திங்கள், 11 ஏப்ரல், 2016

உனக்கான என் வானவில்
------------------------------------------------------ 


வீரை பி இளஞ்சேட்சென்னி 

---------------------------------------------------
வனாந்தரங்களையும்
மனித சஞ்சாரமற்ற பிரதேசங்களையும்
முதிய பாலைவனங்களையும் கடந்து
இந்தப் பிரபஞ்சத்தின் விளிம்பு வரை
பயணம் செய்கிறேன்.

செல்லும் இடமெல்லாம்
பூமியின் சகல ஜீவராசிகளிடத்தும்
உன் மீதான என் காதலின் ஆழத்தை
விரித்துச் சொல்கிறேன்
ஓர் அப்போஸ்தலனைப் போல.

பீடபூமிகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
உன் பெயரைச் செதுக்குகிறேன்.
அருவிகளையும் சுனைகளையும்
உன் மொழியால் நிரப்புகிறேன்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களையும்
இந்து குஷ் மலை முகடுகளையும்
தழுவிச் செல்லும் காற்றின் ஈரப்பதத்தில்
உன் புன்னகையைச் சேமித்து வைக்கிறேன்.

அய்ரோப்பாவின் தானிய வயல்களில்
கியூபாவின் கரும்புக் கொல்லைகளில்
மத்திய ஆசியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகளில்
எஸ்கிமோக்களின் துந்திரப்  பிரதேசங்களில்
பூமி நெடுகிலும்
உன் அழகின் மகரந்தத்தைச்
சிந்திச் செல்கிறேன்.

நைட்டிங்கேல்களும் கக்கூ பறவைகளும்
உன் குரலின் இனிமையைச் சுவீகரிக்கின்றன.
மலைத் தேனீக்கள் உன் பெயரை
ரீங்கரிக்கின்றன.

பிரியமானவளே,
இந்தப் பிரபஞ்சத்தின் ஆழ அகலங்களில்
நீக்கமற உன்னை நிறைத்தபின்
வேர்ட்ஸ் வொர்த்தின்
அறுவடை நங்கையிடம் பெற்ற
கோதுமைக் கதிர்களுடனும்
தேம்ஸ் நதிக்கரையில் பறித்த
டாஃபடில் பூக்களுடனும்
உன் முற்றம் வந்து காத்திருக்கிறேன்.

உன் அங்கீகரிப்பின்
மெல்லிய தலையசைப்பில்
என்னுள் வசந்தங்கள் பிரவகிக்கும்.


---------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக