்களால்
மட்டுமே அக்கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொள்ள இயலும்.
......பி இளங்கோ சுப்பிரமணியன், குவான்டம் ஜோதிட சாஸ்திரி,
குவான்டம் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் சென்னை............
copyright: P ILANGO SUBRAMANIAN. தொடர்புக்கு: 998323 675892.
*************************************************************

      

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக