நூறாண்டு காலம் வாழ்க!
-----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகச் சந்தையில்
சிதம்பரம் ஐயா அவர்களை முதன்முதலில் சந்தித்தேன்.
அறிவியல் ஒளி ஏட்டுக்குச் சந்தா சேகரித்துக் கொண்டு
இருந்தார். நான் சந்தா செலுத்தி இதழைப் பெற்றேன்.
அறிவியல் தரம் மிக்க இதழ் என்பதை விரைவிலேயே
உணர்ந்து மேலும் பல நண்பர்களை இதழின்
சந்தாதாரர்கள் ஆக்கினேன்.
அறிவியல் பயின்றோரை எழுத்தாளர்களாக ஆக்கிவிடும்
ரசவாத வித்தை பயின்றவர் சிதம்பரம் ஐயா அவர்கள்.
என்னை மிகவும் ஊக்குவித்து பல்வேறு கட்டுரைகளை
எழுத வைத்தவர் ஐயா அவர்கள். மேலும் எழுத்தாளர்களுக்கு
உரிய அங்கீகாரமும் ஊக்கமும் தந்து அவர்களை
மாண்புறுத்துவதிலும் பரிசுகள் வழங்கி
கௌரவிப்பதிலும் ஐயா அவர்களுக்கு நிகர் வேறு
எவருமில்லை.
அவருடன் பழகிய பிறகு, அறிவியல் ஒளி ஏட்டைத்
தவறாது வெளிக்கொணர்வதில் அவரின் கடும்
உழைப்பைப் பற்றி அறிய நேர்ந்தது. அசகாய சூரன்
என்ற தொடரை தமிழ் உலகம் நன்கறியும். சகாயம்
என்றால் உதவி என்று பொருள். அசகாயம் என்றால்
எவருடைய உதவியும் இன்றி என்று பொருள்.
"கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவன்" என்பார்
கம்பர். அசகாய சூரன் என்பதற்கு கம்பர் தரும்
நல்ல தமிழ்த் தொடர். அறிவியல் ஒளி ஏட்டை
வெளிக் கொணர்வதில் தமது சொந்த உழைப்பும்
முயற்சியும் தவிர வேறு எவரின் உதவியும் இன்றி,
அசகாய சூரனாகச் செயல்பட்டு வருபவர் சிதம்பரம் ஐயா.
அத்தனை கட்டுரைகளையும் மின்னச்சு செய்வது,
அச்சிடக் கொடுப்பது, அச்சிட்ட பின்னர் பிழை
திருத்துவது, அஞ்சலகத்துக்குச் சென்று அவற்றை
முகவரிதாரர்களுக்கு அனுப்புவது என்று இவை
அத்தனை வேலைகளையும் தனியொருவராகத்
தம் வலிய தோள்களில் சுமப்பது என்பதை
நினைத்துப் பார்க்கும் எவருக்கும் சிதம்பரம் ஐயா
அவர்களின் கடும் உழைப்பு மலைப்பைத் தரும்.
இந்த உழைப்புக்குத் துளியும் அவர் ஊதியம்
பெறுவதில்லை என்னும்போது, அவரது தொண்டு
மலையினும் மாணப் பெரிது என்பதை எவரும்
உணர முடியும்.
தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் பணிக்கு தங்க
நாற்கரச் சாலை எதுவும் இல்லை. தமிழில்
அறிவியலைச் சொல்லுவதும் எளிதல்ல.
செங்குத்தான மலை உச்சியில் ஏறுவது போன்ற
பணி இது. ஆள்வினையும் ஆன்ற அறிவும்
குறிக்கோளில் விடாப்பிடியாகப் பற்றி நிற்றலும்
சிதம்பரம் ஐயா அவர்களின் அறிவினில் உறைந்த
பண்புகளாய் அமைந்து விட்டன. இதனால்தான்
இன்று அறிவியல் ஒளி ஏடு பத்தாண்டுகள் என்னும்
சிறப்பு மிக்க மைல்கல்லைத் தாண்டி, நின்று
நிலைத்து விட்டது. தமிழ் இதழியல் உலகில்
நிலைபேறு உடையதாக அறிவியல் ஒளி
ஓங்கி உலகளந்து நிற்கிறது.
ஆய்வுக் கூடங்களையும் வகுப்பறைகளையும்
தாண்டி, எளிய மக்களிடம் அறிவியலைக் கொண்டு
சேர்ப்பதில் பெருந்த்தொண்டாற்றி வரும்
சிதம்பரம் ஐயா அவர்கள் பல்லாண்டு காலம்
நலமுடன் வாழ்ந்து அறிவியல் பணியாற்றிட
நியூட்டன் அறிவியல் மன்றம் சிந்தை மகிழ்ந்து
வாழ்த்துகிறது.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக