வெள்ளி, 15 ஏப்ரல், 2016

(2) தையா சித்திரையா? புத்தாண்டு சர்ச்சை!
நீள்வட்டப் பாதையும் வட்டப்பாதையும்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
பூமி சுற்றுகிறது என்கிறோம். பூமியின் சுழற்சியில் 
இரண்டு வகை உண்டு. ஒன்று: பூமி தன்னைத்தானே 
சுற்றுவது. இரண்டு: அவ்வாறு சுற்றிக் கொண்டே 
சூரியனையும் சுற்றி வருவது.

தன்னைத்தானே சுற்றுவதை ஆங்கிலத்தில்
ROTATION அல்லது SPIN என்கிறோம். சூரியனைச் 
சுற்றி வருவதை REVOLUTION என்கிறோம். தமிழில்
தன்னைத்தானே சுற்றினாலும் சரி,
அடுத்தவனைச் சுற்றினாலும் சரி, தலை 
சுற்றினாலும் சரி எல்லாவற்றுக்கும் ஒரே சொல் 
"சுற்றுதல்".கல்யாணத்துக்கும்  கருமாதிக்கும் 
ஒரே சொல்தான்!

பம்பரம் சுற்றுவதைப் பாருங்கள். இப்படித்தான் 
பூமியும் சுற்றுகிறது. பம்பரம் ஒரு அச்சில் சுற்றுகிறது. 
அது போல பூமியும் ஒரு அச்சில் சுற்றுகிறது. 
ஆனாலும் பம்பரம் சுற்றுவதற்கும் பூமி சுற்றுவதற்கும் 
ஒரு வித்தியாசம் இருக்கிறது.

பம்பரத்தின் அச்சு தரைக்குச் செங்குத்தாக 
இருக்கிறது. பூமியின் அச்சு செங்குத்தாக 
இல்லை. 23.5 டிகிரி சாய்வாக இருக்கிறது. 
இது axial tilt எனப்படுகிறது. இதனால்தான்
பருவ காலங்கள் ஏற்படுகின்றன.

இப்போது இரண்டு கேள்விகள். 
1) பூமி தன்னைத் தானே சுற்றுகிறதே, 
என்ன வேகத்தில் சுற்றுகிறது?
2) பூமி சூரியனைச் சுற்றுகிறதே, என்ன வேகத்தில்
சுற்றுகிறது?

விடை தெரியவில்லையா? அதனால் என்ன? 
யோசித்து ஒரு விடையைக் கூற இயலுமா? எவ்வளவு 
வேகம் என்று கற்பனை செய்து, அனுமானித்து 
ஏதேனும் ஒரு விடைசொல்வது நல்லது.

நிற்க. பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 
ஒரு வினாடிக்கு அரை கிலோமீட்டர். (0.5 kmps). 
அதாவது மணிக்கு 1800 கி.மீ(தோரயமாக). 
இது பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள வேகம்.
துருவப் பகுதிகளில் இதே வேகம் இருக்குமா? 
நிச்சயமாக இருக்க முடியாது. துருவப் பகுதியில் 
வேகம் பூஜ்யத்தை நோக்கிச் செல்லும் (approaches zero).

பூமி சூரியனைச் சுற்றும் வேகம் என்ன?  
வினாடிக்கு 250 கி.மீ. அதாவது மணிக்கு 
ஒரு லட்சம் கிலோ மீட்டர் (தோராயமாக).
பூமியானது சூரியனை நெருங்கும்போது 
அதிகமான வேகத்தில் சுற்றும்; சூரியனை 
விட்டுத் தள்ளி தொலைவில் இருக்கும்போது 
மெதுவாகச் சுற்றும். ஏன் இப்படி? (வாசகர்கள்
விடை எழுதலாம்)

பூமியானது சூரியனைச் சுற்றி வரும் பாதை 
வட்டப்பாதையாக (CIRCULAR ORBIT) இருந்தால், 
வேகமாகவும் மெதுவாகவும் சுற்ற வேண்டிய 
அவசியம் பூமிக்கு இருந்திருக்காது. ஆனால்
சற்றேறக்குறைய ஒரு நீள்வட்டப் பாதையில்தான் 
(ELLIPTICAL ORBIT) பூமி சூரியனைச் சுற்றுகிறது. 

நீள்வட்டப்பாதை என்றாலும் அது முழுநிறைவான
நீள்வட்டப்பாதை அல்ல. (Not a perfect elliptical orbit). 
வட்டத்தில் இருந்து கொஞ்சமாக விலகிய நீள்வட்டம். 
Ellipse என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் 
eccentricity என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

நமது பூமியின் elliptical orbitஐக் கருதினால், அந்த 
ellipseஇன் eccentricity 0.02 (படு தோராயமாக).
அதாவது வெறும் 2 சதம்தான் இந்த eccentricity. அதாவது
மிக மெலிதான நீள்வட்டம் என்றோ  வட்டத்தில் இருந்து
மிகக் கொஞ்சமாக விலகிய நீள்வட்டம் என்றோ புரிந்து
கொள்ளலாம். 

வட்டத்துக்கு 360 டிகிரி இருப்பதால், ஓர் ஆண்டுக்கு 
360 நாட்கள்தானே  இருக்க வேண்டும், 365 எப்படி 
வந்தது என்பது போன்ற கேள்விகள், ellipse பற்றித் 
தெரிந்தவுடன் ஓடிப் போகின்றன என்பது 
இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.

மேலும் ஜெர்மானிய அறிஞர் கெப்ளர் (Kepler) கூறிய
Kepler's laws of planetary motion பற்றியும் அறிந்திருக்க 
வேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு பற்றிய கட்டுரைக்கு இவையெல்லாம்
தெரிந்து இருக்க வேண்டுமா என்று சிலர் கேள்வி
எழுப்பலாம். ஆம், கண்டிப்பாக.

தமிழ்நாட்டில் அரங்கின்றி வட்டாடுதல் மிகவும் அதிகம்.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

தமிழ்ச் சமூகத்தில் எழுதப்படும் மொத்த 
எழுத்துகளில் காத்திரமற்ற எழுத்துகளே 99 சதம். 
அதையே படித்துப் படித்து தமிழ் வாசகர்களின் 
வாசகத்தன்மையும் பெரிதும் குன்றிப் போய் உள்ளது 
(dwarfened). இச்சூழலில் காத்திரமான
அதுவும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை 
மக்களின் மூளைக்குள் கொண்டு போய்ச் 
சேர்ப்பது பகீரத முயற்சியே.

தினத்தந்தி கன்னித்தீவு படிப்பது போலவோ, 
ராஜேஷ்குமாரின் மம நாவல்கள் படிப்பது போலவோ, மிகக் குறைந்த
முயற்சியில் இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.
இதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------
தொடரும்
-------------------------------------------------------------------------------------------            
    


   



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக