வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு நாத்திகம்
(1915-2015) போலி நாத்திகமே!
-------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------
தற்காலத் தமிழனுக்கு, அதாவது ஒரு நூற்றாண்டு காலத்
தமிழனுக்கு, தத்துவ ஞானம் பற்றிய அறிவு மிகக் குறைவு.

கருத்துமுதல்வாதம் (idealism) என்று ஒரு தத்துவம். இது
கடவுள் உண்டு என்று சொல்லும் தத்துவம்.
பொருள்முதல்வாதம் (materialism) என்று ஒரு தத்துவம்.
இது கடவுள் இல்லை என்று சொல்லும் தத்துவம்.

மார்க்சியத்தில் ஒரு பகுதி பொருள்முதல்வாதம் ஆகும்.
அதாவது கடவுள் இல்லை என்று அடித்துக்கூறும்
தத்துவம் மார்க்சியம்.

மார்க்சியம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய தத்துவம்.
மார்க்சியம் தோன்றுவதற்கு முன்பே இந்தியாவிலும்
தமிழ்நாட்டிலும் பொருள்முதல்வாதம் வேர்கொண்டு
நின்றது வரலாறு.

என்றாலும், மரபார்ந்த தமிழ்ப் பொருள்முதல்வாதமோ,
அல்லது மார்க்சியம் கற்பித்த பொருள் முதல்வாதமோ     
தற்காலத் தமிழர்களுக்கு, அதாவது ஒரு நூற்றாண்டு
காலத் தமிழர்களுக்கு (1915-2015), கற்பிக்கப் படவில்லை.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி 1925இல் ஆரம்பிக்கப்
பட்டது. வெள்ளை ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் கட்சியை
முளையிலேயே கிள்ள முயன்றது. நாடு சுதந்திரம்
அடையும் வரை அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதே
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேலையாகிப் போனது.

பின்னர் நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில், வாக்கு வங்கி
அரசியலில், பொருள் முதல்வாதத்தைக் காவு கொடுத்தது
கம்யூனிஸ்ட் இயக்கம். 1969இல் நக்சல்பாரி இயக்கம்
தோன்றிய பிறகுதான், இந்தியாவின் முதல் புரட்சிகரக் கட்சியான  மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி
சித்தாந்தக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
என்றாலும் கொடிய அடக்குமுறை அதன் சித்தாந்தக்
கல்விக்கும் நாத்திகப் பிரச்சாரத்துக்கும் பெரும் தடையாக 
இருந்தது.

இவ்வாறு, நாத்திகத்தை, பொருள்முதல் வாதத்தைப்
பரப்பும் பொறுமையும் கடமையும் கொண்ட கம்யூனிஸ்ட்
இயக்கத்தால் அக்கடமையைச் செய்ய இயலவில்லை.
இது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குறை இல்லை.

தத்துவ ஞானம் பற்றிய அறிவோ பொருள்முதல்வாதக்
கல்வியோ இல்லாத, குட்டி முதலாளித்துவ இயக்கங்கள்
தமிழ்நாட்டில் ஒரு வறட்டு நாத்திகத்தை, போலி
நாத்திகத்தை மிகவும் நுனிப்புல் தன்மையுடனும்
பெருத்த ஆரவாரத்துடனும் அறிமுகப் படுத்தின.
நாத்திகம் குறித்த காத்திரமானதும் ஆழமானதுமான
சிந்தனைகளை, இந்தப் போலி நாத்திக இயக்கங்களால்
முன்வைக்க முடியவில்லை.

இதன் காரணமாக இவர்களின் போலி நாத்திகத்தால்
ஆத்திகத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. எனவே
தமிழ்நாடு சிறந்தவொரு ஆத்திக தேசமாக விளங்கி
வருகிறது.
----------------------------------------------------------------------------------------
தொடரும்
***********************************************************
 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக