புதன், 27 ஏப்ரல், 2016

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்!
-----------------------------------------------------------------------
ரேகையில் கனிகொள் என்பதன் மூலம் பாரதியார் 
கடல் வழி வணிகத்தை, ஆழ்கடல் மீன்பிடித்தலை,
கனிமவளம் பெருக்குதலைக் குறிப்பிடுகிறார் 
என்று திரு வீர இராச வில்லவன்கோதை அவர்கள் 
வலிந்து பொருள் கொள்கிறார். இது ஏற்புடைத்தன்று.
**
பாரதியாரின் "புதிய ஆத்திசூடி"யை  பாரதியார் 
வாழ்ந்த காலத்திலேயே பரலி சு நெல்லையப்பர் 
அவர்கள் 1917இல் பாப்பாப் பாட்டு என்ற நூலாக 
வெளியிட்டார். ஆத்திசூடி என்றாலே அது 
குழந்தைகளுக்கானது என்பது  சொல்லாமலே 
விளங்கும். குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஒரு 
நூலில் எளிதில் பொருள் விளங்கும் வண்ணமே 
எவரும் எழுதுவர். நுண்மாண்  நுழைபுலம் மிக்கோர் 
மட்டுமே பொருள் உரைக்க இயலும் எனும் விதத்தில் 
எவரும் குழந்தைகளுக்கு எழுதுவது இல்லை. 
சுருங்கக் கூறின் ஆத்திசூடிக்கு உரையாசிரியர்கள் 
தேவையில்லை.
**
இவ்விடத்தில் குயில்பாட்டைக் கருதவும். ஆழ்ந்த 
தத்துவப் பொருள் அடங்கிய குயில்பாட்டின் 
நடை, ஆத்திசூடியின் நடை ஆகிய இவ்விரண்டையும் 
ஒப்பு நோக்குவார் ஆத்திசூடி எளிமையானது 
என்பதை உணர இயலும்.
**
இந்தியா வழியாக பூமத்திய ரேகை செல்லவில்லை 
என்பதும், அது கடல் வழியே செல்கிறது என்பதும் 
அனைவரும் அறிந்ததே. ரேகை என்பது கடலைக் 
குறிக்கும் என்றும் அதன் வாயிலாக கடல்வழி 
வணிகத்தை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார் 
பாரதியார் என்பதும் சுற்றி வளைத்து மூக்கைத் 
தொடுதல் ஆகும். இது ஏற்புடைத்தன்று.
**
ரேகை என்பது கையைக் குறிக்கும். ரேகையில் 
கனிகொள் என்பது கைகால்கள் மூலம் 
பாடுபட்டுச் சாப்பிடுவதைக் குறிக்கும். சுருங்கக் 
கூறின் உழைப்பைக் குறிக்கும். ரேகை என்பதில் 
உழைப்பு தொக்கி நிற்கவில்லை. விரிந்து 
நிற்கிறது. அதாவது வெளிப்படையாக நிற்கிறது.
**
நெல்லை மாவட்டத்தில் ரேகை சரியில்லை என்பது 
உழைப்பு சரியில்லை என்ற பொருளில் ஆளப்பட்டதை 
நான் நேரடியாக அறிவேன். நெல்லை மாவட்டத்தைச் 
சேர்ந்தவன் என்பதாலும் பாரதியார் படித்த அதே 
இந்துக்கல்லூரியில் படித்தவன் என்பதாலும் 
பாரதி அன்பர்கள் மற்றும் பாரதி ஆய்வாளர்கள் 
பலருடன் பழகிய வாய்ப்புப் பெற்றவன் என்பதாலும்
என்னால் அறுதியிட்டுக் கூற இயலும்.
**
எனவே, ரேகையில் கனிகொள் என்பதன் பொருள் 
"பாடுபட்டு உண்" என்பதாகும். ஏய்த்துப் 
பிழைக்காதே, பிச்சை எடுத்து உண்ணாதே,
சோம்பித் திரியாதே என்பதாகும்.
**
இன்றும்கூட, எவனேனும் ஓர் இளைஞன் பிச்சை 
கேட்டால், கை கால் நல்லாத்தானே இருக்குது,
உழைத்துச் சாப்பிட வேண்டியதுதானே  என்று
கண்டிக்கிறோம் அல்லவா, இதைத்தான் பாரதியார் 
குறிப்பிடுகிறார்.
**
எனவே, ரேகையில் கனிகொள் என்ற பாரதி 
கூற்றின் பொருள் "பாடுபட்டு  உண்" என்பதாகும்.
இவ்வுரை மட்டுமே மெய்யுரை என்க.
---------------------------------------------------------------------------------                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக