திங்கள், 11 ஏப்ரல், 2016

தகிப்பு
-----------  
அபூர்வ வானியல் நிகழ்வுகள் போல
கவனிப்புக்கு உரியவை 
நம் சந்திப்புகள்.

வாழ்தலின் உந்துதலை 
உன்னிடமிருந்து பெறும் 
அத தேவ தருணங்களில் 
நான் உயிர்த்தெழுகிறேன்.

ஓரங்குலமே மீந்த நெருக்கத்தில் 
கிட்டும் உன் அண்மை
என் வனாந்திரத்தில் 
பருவமழையைப் பொழிவிக்கிறது 
கரடு தட்டிப்போன 
என் நிலத்து மண்ணைக் குழைவிக்கிறது 
என் தோட்டத்தின் 
கத்தரிப் பூக்கள் 
சூல் கொள்கின்றன.

நான் காயகல்பம் அருந்திய 
கிறக்கம் கொள்கிறேன்.

என்றாலும் 
பேசப்பட வேண்டிய விஷயம் 
பேசப்படாமலேயே 
நம் சந்திப்பு முடிந்து விடுகிறது.

நீ விடைபெற்றுச் சென்றபின் 
வெறுமையின் பெருவெளியில் 
சிறைப்படுகிறேன். 

பிரியமானவளே,
ஒரு ஒற்றை மழைததுளிக்காய்
உயிர் உருகக் காத்திருக்கும் 
சாதகப் பறவையைப் போல 
உன் இதழ் உதிர்க்கும் 
ஒரு ஒற்றைச் சொல்லுக்காக 
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் 
அடுத்த சந்திப்பை நோக்கி.

....... வீரை பி இளஞ்சேட்சென்னி........
**************************************************** 
பொய்யும் பொய் சார்ந்த பொழுதும் 
---------------------------------------------------------- 

வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------
  
இத்தகைய விழாக்களில் 
உண்மை பேசப்படுவதில்லை 
எப்போதும் எவராலும்
மரபு பேணி 

உண்மை வெப்பம் நிறைந்தது  
அசவுகரியமானது  
சூழலை கனம்  செய்வது  என்பதாலும்.   

மாற்றாக மாயப்பொய்கள் 
வாரி இறைக்கப் படுகின்றன 
சூழலை நெகிழ்வித்து விடும் என்பதால் 
புரைதீர்ந்த நன்மை 
பயக்கவும் கூடும் ஆதலால்.

பணி  நீத்தவருக்கு
விடை கொடுக்கும் விழாவில் 
தத்துவமும் சித்தாந்தமும் 
தேவையற்றவை என்கிறார்கள் 
குட்டி முதலாளித்துவ 
இடதுசாரித் தலைவர்கள்.

சந்தனம் சவ்வாது  சால்வை பரிசு 
கூடவே சரிகை வேய்ந்த பொய்கள் 
போதுமே என்கிறார்கள்.

விழா முடிந்து 
வீட்டு வாசலில் கார் நிற்க 
விடைபெற்றுக்  கொண்டு 
பணி நீத்தவர் 
உள்ளே நுழையும் 
அந்த பிரும்ம முகூர்த்தத்தில்    
அவரை வரவேற்கும் உண்மையை 
அவர் எதிர்கொள்ள வேண்டியவர் ஆகிறார்.

************************************************************************

வழுவமைதி

-------------------------------- ------------------- ------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------------- 
பிம்பங்கள் திரையிட்டு மறைக்கும்
என் அந்தரங்கத்துள்
உன் தொடுகை குறித்த வேட்கை
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஜலதரங்கம் வெட்க
நடத்தலின் பொற்கணங்களில்
உன் கொலுசுகள் சிந்திய மகரந்தம்
என் உயிரின் பாத்திகளில்
வசந்தத்தைத் துளிர்விக்கிறது.

நிசப்தத்தை ஆராதிக்கும்
பின் ஜாமப் பொழுதுகளில்
உன்னை அடையப் பெறாத
இழப்பின் பிரும்மாண்டம்
மலையாய்க் கனக்கிறது.

தோழி
நமக்குள் மெல்லென அரும்பிய புது உறவு
அறம் மீறியது அல்ல
இருவர் நெஞ்சு நேர்கையில் 

அறம் குன்றுவதில்லை.

போஜராஜனின் மீரா
கண்ணனிடம் தன்னை இழந்ததில்
அறப்பிறழ்வைக் கண்டிலது சமூகம்.

நித்திய கல்யாணியாய்
தன்னைப்  புதுப்பிக்கும் சமூகத்தின்
பரிணாம மலர்ச்சியில்  
புதிய வகை உறவுகள்
வாழ்வுரிமை பெறும்

கூடுவிட்டுக் கூடு பாய்தல் தேவையற்று. 

ஆதலினால் தோழி, 
தேர்ச்சிகொள்
ஊமை வெயில் விலகட்டும்.
***************************************
பின்குறிப்பு: (பிரசுரத்திற்கு அல்ல)
----------------- 
தமிழ் இலக்கணத்தில் வழுவமைதி என்று ஒன்று உண்டு.
வழு என்பது குற்றம்; வழு அமைதி என்பது குற்றத்தைப் 
பொறுத்து ஏற்றுக் கொள்வது என்று பொருள் தரும்.
"சீக்கிரம் வா" என்று அம்மா அழைக்கும்போது,
'இதோ, வந்துவிட்டேன், அம்மா" என்று குழந்தை 
பதில் தரும். இலக்கணப்படி, இது வழு (குற்றம்).
"வந்து விடுவேன்" என்று எதிர்காலத்தில் கூற 
வேண்டும்.அதுதான் சரி. ஆனாலும், 'வந்து விட்டேன்"
என்று இறந்த காலத்தில் கூறுவதை வழு அமைதி யாகக் கொண்டு அனுமதிக்கிறது தமிழ் இலக்கணம்.

கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பது விவாகரத்தைக் குறிக்கிறது.
*******************************************************************
பிருஷ்டமும் உண்டுகொல்!
---------------------------------------------------- 

வீரை. பி. இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------  
தோழி!

ஒளி விலகும் அந்தியில்
புலால் நாறும்
கடற்கரையின் மணற்பரப்பில்
நீயும் நானும்
ஒரு தீவிர விவாதத்தில்.

கருமமே கண்ணாக
உனது தேற்றங்களை
நிரல்பட நீ மொழிகிறாய்.

சில நியூட்டன்கள் விசையைச் செலுத்தி
உப்பங்காற்று
உன் முந்தானையை விலக்க
அபினிக் கனிகளின் புலப்பாட்டில்
நான் கிளர்ச்சியுறுகிறேன்.

உன் கறுப்பு நிறக் கச்சின்
வார் வழியே
வாத்சாயனர் வந்திறங்க
மறைகிறார்கள்
ஐன்ஸ்டினும் ஹெய்சன்பெர்க்கும்.

உன் பிருஷ்டத்தில் கைவைத்து
ஒட்டியிருக்கும் மணல் துகளைத்
தட்டிவிட
வேட்கை கொள்கிறேன்.

என்னை
ஒரு கனவானாக அங்கீகரித்து
ஆடை திருத்தாத
உன் அமைதியின் உந்துதலால்
மனதை மடைமாற்றி
ஒரு லேசர் கற்றை போல்
பாடு பொருளில்
கவனம் குவிகிறேன்.

என்றாலும்
என் மனவலிமைக்கு
நேர்ந்த பங்கம் குறித்து
நாணவில்லை நான்.

ஒவ்வொரு மார்புக்கும்
ஒரு பிருஷ்டம்
உண்டு என்பதால்.

----------------------------------------------------------
அழியாச் சித்திரம் 
--------------------------------------------------------------  
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------- 
எந்த சைத்ரிகனும் 
இதுவரை வரைந்திராத 
கடவுளின் தூரிகை கூடத் 
தீட்டியிராத 
உயிரின் நிறங்களைக்
குழைத்துப் பூசிய 
யுகயுகாந்திரங்களின் 
காதலை சுவீகரித்துக் கொண்ட 
அதியற்புதமான ஒரு சித்திரம் 
என் நெஞ்சில் துலங்குகிறது

கன்னிமை  மாறாமல்  
பச்சைப் பசுமையாய்.

காலம் தன ஆற்றல் முழுவதும் செலவிட்டும் 
இருளின் ஒரு துகளைக் கூட 
அச்சித்திரத்துள் 
செலுத்த முடியவில்லை.

கொந்தளிப்புகள் சூறாவளிகள் 
புதைச் சுழல்களின் உள்ளிழுப்புகள் 
மனக்குழப்பத்தின் புகை மண்டுதல்கள் 
முடிவற்ற சோகத்தின் உப்பங்காற்று வீச்சு 
யாவும் முயன்று தோற்க
உலர்த்தவோ  நனைக்கவோ 
எரிக்கவோ விடாமல் 
அச்சித்திரத்தை 
நான் காத்து வருகிறேன்.

திசைகளின் திரண்ட துயர்கள் 
என்னுள் இடியாய் இறங்க 
வதைகளும் ரணங்களும் 
வலி பொறுக்காத அலறல்களும் 
விசும்பல்களும் தேம்பல்களும் 
என்னை மேவ 
மரணப் பள்ளத்தாக்கின் 
இருள் முற்றத்தில் 
 மூர்ச்சித்துக் கிடக்கும் 
என் ஜீவனைத் தேற்றி 
அமிழ்து புகட்டி 
உயிர் துளிர்க்கச் செய்கிறது 
அச் சித்திரம்.

சைனியங்களின் அரசர்கள் 
வெஞ்சினத்துடன் எறியும் அஸ்திரங்கள்
என் மேனியெங்கும் துளைத்து 
வெங்குருதி புனலாய்ப் பொங்க 
மண் வீழ்ந்து மடிந்தாலும் 
யார் எவராலும் 
என்னிடமிருந்து பறிக்க முடியாத 
அந்த அழியாச் சித்திரம் 
பிரியமானவளே ,
உன் முகம்தான்.

***************************
யாப்பென மொழிப!
---------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------------

ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளை
வாகாய் நுழைப்பதாலும்

தீய்ந்து போன சமஸ்கிருதச் சொற்களைத்
திணிப்பதாலும்

இடக்கர் அடக்கலை இகழ்ந்து
கத்தி பாய்ச்சுவதாலும்

கருப்பொருள்
மனப்பிறழ்ச்சி யுற்றவனின் தற்கூற்றாய்
எதுவாயினும்
கர மைதுனம் முதல்
ஆசனப்புழைப் புணர்ச்சி வரை

தலைப்பு
அதீதத்தினும் அதீதமாக
‘யவனப் போர் வீரனின் மதுக்குடுவையும்
முதுமக்கள் தாழியின் நாளமில்லாச் சுரப்பிகளும்’
என்பது போலும்

பாயாசத்து முந்திரியாய்
அல்குலும் நகிலும்

எனினும்
புரியாமையின் புகைமூட்டம்
கவிப்பதில்தான்
கனம் கொள்ளும் கவிதை.

--------------------------------------------------------------------------------------





கனவுகளின் நீர்க்கோலம்
---------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------
------------------------------------------
என் கரம் பற்றி நடக்கிறாய்
கடைத்தெரு எங்கும்.

உரிமையுடன்
கடிந்து கொள்கிறாய்.

அவ்வப்போது என் தோளில்
பூங்கரம் பதிக்கிறாய்.

கட்டளை இடுகிறாய்
எனது சேவகத்தில்
பெருமிதம் பொங்குகிறாய்.

பிச்சிப்பூ இரண்டு முழம்
வாங்க எத்தனிக்கையில்
பைத்தியமா உங்களுக்கு
ஒரு முழம் போதும் என்கிறாய்.

கச்சு
விளிம்புகளில் வெளித்தெரியக் கண்டு
ரவிக்கையை
கீழே இழுத்து விடுமாறு
கிட்டத்தில் வந்து கிசுகிசுக்கிறாய்.

பிற ஆடவரின் பொறாமை
என் மீது படர
தூக்கலான அந்நியோன்னியத்துடன்
தொழிற்படுகிறாய்.

இவ்வளவு கொடுத்து வைத்தவனா நான்!              
வியக்கிறேன்.

ஒரு மின்னல் பொழுதில்
குரூரமான யதார்த்தம்
யாவற்றையும் துடைத்தெறிய
கனவு கலைகிறேன்.

**************************************
அந்திமாலை இழந்தோம்! 
--------------------------------------------------------------- 

வீரை  பி. இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------------------------------------------   

வாய்க்காங் கரை வீட்டுச் சிறுவர்கள் 
வாசமடக்கி மரத்தடியில் 
முத்துச் செதுக்கி  
விளையாடுகிறார்கள் 
முத்துக்களை இழந்த சிறுவன் 
கடன் கேட்டும்  
சேக்காளி தராததால் 
ஆவுடையம்மை அக்காவிடம் போய்
முத்து வாங்கி வந்து விளையாடுகிறான். 

பூவரச மரத்தை ஒட்டி 
சமையாத பிள்ளைகள் 
பாண்டி விளையாடுகிறார்கள் 
கால் இடறாத வண்ணம்
பாவாடையை லேசாக 
உயர்த்திச் சொருகிக்கொண்டு 
கட்டம் கட்டமாகத் தாவுகையில் 
எழும்பும் கொலுசுச் சத்தம் 
மனசை வருடுகிறது. 

முடுக்கடி வீட்டு நடையில் 
கொஞ்சம் பெரிய பையன்கள் 
கள்ளன்-போலீசு 
விளையாடுகிறார்கள் 
ஒளிந்து கொள்ளச் சவுகரியமாக 
நடுமுடுக்கு இருப்பதால் 
கள்ளன்களாக இருப்பதற்கே 
எப்போதும் பையன்களிடம் போட்டி. 

அதுக்கு அங்கிட்டு 
அழிப்போட்ட வீட்டுத் தாழ்வாரத்தில் 
நாலு பேர் சதுரமாக உட்கார்ந்து 
தாயம் விளையாடுகிறார்கள் 
சொக்கலால் பீடி
யானை சிகரெட்
அங்குவிலாஸ் தடையுடன்.  


லேசாக இருட்டத் தொடங்கியதும் 
இடுப்பில் குடத்துடன் 
தண்ணீர் எடுக்க வரும் 
சமைந்த பெண்களை 
எதிர்பார்த்து நிற்கும் 
இளவட்டங்களின் காத்திருப்புக்களால் 
கர்வம் கொள்கிறது அந்திமாலை. 

தெரு முழுவதும் 
மனிதத்தின் உயிர்ப்பும் 
அந்த உயிர்ப்பின் வாசத்தைச் 
சுமந்து வரும் தென்றலும் 
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எமக்கு உரியனவாய் இருந்தன. 

இன்று 
விருட்சங்கள் வீழ்ந்த 
வெற்று நிலப்பரப்பாய்
கைம்பெண் கோலத்தில் 
எங்கள் தெரு 
பாடாண்  திணையில்
கையறுநிலைத் துறையில் அமைந்த 
என் பாடலைப் பெற்றுக் கொண்டு.
********************************************         
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக