புதன், 27 ஏப்ரல், 2016

கடவுள் இருக்கிறாரா?
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
இக்கேள்விக்கு நீண்ட காலமாக ஆன்மிகம் பதில்
அளித்துக் கொண்டு இருந்தது. பின்னர் தத்துவம்
பதிலளிக்க ஆரம்பித்தது. தத்துவமும் இதற்குப்
பதிலளிக்கும் அருகதையை இழந்தபின், தற்போது
அறிவியல் இக்கேள்விக்குப் பதில் அளித்து வருகிறது.

கடவுள் இருக்கிறார் என்றால் அவர் எங்கே இருக்கிறார்
என்று சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடவுளின் நிலையிடம் (position) என்ன? மூன்று அச்சுகளை
உடைய  ஒரு அச்சு முறையில் (x,y,z அச்சுகள்)
கடவுளின் இடத்தைக்  குறிப்பிட வேண்டும்.
இது கார்ட்டீஷியன் குறிப்புச் சட்டகம் (Cartesian coordinate system) எனப்படும்.

ஆனால் நவீன அறிவியலானது கார்ட்டீஷியன்
முறை மூலம் ஒரு பொருளை முழுவதுமாக
வர்ணிக்க முடியாது என்று சொல்கிறது. எனவே
உந்தம் (momentum) என்பதையும் கணக்கில் கொள்ள
வேண்டும் என்கிறது அறிவியல்.

இதனால், மேலும் மூன்று அச்சுகளைக் கணக்கில்
கொள்ள வேண்டியதாகிறது. ஆக, position அச்சுகள் 3,
momentum அச்சுகள் 3 என்று மொத்தம் 6 அச்சுகளை
உடைய ஒரு புதிய சட்டகத்தில்  கடவுளை
நிறுத்த வேண்டி உள்ளது. இந்த ஆறு அச்சுச்சட்டகம் 
phase space எனப்படுகிறது. இது இயக்கத்தில் உள்ள,
அதாவது இயங்குகிற சட்டகம் (dynamical system)
ஆகும். x,y,z  அச்சுகளை மட்டும் கொண்ட
கார்ட்டீஷியன் சட்டகம் இயங்காத சட்டகம்
(static system) ஆகும்.

என்றாலும், இயற்கையில் பொருட்களுக்கு மேலும்
சுதந்திர நிலைகள் (degrees of freedom) உண்டு என்று
அறிவியல் கருதுகிறது. phase space என்பது position,
velocity  ஆகிய இரண்டு சுதந்திர நிலைகளை
மட்டுமே குறிப்பிடுவதால், இந்த அச்சு முறையை
வைத்துக் கொண்டு ஒரு பொருளை முழுவதுமாக
விவரிக்க முடியாது என்று அறிவியல் கருதுகிறது.

சாத்தியமான அனைத்து சுதந்திர நிலைகளையும்
( n degrees of freedom) உள்ளடக்கிய,  இயற்கையை
முழுவதுமாக விவரிக்கக் கூடிய ஒரு அச்சு முறையை
(coordinate system)  உருவாக்க வேண்டியதன் தேவையை
அறிவியல் உணர்ந்துள்ளது.

நமது பிரபஞ்சம் முப்பரிமாணம் உடையது என்ற
பத்தாம் பசலித் தனமான கருத்தெல்லாம் இன்று
பஞ்சு பஞ்சாய்ப் பறந்து விட்டது. சார்பியல்
கோட்பாட்டில் காலம் என்பதும் ஒரு பரிமாணம்
என்றும் இடமும் காலமும் பிரிக்க முடியாமல்
ஒன்றிணைந்து இருப்பதாகவும் ஐன்ஸ்டீன்
கூறினார்.

அதன் பின்னர் வந்த இழைக் கொள்கை (sting theory)
இப்பிரபஞ்சம் மேலும் பல பரிமாணங்களைக்
கொண்டது என்று கூறியது. இறுதியாக M Theoryயில்
பதினோரு பரிமாணங்கள் சுட்டப் படுகிறது. 

எனவே n degrees of freedom உடைய ஒரு குறிப்புச்
சட்டகத்தில் (frame of reference) கடவுளைக் கொண்டு
வந்து நிறுத்த வேண்டும். இது ஒருநாளும்
சாத்தியப் படாத ஒன்று. ஏனெனில், இதுவரை
மிகச் சாதாரணமான, பள்ளி மாணவன் கூட
நன்கறிந்த கார்த்டீஷியன் சட்டகத்தில்
ஏதேனும் ஒரு அச்சில் கூட, கடவுளைக் கொண்டு
வந்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் கடவுள்
இல்லை. இருந்தால்தானே கொண்டு வந்து
நிறுத்த முடியும்!
*******************************************************************     


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக