வியாழன், 14 ஏப்ரல், 2016

(1) தையா சித்திரையா? புத்தாண்டு சர்ச்சை!
வட்டத்தில் மொத்தம் 360 டிகிரி இருக்கும்போது
ஒரு ஆண்டுக்கும் 360 நாள்தானே இருக்க வேண்டும்?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------
தை மாதம் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதை
அறிவியல் வழியில் நிரூபிக்கும் ஒரு தொடர் இது.

தையா சித்திரையா என்ற சர்ச்சையின் ஊடாக, வட்டத்தில் 
360 பாகை மட்டுமே இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு 
எப்படி 365 நாள் வரும் என்ற ஒரு கேள்வி முன்வைக்கப் 
படுகிறது.

வட்டத்திற்கு 360 டிகிரிதான் இருக்க வேண்டும் என்பதில்லை.
வட்டத்தை 1000 டிகிரியாகப் பிரிக்கலாம். 100 டிகிரி என்றும்
பிரித்துக் கொள்ளலாம். வில்லங்கமான பிரைம் நம்பரை
அடிப்படையாகக் கொண்டும் பிரித்துக் கொள்ளலாம்.

397இன் சிறப்பு என்ன? 991இன் சிறப்பு என்ன? இவையெல்லாம்
வில்லங்கமான பிரைம் நம்பர்கள். 3, 5, 7, 13 இவையும் பிரைம்
நம்பர்கள்தான். ஆனால் வில்லங்கம் குறைவு.

அதாவது ஒரு வட்டத்தை 397 டிகிரிகளாகவோ,
991 டிகிரிகளாகவோ பிரித்துக் கொள்ளலாம். யாரிடமும்
போய் NOC வாங்க வேண்டியதில்லை.

பாபிலோனியர்கள் ஒரு வட்டத்தை 360 டிகிரிகளாகப் பிரித்தார்கள்.
இப்படிப் பிரிக்கும்போது, இந்த 360 என்பது ஒரு தற்செயல்
அம்சமாக இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
(not a random selection). ஒரு பருவம் (season) முடிந்து இன்னொரு
பருவம் தொடங்குவதற்கு 360 நாட்கள் ஆகின்றன என்று
அனுபவத்தால் அறிந்தனர். எனவே வட்டத்திற்கு 360
டிகிரிகளை வழங்கினர்.

கோணங்களை அளப்பதற்கு டிகிரி தவிர வேறு முறைகளும் 
உண்டு. ரேடியன் முறை பற்றி கணித மாணவர்கள் அறிந்து 
இருக்கக் கூடும். கூடும் என்ன கூடும்? அறிந்திருக்க வேண்டும்.
பை ரேடியன் = 180 டிகிரி என்பதை நினைவு கூரவும்.
கால்குலசில் ரேடியன் முறையில் கோணங்களை அளக்கும் 
முறைதான் கையாளப் படுகிறது. (கால்குலஸ் என்றால் என்ன?
என்ற தனிக் கட்டுரை பார்க்கவும்)

இந்தக் கணக்கைப் பாருங்கள்: மதிப்புக் காண்க : sin 480 டிகிரி.
இது மிக எளிய ஒரு டிரிகனாமெட்ரி கணக்கு. (இதன் விடை:
sqrt 3 divided by 2). இந்தக் கணக்கை இங்கு உதாரணம் காட்டக் 
காரணம் டிகிரி என்றால் 360க்கு மேல் கிடையாது என்ற 
தப்பெண்ணத்தை நீக்கத்தான்.

தசம முறை எண்களையே (decimal system) நாம் 
பயன்படுத்துகிறோம். இதில் 0,1,2.....9 வரை பத்து 
எண்ணுருக்கள் உண்டு. ஆனால் அறிவியலில் தசம முறை 
தவிர வேறு பல எண் முறைகள் உண்டு.
கணினிகளில் பைனரி முறை, ஹெக்சா டெசிமல் முறை 
ஆகிய முறைகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுகின்றன.

ஹெக்சா டெசிமல் முறையில் 16 எண்ணுருக்கள் உண்டு.
0 to 9 போக, A, B, C, D, E, F ஆகிய எண்ணுருக்களும் உண்டு.
2016 சட்ட மன்றத் தேர்தலில் திமுக 81 இடங்களைப் பெறும்
என்று நான் சொன்னால் திமுகவினர் என் மீது சினம் 
கொள்ளக் கூடும். ஆனால் எனது கால்குலேட்டரை  
ஹெக்சா டெசிமல் முறையில் செட்டிங்க்ஸ் செய்து 
வைத்திருக்கிறேன் என்றும் ஹெக்சா டெசிமலில் 
81 என்பது நமது தசம முறையில் 129க்குச் சமம் என்றால் 
திமுகவினர் என்னை அமைச்சராக்க முயலக்கூடும். 
நான் அதனை இகழ்ச்சியுடன் நிராகரிக்கக் கூடும்.

எண்கணிதம் என்றால் தசம முறை போக வேறு முறைகளும் 
உண்டு. கோணங்களை டிகிரி முறை தவிர ரேடியன் 
முறையிலும் அளக்கலாம். அதுபோலவே, வட்டத்திற்கு 
எத்தனை பாகைகள் வேண்டுமானாலும் வைத்துக் 
கொள்ளலாம். 

சூரியனும் பூமியும் உலக மக்கள் அனைவருக்கும் பொது.
(சந்திரனும் கூடத்தான்). தமிழ்ச் சூரியன், ஆரியச் சூரியன்,
சுமேரியச் சூரியன், பாரசீகச் சூரியன் என்றெல்லாம்
சூரியனில் பிரிவுகள் கிடையாது.

சுமார் 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள்
அக்கால அறிவு வளர்ச்சிக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும்
ஏற்றபடி, சூரிய, சந்திர, பூமியைப் பற்றி சில கருத்துக்களைக்
கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரதேசத்திலும்
வாழ்ந்த மக்கள், தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தின் சூழலுக்கு
ஏற்ற விதத்தில் கருத்துகளைக் கொண்டிருந்தார்கள்.

2016இல் இன்றைய நவீன மனிதன் நமது முன்னோர்களை விட,
பல்லாயிரம் மடங்கு, பல கோடி மடங்கு துல்லியமான 
அறிவைப் பெற்று இருக்கிறான். கருவிகளில் அசுரத் தனமான 
மேம்பாடு வந்து விட்டது.

எனவே ஒரு ஆண்டுக்கு 365.25 நாள் என்கிற இன்றையக் 
கணக்குதான் சரியானது. அறிவு வளர வளர முந்தைய 
கருத்துக்களின் தோராயம் குறைவதும் துல்லியம் 
அதிகரிப்பதும் இயல்பே.
----------------------------------------------------------------------------------------------
தொடரும் 
******************************************************************************* 

 படம்-1: 360 டிகிரியை விட அதிகமான கோணம் இப்படத்தில் 
காட்டப்பட்டு உள்ளது.  
படம்-2: ஒரு அலகு நீளமுள்ள வட்டவில், வட்ட மையத்தில் 
எதிர்கொள்ளும் கோணம்  ஒரு ரேடியன் ஆகும்.
    


    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக