தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக்கொண்டிருப்பவர் ராமச்சந்திரன்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப் பகைத்துக்கொண்டு எவரும் அரசியல் நடத்த முடியாது என்கிறார்கள். அவர் நினைப்பவரே ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டக் குழுப் பிரதிநிதிகள்; அவரை மீறி ஜெயிக்க முடியாது; ஜெயித்தால் செயல்பட முடியாது என்கிறார்கள். சுரங்கத் தொழிலில் திளைக்கும் ராமச்சந்திரனின் அத்துமீறல்களை எழுத எவரும் உள்ளே நுழைய முடியாது; அப்படி நுழைந்தால் ஊர் திரும்ப முடியாது என்கிறார்கள். கட்சியையும் சரி, மக்களையும் சரி; பணத்தையும் பயத்தையும் வைத்து அடித்துவிடலாம் என்று நம்புபவர் என்கிறார்கள்.
ராமச்சந்திரனின் மிக முக்கியமான பின்புலம் இந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வலுவான சக்திகளில் ஒன்றாக இருந்த லகுமையா. ராமச்சந்திரனின் மாமனார். மூன்றாண்டுகளுக்கு முன் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுடப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தபோது தமிழகம் ராமச்சந்திரனைக் கவனிக்க ஆரம்பித்தது. அடுத்து, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கர் கடத்திக் கொல்லப்பட்டார்.
மூன்று கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என்று ராமச்சந்திரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் விரிந்தன. ராமச்சந்திரன், லகுமையா, அவரது அடிப்பொடிகள் என 17 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி ஆட்சியர் கிரானைட் மோசடி தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, ரூ.100 கோடி மதிப்பிலான முறைகேடு குற்றச்சாட்டு ராமச்சந்திரன் மீது சுமத்தப்பட்டது. அவரது குவாரிகள், சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றது.
இந்த ராமச்சந்திரன் தன் வளர்ச்சிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பயன்படுத்திக்கொண்ட கதை முக்கியமானது. முதலில் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போதே அடாவடிகள் தொடங்கிவிட்டன என்றாலும், இவ்வளவு மோசமாக அவர் மாறவில்லை. 2006 தேர்தலில் தளி தொகுதியை ராமச்சந்திரன் கேட்டிருந்தார். மாறாக, கூட்டணியில் அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் தமிழகத்தில் வென்ற ஒரே சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தன் கைவரிசையைக் காட்டினார் ராமச்சந்திரன். மார்க்ஸிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியது. அதேசமயம், எந்தக் கட்சி வேட்பாளரை ராமச்சந்திரன் தோற்கடித்தாரோ அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரனை சுவீகரித்துக்கொண்டது. தா. பாண்டியனின் அணுக்கத் தொண்டரானார் ராமச்சந்திரன்.
இந்த விசுவாசத்துக்கான பரிசாக 2011 தேர்தலில் ராமச்சந்திரனுக்கு மீண்டும் தளி தொகுதி கிடைத்தது. ராமச்சந்திரன் வென்றார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கம்போல் ராமச்சந்திரனின் ஆளுகை தொடர்ந்தது. தொடர்ந்துவந்த காலத்தில் ராமச்சந்திரன் கடுமையாக அம்பலப்பட்டுவிட்ட சூழலில், இந்தத் தேர்தலில் நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, எல்லா விமர்சனங்களையும் கடந்து அவருக்கு தொகுதியை அளித்திருக்கிறார்கள்.
இரு நபர்கள் ஒரு கேள்வி
வசந்திதேவியின் அரை நூற்றாண்டு பொது வாழ்க்கையில் அரசியல்ரீதியாக அவர் இணைந்து செயல்பட்ட பல ஆளுமைகள் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சார்ந்தவர்கள். கல்வி உரிமை, மனித உரிமைகள், ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் என்று வசந்திதேவி பேசிய மேடைகளில் பெரும் பாலானவை இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவை. வசந்தி தேவியைத் தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்ததில் ஜி.ராமகிருஷ்ணனுக்கும் முத்தரசனுக்கும் பங்கு உண்டு என்றாலும், திருமாவளவனின் விசிக சார்பிலேயே அவர் போட்டியிடுகிறார். அடிப்படையில் செயல்பாட்டில் ஒரு இடதுசாரியான வசந்திதேவியை ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங் களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை? அடிப் படையில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான ராமச்சந்திரனை எது கம்யூனிஸ்ட் இயக்கங்களால் வெளியே தள்ள முடியாமல் பிணைத்துவைத்திருக்கிறது?
இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னடைவுக்கும் இந்தக் கேள்விக்கும் மிக முக்கியமான தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது!
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
MORE IN: சிறப்புக் கட்டுரைகள் | சிந்தனைக் களம்
Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
3. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
3. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
அதிகம் வாசித்தவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக