திங்கள், 25 ஏப்ரல், 2016

வைகோ போட்டியிடாமல் ஒதுங்கியது ஏன்?
உள்மர்மம் அம்பலம்!
----------------------------------------------------------------------------------
2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து
தோல்வியைத் தழுவியவர் வைகோ. அதற்கு முன்பு
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு
அதிலும் தோல்வியைத் தழுவியவர் வைகோ.

2014 தேர்தலில் தோல்வி அடைந்த வைகோ பாஜக
மத்தியத் தலைமையிடம் ராஜ்யசபா எம்.பி.
பதவி கோரினார். ராஜ்யசபாவை நினைத்துக்கூடப்
பார்க்க முடியாது என்று கறாராகத் தெரிவித்து விட்டது
பாஜக மத்தியத் தலைமை. இதனால் அதிருப்தி
அடைந்த வைகோ பாஜக கூட்டணியை விட்டு
விலகினார். இது வரலாறு.

தொகுதிப் பங்கீட்டின்போது, மிகவும் முரட்டுத்
தனமாக நடந்து கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குச்
செல்வாக்கு உள்ள கோவில்பட்டி தொகுதியை
அவர்களிடமிருந்து தட்டிப் பறித்தார் வைகோ.
இருக்கிற தொகுதிகளிலேயே அதுதான் தனக்கு
அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்று கணித்த
வைகோ அதில் போட்டியிட முடிவு செய்தார். 

வேட்புமனு தாக்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு
கோவில்பட்டி தொகுதியின்  களநிலவரத்தை
ஆராய்ந்த வைகோ அதிர்ச்சி அடைந்தார். களம்
முற்றிலும் தமக்குச் சாதகமாக இல்லை என்ற
உண்மை அவரை உறுத்தியது. எவ்வளவு போராடினாலும் மூன்றாவது இடம் மட்டுமே  
கிட்டும் என்ற யதார்த்தம் அவரைச் சுட்டது.

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு, இந்தத்
தொகுதியைக் குறிவைத்து முன்னமே காய் நகர்த்தி
வந்தார். தாம் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதுமே,
தொகுதியில் உள்ள தமது சுயசாதி நாயக்கர்,
நாயுடுகள் சமூகத்தின் செல்வாக்குள்ள பெரிய
மனிதர்களின் ஆதரவை உறுதி செய்து கொண்டார்.
நாயுடு சமூகத்தின் வாக்குகளை கிட்டத்தட்ட
ஏகபோகம் செய்து கொண்டார் என்றே கூறலாம்.

திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் தேவர் சமூகத்தவர்.
தமது சமூகத்தவரின் பெருவாரியான ஆதரவை உறுதி
செய்து கொள்வதில் அவரும் குறிப்பிடத்தக்க
வெற்றி அடைந்து விட்டார்.

தாமதமாகத் தொகுதிக்கு வந்த வைகோ, நாயுடு
சமூக ஆதரவை கோரியபோது,  ஏமாற்றமே
மிஞ்சியது. அதிமுகவின் கடம்பூர் ராஜு வை
ஆதரிப்பதாக முடிவு செய்து விட்டதாகவும், அந்த
முடிவை மாற்ற இயலாது என்றும் நாயுடு
சமூகத் தலைவர்கள் கறாராகக் கூறி இட்டனர்.

கடந்த காலங்களில் கோவில்பட்டி தொகுதியில் 
உள்ள நாயுடு சாதியைச் சேர்ந்த
எவர் ஒருவரையும் முன்னுக்கு வரவிடாமல்
தடுத்தவர் வைகோ என்ற கசப்பு வைகோ மீது
நாயுடு சமூகத்தவர்க்கு இருக்கிறது. எனவே
வைகோவுக்கு ஆதரவு தர அவரின் சொந்த
சமூகத்தவர் தயாராக இல்லை. அவர்களின்
ஆதரவு இல்லாமல் வைகோ வெற்றி பெறுவது
என்பது குதிரைக் கொம்பு. இதை உணர்ந்த
வைகோ தனது தலைவர் பிம்பத்தையும்
கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள
போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்.

வீம்புக்குப் போட்டியிட்டுத் தோற்றுப்போனால்,
அவரது தலைமை அதலபாதாளத்தில் சரிந்து
விடும். அதன் விளைவாக, மக்கள் ஆதரவு இல்லாத
வெறும் லெட்டர் பேடுத் தலைவர்களின் வரிசையில்
வைகோ இடம் பெறுவார்.

தமது பலவீனம் அம்பலப் பட்டுப் போகும்
நிலைமையை எப்படியேனும் தவிர்த்து விட
வேண்டும் என்று தீர்மானித்த வைகோ,
போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். 
இந்த முடிவால் அவர் மீதான நம்பகத் தன்மை
மேலும் சரியும். ஆனாலும் அவருக்கு வேறு
வழி என்ன இருக்கிறது?
****************************************************************

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக